மகாராஷ்டிரா மாநிலம், ஒளரங்காபாத்தில் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறை இருக்கிறது. இந்தக் கல்லறை சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது. சமீபத்தில் அசாதுதீன் ஒவைசி இந்த நினைவிடத்துக்கு வந்து சென்றார். அதிலிருந்து இந்த நினைவிடமும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய அல்லது கட்டியதாகக் கருதப்படும் மசூதிகளை அரசு இடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஒளரங்கசீப் கல்லறையையும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா நிர்வாகி கஜானன் காலே இது தொடர்பாக சமூக வலைதளத்தில், ``சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் நிலத்தில் ஒளரங்கசீப் கல்லறையை பாதுகாக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது...
அதனால், இந்தக் கல்லறையை இடித்துத் தள்ளுங்கள். இதன் மூலம் பிரிவினைவாதிகள் (ஒவைசி) இங்கு வர மாட்டார்கள். மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்கச் சொன்னார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல, பா.ஜ.க எம்.எல்.ஏ பிரசாத் லாட் என்பவரும் ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவோம் என மிரட்டியிருக்கிறார். மேலும், `ஒளரங்கசீப் கல்லறைக்குப் போடப்பட்டிருக்கும் கூடுதல் பாதுகாப்பை முதல்வர் உடனே அகற்ற வேண்டும். இதே ஒளரங்கசீப்தான் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சாம்பாஜி மகாராஜாவைத் தூக்கிலிட்டுக் கொலை செய்தான். அதோடு இந்துக் கோயில்களை இடித்துவிட்டு அவற்றில் மசூதி கட்டினான். ஆனால், அவனது கல்லறைக்கு மாநில அரசு பாதுகாப்பு கொடுக்கிறது. இதுதான் சோனியா-சரத் பவார் இந்துத்துவா முறையா?' எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஒளரங்கசீப் கல்லறைக்குக் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே மிரட்டலைத் தொடர்ந்து பராமரிப்புப் பணிகளுக்காக ஒளரங்கசீப் கல்லறை தற்காலிகமாக ஐந்து நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே, ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் மாநிலம் முழுவதும் இருக்கும் ஒளரங்கசீப் பெயர்ப்பலகைகளை அகற்றும்படி அனைத்து மேயர்களையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக, ஒளரங்காபாத்தில் பதற்றம் நிலவுகிறது.
source https://www.vikatan.com/news/india/raj-thackeray-party-and-bjp-threaten-to-demolish-aurangzebs-grave-in-aurangabad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக