Ad

ஞாயிறு, 8 மே, 2022

பணத்துக்காக முதிய தம்பதி கடத்திக் கொலை! - 5 மணி நேரத்தில் சிக்கிய கார் ஓட்டுநர் - என்ன நடந்தது?

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த்(60) - அனுராதா(55) தம்பதியினர். இவர்கள் அமெரிக்காவில் படித்து வரும் தங்கள் மகள் சுனந்தா, மகன் சஸ்வத் இருவரையும் சந்தித்துவிட்டு, சென்னை திரும்பினர். இருவரையும் அவர்களின் கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், அந்த தம்பதியின் மகன் சஸ்வந்த் தனது பெற்றோரைத் தொடர்புகொண்ட போது, அவர்களின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து, மீண்டும் சிறிது நேரம் கழித்து அவர்களைத் தொடர்பு கொண்டபோது ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்திருக்கின்றனர். இதனால், சந்தேகமடைந்த சஸ்வந்த், உடனடியாக சென்னையில் இருக்கும் தங்களது உறவினர்களிடம் தகவல் சொல்லி வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார்.

உறவினர்கள் மயிலாப்பூரில் உள்ள அவர்களின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது கதவை யாரும் திறக்கவில்லை.

அதையடுத்து, உறவினர்கள் அக்கம்பக்கம் இருப்பவர்களின் உதவியுடன் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் சூட்கேஸ் திறக்கப்பட்ட நிலையில், லாக்கரில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

அதைக் கண்டு பதறிப்போனவர்கள், முதிய தம்பதியை கார் ஓட்டுநர் கடத்திவிட்டதாகக் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தம்பதியைக் கொலைசெய்த கார் ஓட்டுநர் கிருஷ்ணா, அவர் நண்பர் இருவரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக ஆந்திர போலீஸார், சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதன்பேரில், ஆந்திரா விரைந்த தனிப்படை போலீஸார் அங்கு மடக்கி வைக்கப்பட்டிருந்த கொலையாளிகளைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து தம்பதி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 1,000 சவரன் தங்க நகைகள், 500 கிலோ வெள்ளி பொருள்கள், 2 செல்போன்கள் மற்றும் இன்னோவா கார் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையாளிகளைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/a-couple-murdered-in-chennai-mylapore-and-killers-were-arrested-within-5-hrs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக