தொடர்ச்சியாக இரண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தில் இருந்துவருகிறது. அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவிருக்கிறது. அதில், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுவருகிறது. இந்த நிலையில்தான், ‘சிந்தனையாளர் அமர்வு’ என்ற முக்கியமான ஒரு நிகழ்வை காங்கிரஸ் நடத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் குஜராத், இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள், 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வது அந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, ‘கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவியை மட்டுமே வழங்குவது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பது’ என்கிற முக்கியமான முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
‘சிந்தனை அமர்வு’ நிகழ்வில், தமிழகத்திலிருந்து மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்வு பற்றியும், காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய முடிவுகள் பற்றியும் செல்வப்பெருந்தகையிடம் பேசினோம்.
“அரசியல், பொருளாதாரம், அமைப்பு, இளைஞர், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், விவசாயம் என ஆறு தலைப்புகளில் ஆறு குழுக்கள் தனித்தனியாக விவாதம் நடத்தின. சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் பொருளில் நடைபெற்ற குழுவில் நான் இடம்பெற்றிருந்தேன். இன்றைய காலகட்டத்துக்கு எது தேவை என்பதை ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக்குழுவால் அவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், எதிர்கால தேசிய அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். கட்சியில் எல்லோருக்கும் பரவலாக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘இந்திய நாட்டை பேரபாயம் சூழ்ந்துள்ளது. அதாவது, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ அமைப்புகளால் நாடு எதிர்கொண்டுவரும் சவால்கள் குறித்து நமக்குள் விவாதிப்பதற்கு இந்தக் கூட்டம் நல்ல வாய்ப்பை அளித்துள்ளது” என்று பேசினார்.
காங்கிரஸின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, ‘இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டை பிரிவினையில் வைத்திருப்பது, மக்களை பயத்திலும் பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ நிர்பந்திப்பது, சிறுபான்மையினரைக் கொடூரமாக நடத்துவது என்கிற போக்கு பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும்’ என்றார்.
ஆகவே, காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகள், தேசிய அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். அது தேசத்தை நல்வழியில் கொண்டுசெல்ல உதவும்” என்றார் செல்வப்பெருந்தகை.
“ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற முடிவு கறாராக அமல்படுத்தப்படுமா? ” என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சியின் தமிழக ஊடகப் பிரிவின் தலைவரான கோபண்ணாவிடம் முன்வைத்தோம்.
“சிந்தனையாளர் அமர்வு என்பது புதிதான ஒன்று அல்ல. 1956-ம் ஆண்டு, உ.பி-யில் உள்ள நரோராவில் சிந்தனையாளர் அமர்வு நடந்துள்ளது. அதில், நேரு பங்கேற்றார். சிந்தனையாளர் அமர்வில், ஜனநாயகபூர்வமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும். கடுமையான விமர்சனங்களும் எழும். இதை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஊக்குவிக்கிறார்கள். சுதந்திரமாக கருத்து சொல்லும் உரிமையை காங்கிரஸ் தலைவர்கள் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் இந்த அமர்வு நடைபெற்றுள்ளது.
சீனியர் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெறுவதில் தீவிரம் காட்டும் போக்கு கவலைக்குரியது. அப்பாவும் எம்.பி., மகனும் எம்.பி என்கிற நிலை தொடர்வதால், கட்சியில் மற்றவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதனால், தகுதியுள்ள காங்கிரஸ் கட்சியினர் வருத்தப்படுகிறார்கள். குறிப்பாக, இதில் ராகுல் காந்திக்கு மிகுந்த வருத்தம் உண்டு
சுயேச்சையாகப் போட்டியிடும்போது டெபாசிட்கூட வாங்காதவர்கள், கட்சியின் மூலம் சீட் பெற்று, கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி-யாகிறார்கள். இந்தப் பிரச்னை, கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பதாக காங்கிரஸ் தலைமை கருதுகிறது. எனவேதான், `ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்’, `ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற முடிவுகளை கட்சித் தலைமை எடுத்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. கட்சிப் பொறுப்புகளும், எம்.பி., எம்.எல்.ஏ போன்ற பதவிகளும் பரவலாகக் கட்சியினருக்குக் கிடைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். இப்போது எடுத்துள்ள முடிவுகளில் அவர் உறுதியாகவும் இருக்கிறார். எனவே, இந்த முடிவுகள் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் கோபண்ணா.
`ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி’ என்ற முடிவு அமல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் பலர் சிக்கலுக்கு உள்ளாவார்கள் என்கிறார்கள். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக ப.சிதம்பரம் பல முறை தேர்வுசெய்யப்பட்டார். தற்போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதி எம்.பி-யாக இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரின் உறவினர்களுக்கு சீட் வழங்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூணின் மகன் ஹசன் மவுலானா, முன்னாள் எம்.எல்.ஏ-வான கே.ஆர்.ராமசாமியின் மகன் கரு.மாணிக்கம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வே.ரா உட்பட உறவினர்கள் சிலருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/one-family-one-ticket-policy-in-congress-party
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக