சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தைத் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க நிர்வாகிகள் கொண்டாடி வருகிறார்கள். 2019-ல் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற படத்தின் அதிகாரபூர்வமான மறு ஆக்கம்தான் இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம்.
2008-ம் ஆண்டில் தயாரிப்பாளராகத் தனது சினிமாப் பயணத்தைத் தொடங்கிய உதயநிதி 2012-ம் ஆண்டில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் நாயகனாகவும் மாறினார், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நெஞ்சுக்கு நீதி அளவுக்கு தி.மு.க நிர்வாகிகளால் கொண்டாடப்பட்ட படம் எதுவும் இல்லை. அந்தளவு அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் இந்தத் திரைப்படத்தைத் திரையரங்கில் சென்று பார்ப்பதும் அது தொடர்பான செய்திகளைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதுமாக இருக்கிறார்கள்.
தி.மு.க-வினர் கொண்டாடும் அளவுக்கு என்ன இருக்கிறது இந்தப் படத்தில், இந்தக் கொண்டாட்டத்தின் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன..?
“நெஞ்சுக்கு நீதியின் பேரனே! பாத்திரம் சொன்னது படத்தின் கதை, சூத்திரம் தந்தது விடியலின் விதை! நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அல்ல; நிலத்துக்கு நீதி தரும் வரைபடம்! நீண்ட வரலாற்றில் இடம்பெறும் ! நின் பெருமை நாளை வலம்வரும்! படக்குழுவிற்கு வாழ்த்துகள்”
-நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து மடல் இது. புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், காஞ்சிபுரம் மேயர், சட்டமன்ற உறுப்பினர், கரூர் மேயரும் முதல் நாளே இந்தப் படத்தைப் பார்த்துவிட்டார்கள். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஒருபடி மேலே சென்று ஒரு ஷோ-வுக்கான அனைத்து டிக்கட்டுகளையும் புக் செய்து இலவசமாக வழங்கப்படும் என நோட்டீஸே அடித்து வெளியிட்டுள்ளார். இவர்கள் மட்டுமல்ல மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எனக் கட்சியினர் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து இந்தப் படத்தைப் பார்த்துச் செல்கிறார்கள். திரைப்படத்தைப் பார்க்க வருபவர்களுக்குப் பரிசுக் கூப்பன், மரக்கன்று, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை வாழ்த்தி பேனர் வைத்த பெரம்பலூர் ஆயுதப் படை தலைமைக் காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி முதல் நாளே பெரியளவில் அட்ராசிட்டியில் இறங்கி திரையரங்கங்களை அதிர வைத்துவிட்டார்கள் தி.மு.க-வினர்.
எப்போதும் இல்லாத வகையில் இந்தப் படத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு வரவேற்பு என அறிவாலயம் பக்கம் விசாரித்தோம். “அடுத்த அதிகார மையம் உதயநிதி என்பது எல்லோருக்கும் தெரியும். பிறகேன் கொண்டாட மாட்டார்கள்” என்றவர்கள்... “‘மாமன்னன் படத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன்’ என உதயநிதியே சொல்லிவிட்டதால் அவர் விரைவில் அமைச்சராக உள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. கட்சியில் அதையொட்டி மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் ஏற்படலாம். அதேபோல, அமைச்சரவையில் தங்களுக்கான இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாலேயே இப்படி ஒவ்வொருவரும் திரைப்படத்தைச் சென்று பார்ப்பதும் அது குறித்து செய்திகளைப் பரப்புவதுமாக இருக்கிறார்கள். மற்றபடி இவர்களுக்கு சினிமா மீதெல்லாம் அவ்வளவு ஆர்வமில்லை.” எனத் தி.மு.க-வின் இந்தப் படத்தைக் கொண்டாடுவதன் பின்னணியை விவரித்தனர்.
“நெஞ்சுக்கு நீதி என்பது தி.மு.க-வினருக்கு முக்கியமான வார்த்தை. தலைவர் கலைஞரோடு தொடர்புடைய வார்த்தை. அதைத் திரைப்படமாக இல்லை. வெறும் வார்த்தையாகவே கொண்டாடுவோம். உதயநிதி நடித்திருப்பதால் தி.மு.க-வினருக்கு கூடுதல் மகிழ்ச்சி. அதை வெளிப்படுத்துகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு திரைப்படத்தைக் கொண்டாடுவதையெல்லாமா அரசியலாகப் பார்க்க வேண்டும். காலம் செல்லச் செல்ல தி.மு.க-வினர் என்ன செய்தாலும் அதிலும் குற்றம் கண்டுபிடிப்பார்கள் போல” என நெஞ்சுக்கு நீதியைத் தி.மு.க-வினர் கொண்டாடுவதில் இருக்கும் நியாயத்தைச் சொல்கின்றனர் மற்றொரு தரப்பினர்.
எது ஒன்றையும் கொண்டாடுவதும் விமர்சனம் செய்வதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் அடுத்தவரைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். நெஞ்சுக்கு நீதி பேசும் அரசியல் கவனிக்கப்பட வேண்டியது. கொண்டாடுகிறோம் எனத் தி.மு.க-வினர் செய்யும் செயல்களால் அந்தத் திரைப்படம் அதன் இலக்கிலிருந்து விலகிவிடக் கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பம்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-reason-behind-dmk-celebrating-nenjuku-needhi-movie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக