Ad

வெள்ளி, 27 மே, 2022

சென்னை கலெக்டர் மாற்றம்... ஆய்வுக்கு பின் அதிரடி காட்டிய ஸ்டாலின் - பின்னணி என்ன?

ஆட்சியர் மாற்றம்:

திமுக ஆட்சி அமைந்த பின்னர் சென்னை மாவட்டத்தின் ஆட்சியராக விஜயா ராணி நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஒரு வருடத்துள்ளாகவே அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டிருக்கின்றார். சென்னை கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் குறைகள் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும் நேரடியாக கேட்டறிந்தார். மேலும், அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் பார்வையிட்டார்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின்

வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு செய்து சென்ற சில மணி நேரத்திலேயே சென்னை ஆட்சியராக இருந்த விஜயா ராணி மாற்றப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பு வெளியானது. கூட்டுறவு, உணவுத் துறை இணைச் செயலாளராக இருந்த அமிர்த ஜோதி சென்னையின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், விஜயா ராணி எந்த துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாரா என்ற விவரமும் வெளியாகவில்லை.

மாற்றப்பட்ட பின்னணி என்ன?

சென்னைக்குப் பிரதமர் மோடி வருகைதரும் சமயத்தில், சென்னை ஆட்சியர் மாற்றப்பட்ட விவகாரம் குறித்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``கடந்த சில மாதங்களாக ஆட்சியர் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை கிண்டியில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினர். ஆய்வு நடந்த சமயத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லை. அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு முடித்துக் கிளம்பிய பிறகே ஆட்சியர் அங்கு வந்து சேர்ந்துள்ளார்.

Dr.J.Vijaya Rani, I.A.S.

விஜயா ராணி தாமதத்துக்கான காரணம் குறித்து, தலைமைச் செயலாளரிடம் விளக்கம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆட்சியரைச் சந்திக்க அலுவலகம் சென்றுள்ளார். அவரை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்திருக்கிறார் ஆட்சியர். இதில் கோபமடைந்த எம்.பி., இந்த விவகாரத்தைத் தலைமைச் செயலாளரிடம் கொண்டு சென்றுள்ளார். சமீப காலமாக இதுபோன்ற பல்வேறு புகார்கள் மற்றும் சர்ச்சைகள் அவர்மீது தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் தான் அவர் மாற்றப்பட்டிருக்கின்றார்" என்று தகவல் தெரிவித்தனர்.

இந்த புகார்கள் தொடர்பாக விஜயா ராணியைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``முதல்வர் ஆய்வுக்கு வருவது குறித்து எனக்கு எந்த தகவலும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. அன்று மகளிர் மேம்பாடு பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்துகொண்டிருந்தது. எங்கள் துறைசார் அதிகாரிகள் அனைவருமே அந்த கூட்டத்தில்தான் இருந்தோம். அந்த கூட்டத்தில் இருக்கும்போதுதான் முதல்வர் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வந்தது. இந்த தகவலையடுத்து அவசர அவசரமாகக் கிண்டி புறப்பட்டுச் சென்றோம். அதற்குள் முதல்வர் ஆய்வு முடித்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார். அதன்பிறகு, முதல்வர் ஆய்வு செய்து சென்ற விவரங்களை அங்குக் கேட்டறிந்துவிட்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துசேர்ந்தேன்" என்று கூறினார்.

மகளிர் மேம்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்

மேலும் நாடாளுமன்ற உறுப்பினரை காக்கவைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசுகையில், ``ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சமயத்தில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்று யாரிடமும் சொல்லவில்லை. அன்று நான் முக்கியமான கோப்புகளைச் சரிபார்க்கும் பணியிலும், ஆய்வுக் கூட்டத்திலும் இருந்தேன். அவர் என்னைச் சந்திக்கும்போதுதான் தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்றே தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் என்னிடம் அவருடைய தனிப்பட்ட நிலவிவகாரம் குறித்து கோரிக்கை வைத்தார். அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வேண்டுமென்று எதுவும் நடக்கவில்லை. தலைமை அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியருக்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கோ முதல்வர் ஆய்வுக்கு வரும் தகவலைத் தெரியப்படுத்தவில்லை. அந்த ஒரே காரணத்தினால் தான் எங்களால் அங்குச் சரியான நேரத்துக்குச் செல்லமுடியவில்லை. இத்தனை வருடங்களாக நேர்மையாகவும், உண்மையாகவும் தான் பணியாற்றி வருகிறேன். எங்கள் தரப்பில் எந்த தவறும் செய்யவில்லை" என்று பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-background-of-stalins-action-in-chennai-collector-change

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக