வெளியில் இருந்து காரில் வீட்டுக்கு வருபவர்கள், வந்தவுடன் கேட்டை திறக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வழக்கம்தான். ஆனால் ஒரு சில நிமிடம் கதவை திறக்க தாமாதமாகிறது என்பதற்காக செக்யூரிட்டி பணியில் இருப்பவர்களை அடிக்கும் சம்பவங்கள் டெல்லி மற்றும் அதனையொட்டிய நொய்டா, குர்காவ் பகுதியில் சமீப காலமாக தொடர்கதையாக நடந்து வருகிறது. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் 121வது செக்டரில் உள்ள கட்டடத்தில் செக்யூரிட்டி கார்டாக இருப்பவர் சச்சின். இவர் வேலை செய்யும் கட்டடத்தில் பேராசிரியை சுதாபா தாஸ் வசித்து வருகிறார். அவர் தனது காரில் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். கட்டட கேட் திறப்பதற்கு சற்று தாமதம் ஆனது. உடனே காரில் இருந்து இறங்கி வந்த சுதாபா நேராக செக்யூரிட்டி கேபினுக்கு சென்றார். அங்கு இருந்த சச்சினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் சுதாபா சச்சினை மூன்று முறை கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டார்.
உடனே இது குறித்து சச்சின் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து வந்து சுதாபாவை கைது செய்தனர். இது குறித்து சச்சின் கூறுகையில், ``கார்கள் அதன் நம்பர் அடிப்படையில் தானியங்கி முறையில் திறப்பது வழக்கம். சுதாபாவின் கார் நம்பர் தானியங்கியில் காண்பிக்கவில்லை. அப்படி இருந்தும் அவரது காரை உள்ளே அனுமதித்தோம்” என்று தெரிவித்தார்.
அப்பெண் செக்யூரிட்டி கார்டை அடித்த போது அங்கு இருந்த யாரும் தடுக்க முன்வரவில்லை. ஆனால் சக செக்யூரிட்டி ஒருவர் நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் டெல்லி அருகில் உள்ள குர்காவில் லிப்டில் சிக்கிக்கொண்ட நபர் அதிலிருந்து வெளியில் வந்ததும் செக்யூரிட்டி கார்டை சரமாறியாக அடித்து உதைத்தார். அதே போன்று நொய்டாவில் கட்டட கேட்டை திறக்க தாமதமானதால் பெண் ஒருவர் செக்யூரிட்டி கார்டை அடித்தார். கடந்த ஒரு மாதத்திற்குள் தொடர்ச்சியாக செக்யூரிட்டி பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது.
source https://www.vikatan.com/news/india/delay-in-opening-the-door-delhi-professor-arrested-for-punching-security-guard
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக