மயிலாடுதுறையிலிருந்து சித்தமல்லி சென்ற `1ஏ' என்ற அரசுப் பேருந்தில் ஓட்டுநர் குமரேசன், நடத்துனர் பூவராகவன் ஆகியோர் பணியில் இருந்தனர். மயிலாடுதுறையிலிருந்து சித்தமல்லிக்கு 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, பட்டவர்த்தி அருகே ஆலமரத்தடியில் கஞ்சா போதையிலிருந்த சில இளைஞர்கள் வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை பயணிகள் மீது பீய்ச்சி அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சித்தமல்லி சென்ற அரசுப் பேருந்து 10 பெண் பயணிகளுடன் மீண்டும் மயிலாடுதுறை நோக்கி வந்திருக்கிறது. விராலூர் அருகே போதையிலிருந்த மூன்று இளைஞர்கள் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேருந்து செல்ல முடியாதபடி செய்திருக்கின்றனர். இதனால் கீழே இறங்கிச் சென்ற ஓட்டுநர் குமரேசன், இளைஞர்களை ஓரமாகச் செல்லும்படி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் மறுத்து அவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் குமரேசன் தனது செல்போனை எடுத்து இளைஞர்களின் அட்டூழியத்தைப் படம் பிடித்திருக்கிறார். அதில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஓட்டுநரின் செல்போனைப் பறித்து சாலையில் வீசி எறிந்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, அங்கு கூடிய 10 இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநர் குமரேசனை சரமாரியாகத் தாக்கி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அவர்கள் தாக்கியதில், காயமடைந்த ஓட்டுநரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, 108 ஆம்பூலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போதை ஆசாமிகள் பேருந்து நிறுத்தத்திலிருக்கும் இருக்கைகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மணல்மேடு போலீஸார் அரசுப் பேருந்தை மணல்மேடு காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்து ஓட்டுநரைத் தாக்கிவிட்டு, பேருந்தைச் சேதப்படுத்திய இளைஞர்களை தேடிவருகின்றனர்.
இது குறித்து மணல்மேடு காவல்துறையினரிடம் பேசினோம். ``அடையாளம் தெரிந்த ஆறு பேர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். சரவணன், தினேஷ்குமார் ஆகிய இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். மற்றவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-youngsters-who-were-beaten-government-bus-driver
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக