Ad

புதன், 7 செப்டம்பர், 2022

ஒரு தெய்வம் நேரில் வந்தது! - குன்னக்குடி வைத்தியநாதன் #AppExclusive

`கடவுளை யாராவது நேரில் பார்த்ததுண்டா?'- யாராவது இப்படி ஒரு கேள்வி கேட்டா இல்லியேனுதான் பொதுவா பதில் வரும்.

ஆனா, தெய்வங்கள் அப்பப்போ நேரிலும் வரும். தடுமாறி நிற்கும்போது உதவியா ஓடிவரும். நாம பண்ற தப்புகளைத் தட்டிக் கேட்கும். வாயார வாழ்த்திட்டுப் போகும்.

தெய்வம்னா ஏழெட்டுக் கைகளோட வில், வேல், வீணைனு சுமந்துட்டு தலையில் கிரீடமும் முகத்துக்கு கலர்கலரா மேக்கப்பும் பட்டாடை கம்பீரங்களோடவும் மயில், புலி குதிரைனு ஏதாவது ஒண்ணு மீதேறி தான் வரும்னு எதிர்பார்க்கக்கூடாது. அதெல்லாம் சினிமாவிலும் கனவிலும் மட்டும்தான்!

Kunnakudi Vaidyanathan

ஆபத்தான சமயங்களில், குழப்பமான நேரங்களில் நமக்கு முன்பின் தெரியாத ஆட்கள் திடீர்னு உதவிக்கு வந்து நிப்பாங்க. இதைத்தான் `நல்ல நேரத்திலே கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினார்’னு சொல்வோம்.

அப்படி என் வாழ்விலும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது. இருபத்தோரு வருஷமா நான் திருவையாறு தியாகராஜர் ஆராதனை கமிட்டிச் செயலாளரா இருக்கேன். உலகம் முழுவதும் இருக்கிற இசைக் கலைஞர்கள், வித்தகர்கள் வருஷம்தோறும் தியாகராஜர் உற்சவத்துக்கு வந்து, தியாக பிரும்மத்துக்குப் புகழ் சேர்த்துட்டுப் போவது வழக்கம். ஐந்துநாள் நடக்குற இந்த உற்சவத்துல முக்கியமானது அன்னதானம். வர்றவங்க எல்லோருக்கும் ஐந்து நாளும் அன்னதானம் செய்வோம்.

ஆராதனை அன்னிக்கு மட்டும் ஐயாயிரம் பேர் சாப்பிடுவாங்க. மற்ற நாள்ல இரண்டாயிரம் பேர் வரைக்கும் சாப்பிடுவாங்க. காலங்காலமா இது ஒரு கணக்கு. இசையாலும் உணவாலும் மனசையும் வயிற்றையும் நிறைச்சு, ஒவ்வொரு மனுஷனையும் திருப்தியா அனுப்பிவைக்கணும்றது எங்களோட ஆசை.

அது, 1985 அல்லது 86-வது வருஷம்னு நினைக்கிறேன்... ஆன்மீகப் பெரியவங்க, இசை ஈடுபாடு உள்ள நல்ல மனுஷங்ககிட்ட இருந்து நன்கொடை வாங்கித்தான் இந்த அன்னதானத்தை ஒவ்வொரு வருஷமும் நடத்திட்டு வர்றோம்.

அந்த வருஷம் நடந்த உற்சவத்தில் இரண்டாவது நாள் மதியம் சமையல் பொறுப்பாளர் ஓடிவந்து, என்னைத் தனியா அழைச்சுட்டுப் போனார். மதியச் சாப்பாட்டை எப்படியோ சமாளிச்சுட்டோம். ஆனா, ராத்திரிக்குச் சமையலுக்கு வேண்டிய பொருளும் இல்லை. பணமும் இல்லைனு சொன்னார். எனக்குத் துக்கிவாரிப் போட்டது. சாப்பாட்டு நேரம் வந்து, இரண்டாயிரம் பேர் பசியோட நிப்பாங்களேனு நினைச்சுப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அவசரத்துல என்ன பண்றதுனு புரியலை. `இருங்க... நான் ஏதாவது ஏற்பாடு பண்றேன்'னு சொல்லிட்டுப் போயிட்டேன். வழக்கமா எங்களுக்குச் சமையல் பொருட்கள் கொடுத்துட்டு இருக்கிறவங்ககிட்டயும் பாக்கி இருந்தது.

ஆனாலும் ஒரு நம்பிக்கை... உயிர் கொடுத்த தெய்வமும் இந்த இசைக்கலையும் என்னைக் கைவிட்டுடாதுங்கற நம்பிக்கை. ஒரு கச்சேரியில இருபத்தைந்து பேர்ல ஒருத்தரா வாசிக்கிற துணைக் கருவியா இருந்த வயலினை பிரதான இசைக் கருவியா ஆக்கணும்னு சின்ன வயசுலயே நினைச்சு, அதை ஆக்கியும் காண்பிச்ச எனக்கு எப்போதும் நம்பிக்கைப் பிசகு ஏற்பட்டதேயில்லை! அன்னிக்கும் அந்த நம்பிக்கையோட நடந்துபோய், காவிரியில ஸ்நானம் பண்ணிட்டே தியாகராஜ சுவாமிகளைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

Kunnakudi Vaidyanathan

`உன்னோட விழா நடந்துட்டு இருக்கு. அதுக்கு வர்றவங்களுக்கு அன்னதானம் செய்துட்டு வர்றோம். வயிறாரச் சாப்பிட்டுட்டு, மனசார வாழ்த்திட்டுப் போறாங்க. ஆனா, இந்த வருஷம் இப்படிச் சோதிச்சிட்டியே... என்னால என்ன பண்ண முடியும்? உன்னோட கருணைப்பார்வை பட வேண்டாமா?' என்று நா தழுதழுக்க சொல்லிக்கிட்டே மூழ்கி எழுந்தேன். அப்போ திடீர்னு `சார்... சார்...'னு ஒரு குரல்!

கோயில்ல வேலைபார்க்கிற ஒரு பையன் குரல் அது. `ஒரு லாரி வந்து நிக்குது. கோயில் பக்கத்துல அது வரமுடியாம இரண்டு ஆர்ச் தடுக்குது. அதை எடுத்தாதான் லாரி உள்ளே வரமுடியும்.

உற்சவம் நடக்கும்போது ஆர்ச்சை எடுக்க முடியாதுனு சொன்னா, லாரி டிரைவர் உங்க பேரைச் சொல்றார்'னு அந்தப் பையன் சொன்னான். ஏதோ தகராறு பிடிச்ச லாரி டிரைவரா இருப்பார் போல் இருக்கேனு ஓடினேன்.

லாரியைச் சுற்றி மக்கள் கூட்டம் வேற! `என்னப்பா?'னு டிரைவர்கிட்ட கேட்டேன். அவர் கசங்கிப்போன ஒரு சீட்டை எடுத்து என்னிடம் கொடுத்தார். அதுக்குமேல `குன்னக்குடி ஐயா'னு எழுதியிருந்தது.

`நான்தானப்பா குன்னக்குடி... என்ன இப்போ' என்று கேட்டேன். `அரிசி மூட்டை வந்திருக்கு. எங்கே இறக்கணும்?'னு டிரைவர் கேட்டதும் ஆடிப்போயிட்டேன். `யாரு கொடுத்து அனுப்பிச்சாங்க?'ன்னேன். `குளித்தலையில இருந்து கொண்டு வர்றேன்'னார்.

டக்குனு எனக்கு கோபாலி ஞாபகம் வந்தது. கோபால தேசிகன்கிற என்னோட பால்ய சிநேகிதன். குளித்தலைக்குப் பக்கத்துல மிராசுதாரராக இருக்கான். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னே அவனைச் சந்திச்சது ஞாபகம் வந்தது.

`கோபாலி... வருஷா வருஷம் திருவையாறுல தியாகராஜர் உற்சவம் நடக்குது. அதுக்கு உன்னால முடிஞ்ச ஏதாவது உதவியைப் பண்ணக் கூடாதா?'னு நான் கேட்டதை ஞாபகம் வெச்சுக்கிட்டு, இப்ப அவன் அனுப்பி இருந்தான்.

ஏழு அரிசி மூட்டைகள், ஐந்து டின் நெய், நாலு டின் தயிர், கறிகாய் மூட்டைகள், இலைக்கட்டுகள்னு அந்த லாரி முழுதும் சமையல் அயிட்டங்கள்தான்!

கொடுத்து அனுப்பிச்சது கோபால தேசிகன். டிரைவர் பேரு கேட்டேன். நாராயணன். லாரி பேரு... ஸ்ரீராம ஜெயம்.தெய்வம் எனக்கு அன்று நேரில் தான் வந்தது!

சந்திப்பு : ப.திருமாவேலன்

படங்கள் : கே.ராஜசேகரன்

(01.09.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)


source https://www.vikatan.com/oddities/kunnakudi-vaidyanathan-interview-from-2002-ananda-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக