Doctor Vikatan: மாத்திரை, மருந்துகள் இல்லாமல் சர்க்கரைநோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மருத்துவர் சஃபி.
இப்படிக் கேள்வி கேட்பவர்கள் முதலில் சர்க்கரைநோய் என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீரிழிவு அல்லது சர்க்கரைநோய் என்பது வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற பிரச்னையல்ல. நம் உடலியக்கத்தில் வரக்கூடிய ஒரு மாறுபாடு.
உதாரணத்துக்கு, கண்களில் கண்ணீர், வாயில் உமிழ்நீர், சருமத்தில் வியர்வை எல்லாம் சுரப்பது இயல்பானது. திடீரென ஒருநாள் இவையெல்லாம் வறண்டுபோனால் எப்படியிருக்கும்? அப்படித்தான் கணையம் என்ற உறுப்பில் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரந்துகொண்டே இருக்கிறது. அப்படிச் சுரக்கும் இன்சுலின், திடீரென ஒருநாள் குறைந்தாலோ அல்லது நின்றுபோனாலோ அதைத் தான் நீரிழிவு என்கிறோம். சர்க்கரைநோய்க்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக நம்மூரில் நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல், அதற்கான மருத்துவத்தை எளிமையாகத் தேடும் நிலைதான் இருக்கிறது. நோய்க்கான காரணம் புரிந்துவிட்டால் அது ஏற்படுத்தும் மோசமான விளைவுகளில் இருந்து தப்ப முடியும்.
அந்த வகையில் உங்களுக்கு நீரிழிவு வந்திருக்கிறது என்றால் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, மருத்துவரை அணுகி, உங்களுக்கு ஏற்ற சிகிச்சை என அவர் பரிந்துரைக்கும் விஷயங்களை முறையாகத் தொடர வேண்டும்.
மருந்து, மாத்திரைகளே இல்லாமல் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால், அது சம்பந்தப்பட்ட நபரின் நோய் வீரியத்தைப் பொறுத்தது என்றுதான் பதில் சொல்ல முடியும். அது உங்களைப் பரிசோதிக்கும் மருத்துவரால் மட்டுமே முடிவுசெய்யப்படும்.
அதைத் தவிர்த்து சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்றோ, இன்சுலினோ, மருந்து, மாத்திரைகளோ தேவையே இல்லை என்றோ யாரோ சொல்வதையும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளையும் நம்பி, அப்படியே அவற்றைப் பின்பற்ற நினைப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
ஏனென்றால் சர்க்கரைநோய் என்பது உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய ஒன்று. ஏதேனும் ஓர் உறுப்பு சேதமடைந்தாலும் அதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே எந்தப் பிரச்னையானாலும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றுங்கள். சர்க்கரைநோய் விஷயத்தில், அது குறித்து நிபுணத்துவம் பெற்ற மருத்துவரைக் கலந்தாலோசித்து முறையான சிகிச்சையைப் பின்பற்றுங்கள்.
மருந்தில்லா மருத்துவம், உணவே மருந்து என்பதையெல்லாம் நம்பி இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/food/healthy/doctor-vikatan-can-diabetes-be-controlled-without-pills
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக