Ad

வியாழன், 8 செப்டம்பர், 2022

`நீட் தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்ன?!’ - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன விளக்கம்

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதியில் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்னைகளை, மாவட்ட ஆட்சியர்களிடம் மனுவாக வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பிரச்னைகளை அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கினார்.

கலெக்டரிடம் அமைச்சர் மனு கொடுத்த போது

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``இலவசத் திட்டங்கள் என்பது சமூக நீதிக்கு தொடர்புடையது. சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்கவே இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் இந்த கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது. இன்றைக்கு அதைத் தாண்டி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்ட காலத்தை தற்போது தான் உடைத்துள்ளோம். மாணவர்கள் தற்போது தான் பள்ளி சூழலுக்கு மீண்டும் தயாராகி வருகிறார்கள். ஆகவே, நீட் தேர்ச்சி சதவிகிதம் குறித்து இந்தக் காரணத்தையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வே கூடாது என்பதற்காக நாம் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தாலும், அது வரைக்கும் நம்முடைய குழந்தைகளுக்கு அதற்கான பயிற்சியைக் கொடுக்க வேண்டியது பள்ளிக்கல்வித் துறையின் கடமை. மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அதேநேரத்தில் தன்னம்பிக்கையை மாணவர்கள் இழந்துவிட கூடாது. மாணவர்கள் தவறாக முடிவெடுப்பது சம்பந்தமான செய்திகளை பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. நீட் தேர்வு ரிசல்ட் வெளியான அன்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதைப் போல இருந்தேன். குழந்தைகளுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையை கொடுத்தாலும், ஏதாவது ஒரு தவறான முடிவினை எடுத்து விடுவார்களோ என பயமாக இருக்கிறது. தயவுசெய்து மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற செயலை செய்யக்கூடாது. அது பெற்றோருக்கும் சமூகத்தில் தேவையில்லாத கவலையில் ஆழ்த்திவிடும்.

அமைச்சர் அன்பில்

நீட் தேர்வு விலக்கு குறித்து சட்டமன்றத்தில் கட்சி வேறுபாட்டைக் கடந்து தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியிருக்கிறோம். சமீபத்தில் கேரளாவிற்கு வந்த அமித் ஷாவிடம் கூட நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்தியிருக்கிறோம். நாடாளுமன்றம் கூடும் போதெல்லாம், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பேசி வருகின்றனர். நல்ல தீர்வு வருமென்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பள்ளி வளாகத்தைச் சுற்றி போதைப் பொருள்கள் கிடைக்காமல் இருக்க தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அப்படி யாரேனும் போதைப் பொருட்களை விற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-anbil-mahesh-poyyamozhi-spoke-about-neet-exam-results

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக