விழுப்புரம் முகமதியார் தெருவில் வசித்து வந்துள்ளார் அகமது. 57 வயதான இவர், முன்னாளில் விழுப்புரம் 9வது வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார். இவர், தற்போது நகராட்சி ஒப்பந்ததாரராக செயல்பட்டு வந்துள்ளார். இவருடைய பிள்ளைகளான உமர், ஷாருக் உடனான சொத்து பிரச்னையில் இவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், 23-ம் தேதி அதிகாலை 1 மணி அளவில், தனது காரின் மூலம் விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றுள்ளார் அகமது.
முண்டியம்பாக்கம் அருகே உள்ள சிந்தாமணி அருகே அகமது கார் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த அவரது மகன்கள் உமர், ஷாருக்... சொத்து குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் அகமது கழுத்தை அறுத்தாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அகமது, தப்பித்துச் சென்று அருகில் இருந்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார். பின், அதிகாலை சுமார் 4 மணியளவில் மருத்துவமனை அருகே உள்ள கார் நிறுத்தத்திற்கு வந்த அகமது, வாடகை கார் மூலம் விழுப்புரத்திற்கு சென்று தனது உடமைகளை எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் 1 கி.மீ தூரத்தில் அகமது சென்ற காரை மீண்டும் வழிமறித்த அவரின் இரு மகன்கள் மற்றும் மகன்களின் நண்பர்களான வினோத், நேதாஜி ஆகியோர்... மற்றொரு காரில் அகமதை கடத்தி சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். காயமடைந்து ரத்தம் சிந்திக் கிடந்த அகமதுவை பார்த்த அய்யன் கோவில்பட்டு பொதுமக்கள் சிலர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு சென்ற விழுப்புரம் தாலுக்கா காவல்துறை அதிகாரிகள், சிகிச்சை பெற்று வந்த அகமதுவிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிந்துள்ளனர்.
ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை 23ம் தேதி இரவே கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்து பிரச்னை தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? உள்ளிட்ட சந்தேக கோணங்களில் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து பிரச்னையில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பிள்ளைகளே தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/two-sons-tried-to-kill-the-father-for-the-property-in-viluppuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக