Doctor Vikatan: காரமான உணவுகள் சாப்பிட்டால் மூலநோய் பாதிப்பு வருமா... அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்
உணவுக்குழாயின் இறுதியிலுள்ள ஸ்டோரேஜ் பகுதிதான் ரெக்டம் எனப்படம் மலக்குடல் குதவாய்ப் பகுதி. அங்கேதான் உணவுக்கழிவுகள் சேமிக்கப்பட்டு வைக்கப்படும். உறியப்படாத உணவுச்சத்துகளை உறிவதற்காக இந்தப் பகுதியில் நிறைய ரத்தக்குழாய்கள் இருக்கும். அதிலும் கெட்ட ரத்தக்குழாய்கள் அதிகமிருக்கும்.
உணவானது செரிமானமாகி, கழிவுகள் இந்தப் பகுதிக்கு வந்து சேரும். இந்நிலையில் ஒரு நபர் மிகக்குறைந்த அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தால், அவருக்கு மலமானது கல் போல இறுகும். நிறைய தண்ணீர் குடிப்பது, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதன் மூலம், மலம் இறுகுவதையும், மலச்சிக்கல், அதன் தொடர்ச்சியாக மூலநோய் வருவதையும் தவிர்க்க முடியும்.
'டிரைவரா வேலை பார்க்கறேன்.... நாள் முழுக்க உட்கார்ந்து டெய்லரிங் வேலை பண்றேன்...' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அதை மூலநோய்க்கான காரணமாக நினைத்துக்கொள்பவர்கள் பலர். அதே போல காரமான வத்தக்குழம்பு சாப்பிடுவது, மட்டன், சிக்கன் சாப்பிடுவதால் உடல் சூடாகிறது, அதனால் மூலநோய் வருகிறது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மலச்சிக்கலுக்கும் மூலநோய்க்கும் பிரதான காரணமே நார்ச்சத்தில்லாத உணவுப்பழக்கமும், தண்ணீர் குடிக்காததும்தான். இந்த இரண்டும் சரியாகப் பின்பற்றப்பட்டாலே மலம் இறுகாது. இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் மருத்துவரை சந்திப்பவர்களுக்கு செயற்கை சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது. இயற்கையான மலமிளக்கி என்றால் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள்தான். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன சாப்பிடவில்லை என்பதுதான் முக்கியம்.
அரை வயிற்றுக்கு சோறு, மீதி அரை வயிற்றுக்கு காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதுதான் சரியானது. ஒரு பிரியாணியை மொத்தமாகச் சாப்பிடாமல் இரண்டு, மூன்று பேர் பகிர்ந்து உண்ணலாம். கூடவே நிறைய காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் பிரச்னையே இருக்காது. முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம்.
அதாவது இவற்றை சாப்பிட்டால் உடனே அவை ரத்தச் சர்க்கரையாக மாற்றப்படும் என்பதால் இவற்றைத் தவிர்த்து, கொய்யா, பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றையும் வெள்ளரிக்காய் உள்ளிட்ட பச்சைக் காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன்குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் கிரேவி என எந்த உணவிலும் காரத்தை அளவோடு பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால் மூலநோய்க்கும் காரத்துக்கும் தொடர்பில்லை. நார்ச்சத்தின்மையும் நீர்ச்சத்தின்மையும் தவிர்க்கப்பட்டாலே மூலநோய் அண்டாமல் தப்பிக்கலாம்.
source https://www.vikatan.com/health/healthy/will-spicy-food-cause-piles
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக