Ad

ஞாயிறு, 8 மே, 2022

CSK v DC: ஓப்பனிங், பௌலிங் ஃபார்முக்கு வந்தாச்சு; சென்னையை இந்த முறை பிளேஆஃப் கூட்டிச்செல்வாரா தோனி?

அண்ணன் - தம்பி, ஒரே டீமில் ஒண்ணு மண்ணாய் இருந்த மாமன் - மச்சான் என ஏகப்பட்ட இணைகளை நேருக்கு நேராய் மோதவிட்டு அழகு பார்த்திருக்கிறது ஐ.பி.எல். அந்த வகையில் இது குரு - சிஷ்யன் மோதல்.

வந்தநாள் முதல் இன்றுவரை தோனியைப் பார்க்கும்போதெல்லாம் பண்ட்டின் கண்களில் மரியாதையும் அபிமானமும் டன்கணக்கில் வழியும். கடைசியாய் இந்திய அணியில் தோனி ஆடி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை ஹர்திக், பண்ட் போன்றவர்களுக்கு தோனிதான் ஆதர்ஷம். தோனியின் சொல்தான் மந்திரவாக்கு. அப்படியான சிஷ்யனின் கையில்தான் சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு இருந்தது இந்த ஆட்டத்தில்.

CSK v DC

அதுவும் மாலை நடந்த முதல் போட்டியில் பெங்களூருவும் ஜெயித்துவிட, வரும் எல்லா ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்கவேண்டும், பெங்களூருவும், ராஜஸ்தானும் எஞ்சிய எல்லா ஆட்டங்களிலும் தோற்கவேண்டும் என ஏகப்பட்ட டிஸ்க்ளைமர்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படும் கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டார்கள் சென்னை ரசிகர்கள். அவர்களுக்கு இனி ஒவ்வொரு ஆட்டத்திலும் தோனி பேட்டிங் ஆர்டரில் தன்னை ப்ரமோட் செய்துகொண்டு மேலே ஆடவேண்டும். அவர் ஆடும் ஒவ்வொரு பந்தையும் ரசித்துப் பார்க்கவேண்டும். அவ்வளவுதான்!

டாஸை வென்ற டெல்லி கேப்டன் பண்ட் எதிர்பார்த்தபடியே பௌலிங்கைத்தான் தேர்வு செய்தார். அவர் அணியில் இரண்டு மாற்றங்கள். கடந்த ஆட்டத்தில் ப்ருதிவி ஷாவுக்கு பதிலாய் வந்த மந்தீப் மறுபடியும் வெளியே. அவருக்கு பதில் ஆர்.சி.பிக்காக கடந்த சீசனில் கலக்கிய பரத் ஒருபெரும் காத்திருப்புக்குப் பின் வந்தார். அக்‌ஷருக்கு உடல்நலம் சரியாகிவிட்டதால் லலித் யாதவ் வெளியே.

சென்னை அணியில் ஒரேயொரு மாற்றம். (அப்படித்தான் தோனி சொன்னார்). முன்னாள் கேப்டன் ஜடேஜா பிட்டாக இல்லாத காரணத்தால் அவருக்கு பதில் தூபே. ஆனால் ப்ளேயிங் லெவனை டிஸ்ப்ளேயில் காட்டும்போது அதில் ப்ரிட்டோரியஸ் இல்லை. அவருக்கு பதில் ப்ராவோ. இதற்கு முன்னரும் கேப்டன்கள் டாஸின்போது அணியிலிருக்கும் மாற்றங்களை மறப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தோனி இதைச் செய்வது அநேகமாய் இதுதான் முதல்முறை. அதுசரி, தலைக்கும் டங் ஸ்லிப்பாகும்தானே.

CSK v DC

நிலையான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இல்லாததே சென்னை அணியின் மிகப்பெரிய மைனஸ்களுள் ஒன்றாக இருந்தது இந்தத் தொடரில். ஒருவழியாக ருத்துராஜ் பார்முக்கு வர, கான்வேக்கும் சரியான வாய்ப்புகள் கிடைக்க, இப்போது ஓபனிங் நன்றாகவே செட்டாகிவிட்டது. களமிறங்கினார்கள் இருவரும். இருவருமே டெக்ஸ்ட்புக் ஷாட்களை ஆடக்கூடியவர்கள். கிடைக்கும் சின்ன சின்ன கேப்களில் எல்லாம் சிங்கிள் தட்டித் தட்டி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்பவர்கள். முதல் சில பந்துகளை அனுமானித்து அதன்பின் டாப் கியரில் பறப்பவர்கள். அதனால் முதல் இரண்டு ஓவர்களில் 9 ரன்கள்தான்.

டெல்லி அணி பௌலிங்கில் பெரிதும் நம்பும் நார்க்கியாதான் மூன்றாவது ஓவர். அவர் வீசிய முதல் பந்தையே இறங்கி வந்து சிக்ஸ் தூக்கினார் கெய்க்வாட். அப்போதே இவர்கள் இருவரும் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறார்கள் எனத் தெரிந்தது. கான்வேயும் தன் பங்கிற்கு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள். நான்காவது ஓவரில் திரும்ப கலீல் ரன்ரேட்டைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

நார்க்கியாவை வெளுத்ததால் பௌலிங் சேஞ்ச் கொண்டுவந்தாக வேண்டிய கட்டாயம் பண்ட்டுக்கு. தேர்வுக்குப் போகும் பையனைப் போல பொறுப்பாய் வந்து பந்தை எடுத்தார் அக்‌ஷர் படேல். தேர்வறையில் வரும் அவுட் ஆப் சிலபஸ் கேள்வி போல வந்து நின்றார் கான்வே. அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ்கள். அடுத்ததாய் வீசிய ஷர்துல் ஓவரிலும் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள். பவர்ப்ளே முடிவில் 57 ரன்கள் விக்கெட் இழப்பில்லாமல். ருத்து - கான்வே இணை களமிறங்கிய கடந்த மூன்று ஆட்டங்களிலும் 50+ பார்ட்னர்ஷிப்கள்தான்.

CSK v DC

'இந்த ஓவரு என்ன பண்ணக் காத்திருக்கானுங்கனு தெரியலையே' எனத் தயங்கியபடியே வந்தாலும் அந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் அக்‌ஷர். டைம் அவுட்டில், 'ஸ்கெட்ச்சு உனக்கில்ல சேகரு... சேகரு' என கண்ணைக் காட்டிச் சிரித்தார் கான்வே. எட்டாவது ஓவர் வீசிய குல்தீப்பை பிரி பிரியென பிரித்தார் கான்வே. 18 ரன்கள். 'இந்த நாள் உன் டைரில குறிச்சுவச்சுக்கோ' எனத் தொடையைத் தட்டி சவால்விட்டபடி போனார் குல்தீப். மீண்டும் அக்‌ஷர். ஐந்தே ரன்கள்.

பத்தாவது ஓவர் குல்தீப். 'பன்ச் பேசி ஹிட் அடிக்க நீ அண்ணாமல இல்ல, அண்ணாத்த' என சொல்லிவைத்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் கான்வே. அதுவும் 'நான் அதே இடத்துல போடுவேனாம், நீ அதே இடத்துல அடிப்பியாம்' என பால்வாடி சிறுவர்கள் பந்து விளையாடுவது போல ஆடிக்கொண்டிருந்தார்கள் இருவரும். 27 பந்துகளில் அரைசதம் கடந்தார் கான்வே. தொடர்ந்து அடிக்கும் மூன்றாவது அரைசதம். ஸ்கோர் சரியாக பத்து ஓவர்களில் 100 ரன்கள். ஆனால் இதில் பெரும்பாலான ரன்கள் கான்வே அடித்தது என்பதால் ருத்துராஜின் மேல் பிரஷர் எகிறியது. அந்த வேகத்தில் அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தவர் நார்க்கியா வீசிய ஸ்பீடான பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒன்டவுனில் தூபே இறங்க எல்லாருக்கும் ஆச்சரியம். காரணம் ஷிவம் தூபே பாக்யராஜ் போல. திரைக்கதை, இயக்கம் என பின்னவர் மற்ற ஏரியாக்களில் கலக்குவதைப் போல தூபேயும் கலக்கினாலும் புட்வொர்க்கில் இருவரும் ஒரே மாதிரிதான். இருந்த இடத்தில் இருந்தபடியே ஆடும் தூபேவைப் பார்க்க பாடல் காட்சிகளில் வரும் பாக்யராஜ் போலத்தான் இருக்கும். இவர் எப்படி ஷர்துல், அக்‌ஷர் போன்ற ஸ்லோ பௌலர்களை எதிர்கொள்வார் என எல்லாருக்கும் சந்தேகம். போக, இந்த மைதானத்தில் ஒருபக்க பவுண்டரி மற்றொரு பக்கத்தைவிட சிறியது. இடது - வலது காம்பினேஷன் என்றால் மாறி மாறி அந்தப்பக்கம் டார்கெட் செய்யலாம். ஆனால் எல்லாம் 'தல' செயல்!

நினைத்ததுபடியே மெதுவாகத்தான் இன்னிங்க்ஸைத் தொடங்கினார் தூபே. முதல் ஒன்பது பந்துகளில் எட்டு ரன்கள்தான். ஸ்கோர் 14 ஓவர்கள் முடிவில் 140 ரன்கள். 'என்ன இருந்தாலும் என்னோட எக்ஸ் டீமு. அதுல ஒருத்தர் ரன் அடிக்க சிரமப்படுறப்போ நான்தானே உபகாரமா இருக்கணும்' என லார்டு ஷர்துல் வந்து போட்டுக்கொடுக்க இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி பறக்கவிட்டார் தூபே. அந்த நல்லமனசுதான் சார் கடவுள்!
CSK v DC

டெல்லி அணியில் அருமையாக பந்துவீசிய ஒரே வீரரான கலீல் தன் மூன்றாவது ஓவரில் ஏற்கெனவே டயர்டாகி இருந்த கான்வேயை ஆசைகாட்டி அவுட்டாக்கினார். 87 ரன்கள் எடுத்து கான்வே நடையைக் கட்டியபோது மொத்த அரங்கமும் ஆர்ப்பரிக்க, 'அது தனக்கான மரியாதை' என அப்பாவியாய் நினைத்தபடி போனார் கான்வே. உள்ளே வந்தார் ராயுடு. அவர் வந்த சில பந்துகளில் தூபே அவுட்டாக இப்போது கூட்டம் எழுந்து நின்று கைதட்டியது.

`பாசக்கார பயலுக, எப்படி பாராட்டுறானுக பாரு' என தூபே கண்ணில் ஜலம் கோர்க்க, `பாசம்தான். ஆனா பாராட்டல, வரவேற்குறோம்' என டக் அவுட் பக்கம் தலையைத் திருப்பினார்கள் ரசிகர்கள். `தோனி!'.

சினிமாவில் நடிப்பவர்களுக்கு இயக்குநர், கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என ஏகப்பட்ட பேரின் துணையோடுதான் ஒரு மாஸான ஓப்பனிங் காட்சி அமையும். ஆனால் தோனியைப் பொறுத்தவரை 'இத்தனயாவது ஆளா நான்தான் இறங்குவேன்' என இயக்கமே அவர்தான். ஆனால் இசையோ ஆயிரக்கணக்கான சாமானியர்கள் ஒன்றாய் எழுப்பும் உற்சாகக்கூவல். ஒளிப்பதிவு அவர்களின் கேமராக்கள். எடிட் எல்லாம் தேவையே இல்லை. இத்தனை ஆண்டுகளாய் ஆடிக்கொண்டிருந்தவர் இன்னும் ஒருசில ஆட்டங்களே ஆடப்போகிறார் என்பதால் ஒருநொடிகூட ரசிகர்கள் அவர் ஆடும்போது கண்சிமிட்டத் தயாராய் இல்லை.

மிட்செல் மார்ஷ் வீசிய முதல் பந்தில் ரன் இல்லை. அரங்கம் அமைதியானது. அடுத்து வீசிய பந்தை நடந்து வந்து தோனி சிக்ஸ் தூக்க, ரிமோட்டில் ம்யூட்டை ஆப் செய்தது போல கூரையை பிய்த்தது சத்தம். அடுத்த பந்தை ஆப் சைடில் தட்ட நான்கு ரன்கள். ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 183/3. கலீல் வீசிய 19 ஓவரில் ராயுடு அவுட். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கூட்டம் கவலைப்படவே இல்லை. அந்த ஓவரின் கடைசி பந்தை 'வைட் லென்த்ல போட்டா ஆப் சைடில தட்டி அவுட்டாவேன்னு நினைச்சியா கண்ணா?' என நேராகத் தூக்கினார். லாங் ஆப்பில் அதைப் பிடிக்க வார்னர் எடுத்த முயற்சிகளெல்லாம் வீணாக, இன்னொரு சிக்ஸ். 'இதுபோதுமெனக்கு இது போதுமே' என ரஹ்மானாய் மாறி முணுமுணுத்தது அரங்கம்.

கடைசி ஓவரில் மொயீன், உத்தப்பா இருவரும் அவுட். ஆனால் தோனி விறுவிறுவென ஓடியே நான்கு ரன்கள் எடுக்க ஸ்கோர் 208/6. இந்தத் தொடரில் சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் அடிப்பது இது நான்காவது முறை. வேறெந்த அணிகளும் இத்தனை முறை அடிக்கவில்லை. ஆனால் அதில் ஒருமுறை தோற்றும் போயிருப்பதால் உள்ளே பயப்பந்து உருண்டுகொண்டுதான் இருந்தது ரசிகர்களுக்கு.

CSK v DC

முதல் ஓவர் வழக்கம்போல முகேஷ் சவுத்ரி. எட்டு ரன்கள். அடுத்த ஓவரில் சிமர்ஜித்தைத் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் பரத். அவை ரட்சகன் நாகார்ஜுனா போல அவர் நரம்புகளை சூடாக்க, அடுத்த பந்தையும் இழுத்து லெக் சைடில் சுற்றினார். அது வித்தியாசமாய் பேட் டிப்பில் பட்டு ஆப் சைட் நின்றிருந்த ஸ்லிப் கையில் புகுந்தது. 'இது என்ன ரகம்ன்னே தெரியலையே' எனப் பார்த்தவர்கள் தலை சொறிய, வெளியேறினார் பரத்.

மிட்செல் மார்ஷைப் பொறுத்தவரை பி.பி.எல்லில் 'காக்க காக்க' அன்புசெல்வன். ஐ.பி.எல்லில் என்கவுன்ட்டர் ஏகாம்பரம். 'ஓ அங்க இருந்து ஓடிவந்து போட்டா அது என்னைக் கடந்து சொய்ங்னு பின்னாடி போகுது. இதான் பௌலிங்கா? ரைட்டு' என ரொம்ப நேரம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஹைஸ்கோர் மேட்ச்சில் பவர்ப்ளேயில் ரன்களைக் குவித்தால் மட்டுமே உண்டு. மார்ஷ் ஆடிய ஆமைவேகத்தால் வார்னர் மீது பிரஷர் ஏற, தீக்‌ஷனாவை ரிவர்ஸ் ஸ்வீப்பில் வெளுக்கப் பார்த்தார். அது மிஸ்ஸாகி காலில் பட, எல்.பி.டபிள்யூ. அப்பீலுக்குப் போயும் பிரயோஜனமில்லை. மிடில் ஆர்டரில் லலித் யாதவ் இல்லை. அக்‌ஷரும் ஒரு பிரேக்கிற்கு பின் வந்திருக்கிறார். மார்ஷ்ஷோ 'நான் யாரு எங்க இருக்கேன்' மோடிலேயே இருக்கிறார். எனவே பண்ட், பவல் தலையில் ஏறியது மொத்த சுமை.

வெறியானார் பண்ட். க்ரீஸிலேயே கதகளி ஆடி ஒரு பவுண்டரி. அதுகொடுத்த உற்சாகத்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள். மறுபக்கம், 'என்ன சும்மா நின்னாலும் வேர்க்குது, இதுக்கு நான் ஆடியே தொலைவேனே' என பேட்டைத் தூக்கிக்கொண்டு பந்தைத் துரத்தியபடி ஓடினார் மார்ஷ். விறுவிறுவென ஸ்கோர் ஏற, பவர்ப்ளே முடிவில் 59/2. சென்னையைவிட இரண்டு ரன்களும் இரண்டு விக்கெட்களும் அதிகம்.

தோனி தனக்கடுத்து டீமில் நம்புவது ப்ராவோவைத்தான். அதனால் அவரை ரன்ரேட்டைக் கட்டுக்குள் கொண்டுவர கூட்டிவர, அந்த ஓவரிலும் 12 ரன்கள். டைம் அவுட்டை எடுத்தது சென்னை அணி டைம் அவுட்டில் கத்தி படம் போல ப்ளெமிங் எதிரணியின் ப்ளூப்ரின்ட் எதையும் கொடுத்தாரா தெரியவில்லை. அடுத்து வந்த மொயீன் ஓவரில் மார்ஷ் காலி. பந்து மேலே போய் சாட்டிலைட்டையே தொட்டுவிட்டு வந்ததால் பொறுமையாக புது வெப் சீரிஸின் முதல் எபிஸோடை எல்லாம் பார்த்துவிட்டு வந்து பிடித்தார் கெயிக்வாட்.

CSK v DC

பவல், பண்ட் இருவருமே பாரபட்சம் பார்க்காமல் பாஸ்ட் பௌலிங்கை பொளப்பார்கள் என்பதால் தீக்‌ஷனாவே அடுத்த ஓவர். இரண்டே ரன்கள். மொயீன் வீசிய அடுத்த பந்தை பண்ட் பேக் ஃபுட்டில் பவுண்டரி அடிக்கப் பார்க்க அது எட்ஜாகி லெக் ஸ்டம்ப்பை முத்தமிட்டது. 'இப்போ பாருங்க கேப்டன்... உங்களை அவுட்டாக்குனவரை எப்படி அடிக்கிறேன்'னு என ரிப்பல் படேல் அடுத்த பந்தையே சிக்ஸுக்குத் தூக்கினார். 'வாடா என் சிங்கக்குட்டி' என பண்ட் பெவிலியனில் இருந்து கர்ஜிக்க, 'ஓ வரச் சொல்றீங்களா? ஓகே கய்ஸ். பை பை' என மூன்றாவது பந்தில் கிளம்பினார் ரிப்பல். 'ஏய்' பட வடிவேலு டெம்ப்ளேட் ஆனார் பண்ட். 10 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 82/5.

முகேஷ் சவுத்ரி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை ஸ்டைலாய் ட்ரைவ் அடிக்க முயன்றார் அக்‌ஷர். 'போஸ் ஓகே. என்ன பெயில்தான் பறந்துடுச்சு. பரவாயில்ல வாங்க. போட்டோ வாட்ஸ்அப் பண்றேன்' என பவுண்டரிக்கு வெளியே இருந்து தம்ஸ் அப் காட்டினார் போட்டோகிராபர். பாண்டிங் 'சீக்கிரம் வரவும். தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது' என 'முத்து' படம் போல டைம் அவுட்டில் துண்டுச்சீட்டு கொடுத்துவிட்டாரோ என்னமோ, அதே ஓவரில் சப்பையாய் கீப்பர் கேட்ச் கொடுத்து பவலும் வெளியேறினார். ஸ்கோர் 11 ஓவர்கள் முடிவில் 85/7.

'சரி, விக்கெட் எடுத்தவங்க ஓரமா நில்லுங்க. யாரெல்லாம் விக்கெட் எடுக்கலையோ முன்னாடி வாங்க' எனக் கூப்பிட்டார் தோனி. ஷிவம் தூபே வேகவேகமாய் பவுண்டரி லைனிலிருந்து ஓடிவர, 'ஏன் இதுவரைக்கும் உடைச்ச பர்னிச்சரெல்லாம் பத்தாத?' என அவரைத் திருப்பியனுப்பினார் தோனி. முதல் இருபது நிமிடங்கள் ஹரி படம் போலவும் அடுத்த ஒருமணிநேரம் மெதுவாய் நகரும் ஈரானியப் படம் போலவும் ஆனது மொத்த மேட்ச்சும். இதுதான் சான்ஸ் என சென்னை பௌலர்களும் தங்கள் எகானமியை நன்றாகத் தேற்றிக்கொண்டார்கள். 'ஒண்ணு நீங்க அடிச்சு உங்க ரன்ரேட்டை மெயின்டெயின் பண்ணிக்கோங்க, இல்ல அவுட்டாகி எங்க ரன்ரேட்டையாவது ஏறவிடுங்க' என சந்தையில் துண்டுபோட்டு பேரம் பேசுவதைப் போல ரொம்பநேரம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள் இருதரப்பினரும்.

CSK v DC

ஒருவழியாய் சிமர்ஜித் வந்து குல்தீப்பிற்கு டாட்டா காண்பிக்க, ஷர்துல் மட்டும் ஒரு ஆளாய் நான்கு டயர்களுமே பஞ்சராகிவிட்ட வண்டியை தள்ளிக்கொண்டிருந்தார். 17வது ஓவரில் அவர் ஒரு சிக்ஸ் அடிக்க, டெல்லி அணிக்கு 40 பந்துகளுக்குப் பின் வந்தது ஒரு பவுண்டரி. 'எங்காளு தூபேவை நீ அடிக்கவிட்டல பங்காளி. அதனால உனக்கு நான் செய்றேன்' என ப்ராவோ 18வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளைப் போட்டுக்கொடுக்க ஷர்துலுக்கு சொந்தமாகின இரண்டு பவுண்டரிகள். 'சரி நீ போய் ஹெல்மெட், பேட் எல்லாம் கழட்டுட்டு ரெடியா இரு. செகண்ட் ஷோ படத்துக்குப் போகலாம்' என அவரை அடுத்த பந்தில் வழியனுப்பி வைத்தார். கடைசியாய் கஷ்டப்பட்டு நடந்து வந்த கலீலை, 'என்னப்பா கால்ல அடியா? சரி அப்ப உனக்கு ஏன் கஷ்டம்?' என ஸ்லோ யார்க்கரில் சுபம் போட்டு முடிக்க 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது டெல்லி. கான்வேதான் ஆட்ட நாயகன்.

கடைசி 63 பந்துகளில் டெல்லி எடுத்தது 46 ரன்கள். இழந்தது எட்டு விக்கெட்கள். ஹாட்ஸ்டார் ஹைலைட்ஸில்கூட இவ்வளவு சீக்கிரமாக ஒரு இன்னிங்ஸ் முடிய வாய்ப்பில்லை. எல்லாப் புகழும் சென்னை அணி பௌலர்களுக்கே. 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் ரன்ரேட் பாசிட்டிவாகி புள்ளிப்பட்டியலில் கொல்கத்தாவை பின்னுக்குத் தள்ளி ஓரிடம் முன்னேறியுள்ளது சென்னை சூப்பர்கிங்ஸ். மறுமுனையில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு ரன்ரேட் செம அடி. தொடரின் இறுதிக்கட்டத்தில் ரன்ரேட்டை வேட்டையாடும் இப்படியான மோசமான தோல்வி அணியை எதிர்மறையாய் பாதிக்கும். போக, டெல்லி முகாமில் ஒன்றிரண்டு வீரர்களுக்கு மீண்டும் காய்ச்சல் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வீரர்களின் மைண்ட்செட்டை பாசிட்டிவாக வைத்துக்கொள்ள வேண்டிய கூடுதல் பிரஷரும் இப்போது பண்ட் தலையில்.

CSK v DC
'You write your own fortune' என ஆட்டம் முடிந்தபின் சொன்னார் தோனி. சென்னையைப் பொறுத்தவரை அவர்தான் அந்த அதிர்ஷடத்தை நிர்ணயிக்கிறார். ஆனால் அதுமட்டும் ப்ளே ஆப் செல்ல இந்தமுறை போதாது என்பதுதான் சிக்கல். பெங்களூரு உள்ளிட்ட மற்ற அணிகளின் ரிசல்ட்டைப் பொறுத்தும் இருக்கிறது ப்ளே ஆப் வாய்ப்பு. 'போனால் நல்லது. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது அடுத்த சீசன்' என கூலாய் இன்று தோனி சொன்னதிலிருந்தே அவர் எதற்கும் தயார் எனத் தெரிகிறது. இதுவரை வாய்ப்பே இல்லை என சொன்னபோதெல்லாம் மேஜிக் செய்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவர் இறுதியாய் ஒருமுறை அப்படிச் செய்வார் என இன்னமும் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். விடை இன்னும் சில தினங்களில்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-csk-shines-in-all-departments-to-stay-alive-in-the-tournament

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக