கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்துள்ள வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி(47). கூலி தொழிலாளி. இவரின் மனைவி ராஜேஸ்வரி(45), மகள் நித்யா(26). கிருஷ்ணன்குட்டி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவரின் மகள் நித்யாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவர் வீட்டில் பிரச்னை காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன் நித்தியா விவாகரத்து பெற்றுள்ளார். பின்னர் தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார் நித்யா.
|இதற்கிடையே கிருஷ்ணன் குட்டியின் மனைவி ராஜேஸ்வரிக்கு கிட்னி பிரச்னை இருந்து வந்துள்ளது. அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்தான் நேற்று காலை கிருஷ்ணன்குட்டியின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. அப்பகுதியினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது கிருஷ்ணன்குட்டி, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் பிணமாக கிடந்துள்ளனர். அதுபற்றி அருமனை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அருமனை போலீஸார் அங்கு சென்று மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணன் குட்டி தனது மகளின் திருமணத்தின் போது பல லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மனைவியின் சிகிச்சைக்காக பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடன் பிரச்னை காரணமாக அவர்கள் நேற்று இரவு தூங்கச் செல்லும்போது விஷம் குடித்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/family-commit-suicide-after-debt-and-family-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக