Ad

வியாழன், 26 மே, 2022

விசா முறைகேடு விவகாரத்தில் வசமாக சிக்கியிருக்கிறாரா கார்த்தி சிதம்பரம்?!

263 சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கித் தந்த குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின்மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. `கார்த்தி சிதம்பரம் தேசவிரோதமாகச் செயல்பட்டிருக்கிறார். இது சரியான நடவடிக்கைதான்' என பாஜகவினரும் `இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே. எங்களின் நேர்மையான விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாமல் இப்படி நடந்துகொள்கிறார்கள்' என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர்.

ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம், 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய 263 சீன நாட்டவருக்கு சட்டவிரோதமாக விசா கொடுக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் தமது செல்வாக்கை பயன்படுத்தி அந்த விசாக்களைப் பெற்றுக்கொடுத்தார், அதற்காக 50 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றார் என சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இதேபோல் அமலாக்கப் பிரிவும் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் முடிவில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்ததோடு அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், `` இதில் எனக்கு எந்த பயமும் இல்லை. உயிருடன் இல்லாத ஒருவர் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் என்னையும் இந்த விவகாரத்தில் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் சேர்த்துள்ளன. எனது தந்தையைக் குறிவைத்து, என் மீது சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடுவேன். மேலும், சீனர்களுக்கு விசா வழங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ, அல்லது டெலிபதியாகவோ நான் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. சி.பி.ஐ குற்றச்சாட்டுகள் நகைச்சுவையாக இருக்கிறது. நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது'' என்று கூறப்பட்டிருந்தது.

அறிக்கை

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் நேற்று(26-05-2022) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதனடிப்படையில் டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் முன்பாக கார்த்தி சிதம்பரம் ஆஜராகினார். அவர் கைது செய்யப்படக்கூட வாய்ப்பிருக்கிறது என்கிற தகவல்கள் வெளியாகின. ஆனால், முன்னதாக, கார்த்தி சிதம்பரம் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இக்பால், கார்த்தி சிதம்பரத்தை வரும் 30-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்ததோடு, சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த மனு வரும் 30-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஆனால்,``கார்த்தி சிதம்பரம் இந்த வழக்கில் இருந்து தப்பவே முடியாது. அவர் வசமாகச் சிக்கிக்கொண்டார்'' என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் அஸ்வத்தாமன் நம்மிடம் பேசும்போது,

`` ஒரு நாட்டில் விசா பெறுவது என்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமல்ல. நம் நாட்டில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும்போது எவ்வளவு கெடுபிடிகள் கடைபிடிக்கப்படுகின்றன. காரணம், அது நாட்டின் பாதுகாப்போடு சம்மந்தப்பட்ட விஷயம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் என்ன மாதிரியான செயல்களில் வேண்டுமானால் செயல்படலாம். ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு நேரத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு முறைகேடாக விசா கொடுத்திருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனத் தெரிந்தே இந்த செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால்தான் அரசு இயந்திரங்கள் இந்த விஷயத்தை சீரியஸாக அணுகுகிறார்கள். நாட்டின் பாதுகாப்பில் அஜாக்கிரதையோடு தேசத்துரோக மனப்பான்மையோடு நடந்திருக்கிறார்கள் என்பதும்தான் இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

அஸ்வத்தாமன்

விசா வாங்கியவர்கள் கார்த்திக் சிதம்பரத்துடன் பேசியதற்கான ஆதாரங்கள் எல்லாம் சிக்கியிருக்கின்றன. தவறு செய்ததற்கான முகாந்திரம் இருப்பதால்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகராத்தில் வசமாகச் சிக்கிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை'' என்கிறார் அவர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் லஷ்மி ராமச்சந்திரனிடம் பேசினோம்,

``அரசாங்கத்தின் மீது யார் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும் அவர்கள் மீது வழக்குப் போடுவது, தேசதுரோகி என பழிபோடுவது ஆகியவற்றை வழக்கமாக வைத்திருக்கிறது இந்த அரசாங்கம். ஆனால், தேசதுரோகி என்பதை மக்கள் பெருமையாகத்தான் நினைக்கிறார்கள். காரணம், ஜனநாயகத்தின் அடிப்படையே வெளிப்படைத்தன்மைதான். அதுகுறித்து கேள்விகளை எழுப்பும்போது அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி பழிவாங்குகிறார்கள். சிதம்பரம் போன்ற பெரிய தலைவர்கள் தங்களின் அனுபவத்தின் வாயிலாக மிகவும் நுணுக்கமாக ஆட்சி நிர்வாகத்தில் இவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் பாஜக-வினர் திணறுகிறார்கள்.

லஷ்மி ராமச்சந்திரன்

அதனால் எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்பதற்காக புதிதுபுதிதாக கிரியேட்டிவாக பல வழிகளை யோசிக்கிறார்கள். இந்த விசா வழக்கு தொடர்பாக மிகத் தெளிவான விளக்கத்தை கார்த்தி சிதம்பரம் கொடுத்துவிட்டார். உயிரோடு இல்லாத ஒரு நபர் கொடுத்த வாக்குமூலம் எனச் சொல்லி வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஏற்கெனவே இப்படித்தான் வேறொரு வழக்கில் சிறையிலிருந்த நபர் அளித்த வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுத்தனர். இது போன்ற விஷயங்களில் இந்த அரசு கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினால் மக்கள் பயனடைவார்கள்'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-karthi-chidambaram-visa-scam-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக