இந்தியாவே எதிர்பார்த்த அந்த ஒரு நொடி, ஒரு வழியாகச் சாத்தியப்பட்டுவிட்டது. தனது 71வது சதத்திற்காக நீண்ட நெடும் தவமிருந்த கோலி, ஃபார்ம் அவுட், நிலைப்புத்தன்மை இல்லை போன்ற பல விமர்சனங்களைக் கடந்து, கேப்டன்ஷிப் சர்ச்சைகள் உண்டாக்கிய மன அழுத்தங்களை வென்று, 'நாயகன் மீண்டும் வர்றார்' என்று அறிவித்துவிட்டார். இந்த டெஸ்டில் வரும், இந்த ஒருநாள் தொடரில் வரும் என்று எதிர்பார்த்திருந்த அவரின் சதம் வந்திருப்பது ஒரு டி20 போட்டியில்! அதுவும் ஆசியக் கோப்பை தொடரில் அனைத்தையும் இழந்து ஆறுதல் பரிசுக்காக இந்தியா ஆப்கானிஸ்தானுடன் ஆடிய போட்டியில் கோலி மீண்டு வந்திருப்பது கோப்பையை வெல்லாத குறையைப் போக்கியிருக்கிறது. ஏனென்றால் விராட் கோலியின் ஃபார்ம் அடுத்துவரும் டி20 உலகக் கோப்பைக்கு அவ்வளவு முக்கியமானது.
கோலியின் சதத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பிரிவினை ஏதுமின்றி உற்சாகமாகக் கொண்டாடிவரும் இந்த தருணத்தில், கோலி இந்த சதம், இந்த இன்னிங்ஸ் குறித்து என்ன நினைத்தார், என்னவெல்லாம் உணர்ந்தார்? நேற்று சதமடித்த பின்னரும், போட்டியில் வென்ற பின்னரும் விராட் கோலி பேசியவை என்ன?
இந்தியாவின் முதல் பேட்டிங் முடிந்து சதமடித்த கையோடு விராட் கோலி பேசியவை...
"இன்னும் சில நாள்களில் எனக்கு 34 வயதாகப் போகிறது. கடைசி இரண்டரை ஆண்டுகள் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன. இந்த நீண்ட காலத்தின் வெளிப்பாடுதான் என் கோபம். எனக்குள் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. பல விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டிருந்ததை நான் அறிவேன். மோதிரத்தை முத்தமிட்டதைப் பார்த்திருப்பீர்கள். நான் இங்கு நிற்பதற்கு ஒரே காரணம், அனுஷ்கா. இந்தச் சதத்தை நான் அனுஷ்காவிற்கும் என் குழந்தை வமிக்காவிற்கும் அர்ப்பணிக்கிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்த போது புதிதாக உணர்ந்தேன். எவ்வளவு சோர்ந்து போயிருந்தேன் என்பதை இந்த ஆட்டம் உணரச் செய்தது. கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்த நாள்கள்தான் கிரிக்கெட்டை மீண்டும் ரசிக்க வைத்துள்ளது!"
ஆட்டம் முடிந்த பின்னர், அதாவது இந்தியா வெற்றி பெற்ற பிறகு, மேட்ச் பிரசன்டேஷனில் விராட் கோலி பேசியது...
"நான் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்த நாள்கள்தான் எனக்கு நிறைய விஷயங்களைப் புரிய வைத்தன. நான் முன்னர் பேசும்போது அனுஷ்கா பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஏனென்றால் சில மாதங்களாய் என்னுடைய மறுபக்கத்தை என்னோடு இருந்து பார்த்தவர் அவர். அனுஷ்காதான் என்னுடைய அடுத்த கட்ட நகர்விற்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். அதுதான் இன்று என்னை நிம்மதியுடன் இருக்கும் மனிதனாக உருவாக்கியுள்ளது.
நான் யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்காக விளையாடவில்லை. நான் கடவுள் எனக்கு அளித்திருக்கும் திறமையை உணர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினேன். கடந்த சில போட்டிகளாக நான் விளையாடி வந்த விதத்தைப் பின்தொடர்ந்து இன்று என் முழு திறனை வெளிப்படுத்தினேன். எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால் 60 ரன்களில் ஆட்டமிழப்பது தோல்விகளாகப் பார்க்கப்பட்டதுதான். அது நான் சிறப்பாக விளையாடினாலும் பெரிதாக அணிக்கு ரன்கள் அடிக்காதது போன்ற ஓர் உணர்வைத் தந்தது. நான் யாரையும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. முன்பு சொன்னது போல் கடவுள் எனக்கு நிறையச் சிறப்பான விஷயங்களை அளித்திருக்கிறார். அதனால்தான் இன்று இந்த இடத்தில் நின்று நான் பேசிக் கொண்டிருக்கிறேன். கடவுள் எல்லோருக்கும் ஒரு விதியை எழுதியுள்ளார் என்பதை ஒப்புக்கொள்ள நான் அவமானப்படவில்லை. நாம் அதற்காக உழைத்தால் போதும். அதனால்தான் நான் மீண்டும் முதலிலிருந்து உழைக்கத் தொடங்கினேன்.
அணி நிர்வாகமும் இந்தக் காலத்தில் என்னோடு உறுதுணையாக இருந்தார்கள். நான் அணிக்குத் திரும்பிய போது எனக்குத் தோன்றியது போல் விளையாடச் சொன்னார்கள். பல பேர் பல விமர்சனங்களை என் மீது வைத்தனர். நான் இதைத் தவறாகச் செய்கிறேன், அதைத் தவறாகச் செய்கிறேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் என்னுடைய சிறந்த இன்னிங்ஸ்களின் வீடியோக்களை எடுத்துப் பார்த்தேன். அதேபோல்தான் நான் ஒவ்வொரு பந்தையும் அணுகினேன். எனக்குள் ஓடிக் கொண்டிருந்ததை எப்படி வெளியே சொல்வது என்று தெரியாமல் இருந்தேன். ஆனால் என்னைப் பற்றி, என் விளையாட்டைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன்.
நிச்சயம் மக்களிடையே பல்வேறு கருத்துகள் இருக்கும். ஆனால் நாம் உணர்வதை அவர்களால் உணர முடியாது. கடந்த சில மாதங்களாக நான் வித்தியாசமாக உணர்ந்தேன். ஆனால் என் வாழ்வில் அது ஒரு சிறப்பான காலம். ஏனென்றால் இந்தக் காலத்திற்கு நான் கடைசிவரை கடமைப்பட்டிருக்கிறேன். நான் கிரிக்கெட்டையும் வாழ்வையும் அணுகும் முறையை மாற்றிக் கொடுத்து என்னை முன்னேறச் செய்த காலம் இது!"
வாழ்த்துகள் விராட்!
source https://sports.vikatan.com/cricket/virat-kohli-entire-speech-after-hitting-his-71st-century
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக