நடப்பு சீசனின் மிகச்சிறப்பான போட்டிகளில் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியை லக்னோ அணியே வென்றிருக்கிறது. கடைசி பந்து வீசப்பட்ட கடைசி நொடி வரை போட்டி பரபரப்பாகவே சென்று முடிந்திருந்தது. லக்னோ அணி சார்பில் டீகாக்கும் கே.எல்.ராகுல் ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர்.
குறிப்பாக, டீகாக் சதமடித்து அதகளப்படுத்தியிருந்தார். நம்முடைய டி.ஆர் மட்டும் அந்த டீ.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இருந்திருந்தால் டீகாக்கை பார்த்து 'இது அசரா புலி, இது அசத்தும் புலி, இது சரித்திர புலி, இது லக்னோவின் லக்கி புலி' என ஒரு கவிதையே பாடியிருப்பார். அந்தளவுக்கு டீகாக் பிரித்தெடுத்திருந்தார். ஆனால், கொஞ்சம் பிசகியிருந்தாலும் போட்டியின் ரிசல்ட்டுமே லக்னோவிற்கு புலி படத்தின் ரிசல்ட்டை ஒத்ததாக வந்திருக்கக்கூடும். ஜஸ்டு மிஸ்ஸில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுவிட்டார்கள்.
லக்னோ அணி கடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 179 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்றிருக்கும். Post Match Presentation-ல் பேட்ஸ்மேன்கள் மீது ராகுல் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியிருப்பார். இந்தப் போட்டியிலும் அப்படி ஒரு பேட்டிங் சொதப்பல் நிகழக்கூடாதெனில் வேறு யாருக்கும் பேட்டிங்கே கொடுக்க வேண்டாம். நாமே முழுமையாக ஆடி விடுவோம் என டீகாக்குடன் ராகுல் டீல் போட்டிருக்கக்கூடும். அதன்படியே, இணைந்த கைகளாக இருவரும் சேர்ந்து 20 ஓவர்களையும் முழுமையாக விக்கெட்டே விடாமல் ஆடி முடித்துவிட்டனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோவின் ஸ்கோர் 210-0.
ராகுல் 70 பந்துகளில் 140 ரன்களையும் டீகாக் 51 பந்துகளில் 68 ரன்களையும் அடித்திருந்தனர்.
உமேஷ் யாதவ் வீசிய மூன்றாவது ஓவரிலேயே டீகாக் தேர்டு மேனில் ஒரு கேட்ச்சை கொடுத்திருப்பார். ஆனால், அபிஜித் தோமர் அந்த கேட்ச்சை கோட்டைவிட்டிருப்பார். இது மிகப்பெரும் தவறாக அமைந்துவிட்டது. அதன்பிறகு, டீகாக்கோ ராகுலோ இப்படி ஒரு வாய்ப்பை கொடுக்கவே இல்லை. நெட்டில் பயிற்சி செய்வது போல இலகுவாக ரொம்பவே சுலபமாக கொல்கத்தாவின் பௌலர்களை எதிர்கொண்டனர். ஒரு 15வது ஓவர் வரைக்குமே விக்கெட் விடாமல் இருந்தாலும் இருவரும் பெரிதாக அதிரடியாக ஆடியிருக்கவில்லை.
முதல் 15 ஓவர்களில் 4 ஓவர்களில் மட்டுமே 10 ரன்களுக்கு மேலே எடுத்திருந்தனர். நரைன், வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் ராணா என ஸ்பின்னர்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் என ஸ்பின்னர்கள் தொடர்ச்சியாக வீசிய சமயத்தில் கொஞ்சம் நிதானமாக பார்த்தே ஆடியிருந்தனர். ஸ்கோர் சீராக உயர்ந்துக்கொண்டே இருந்தது. 15 ஓவர்களில் 122 ரன்களை எடுத்திருந்தனர். இதன்பிறகுதான், ஆட்டமே சூடுபிடித்தது. டீகாக் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேட்டைச் சுழற்ற ஆரம்பித்தார்.
கடைசி 5 ஓவர்களில் மட்டும் லக்னோ அணி 88 ரன்களை சேர்த்திருந்தது. இந்த 88 ரன்களில் 77 ரன்களை டீகாக் மட்டுமே அடித்திருந்தார்.
வருண் சக்கரவர்த்தி வீசிய 16 ஓவரில் 18 ரன்கள் வந்திருக்கும். இரண்டு சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் டீகாக் அடித்திருப்பார். ரஸலின் 18வது ஓவரில் 15 ரன்கள் வந்திருக்கும் ஒரு சிக்ஸரையும் ஒரு பவுண்டரியையும் அடித்திருப்பார். டிம் சவுத்தியின் 19 வது ஓவரில் 27 ரன்கள் வந்திருக்கும். இதில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்திருந்தார். ரஸலின் 20வது ஓவரில் 19 ரன்கள். இதில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை அடித்திருப்பார்.
இந்த சீசனில் தனிநபர் ஒருவரின் அதிகப்பட்ச ஸ்கோராக டீகாக்கின் 140 ரன்கள் பதிவானது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக டீகாக் - ராகுல் கூட்டணியின் 210 ரன்கள் பதிவானது. எல்லாவற்றுக்கும் விதை அபிஜித் தோமரின் அந்த கேட்ச் ட்ராப்!
கொல்கத்தாவிற்கு 211 ரன்கள் டார்கெட். பிளேஆஃப்ஸ் ரேஸில் நீடிக்க வேண்டுமெனில், இந்தப் போட்டியை வென்றால் மட்டும் போதாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வென்று ரன்ரேட்டையும் உயர்த்த வேண்டும். ஆனால், இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த போட்டிக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஓப்பனிங் அந்த அணிக்குக் கிடைக்கவில்லை. லக்னோவின் ஓப்பனர்கள் 20 ஓவர்களுக்கும் ஆட்டமிழக்காமல் நிற்க, கொல்கத்தாவின் ஓப்பனர்களோ மூன்றே ஓவர்களில் காலியாகினர். வெங்கடேஷ் ஐயர், அபிஜித் தோமர் என கொல்கத்தாவின் ஓப்பனர்கள் இருவரையுமே மோஷின் கான் தனது முதல் ஸ்பெல்லிலேயே அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும் கொல்கத்தா ஓயவில்லை. வெற்றியோ தோல்வியோ ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். நிதிஷ் ராணாவும் ஸ்ரேயாஸ் ஐயரும் இறங்கி வெளுத்தெடுத்தனர். ஆவேஷ் கானின் ஓவரில் 5 பவுண்டரிகள் கிருஷ்ணப்பா கௌதமின் ஓவரில் மூன்று பவுண்டரிகள் எனத் தொடர்ச்சியாக அடித்து ஸ்கோரை சரசரவென உயர்த்தினார் ராணா. 22 பந்துகளில் 42 ரன்களை அடித்து ராணா கௌதமின் பந்திலேயே அவுட்டும் ஆகியிருந்தார். ராணா சென்றாலும் ஸ்ரேயாஸின் அதிரடி ஓயவில்லை. ஹோல்டர், ஆவேஷ் கான், பிஷ்னோய் என அத்தனை பேரையும் அட்டாக் செய்து அரைசதம் கடந்தார். கொல்கத்தா 12 ஓவர்களில் 125 ரன்களை எடுத்திருந்தது. போட்டி கொல்கத்தாவின் கட்டுக்குள்ளேயே இருந்தது.
இந்தச் சமயத்தில்தான் மோஷின் கானின் கைக்கு மீண்டும் பந்து சென்றது. 13வது ஓவரை வீசிய மோஶின் கான் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஸ்லோயர் ஒன்களாக, சிறப்பாகக் கட்டுக்கோப்பாக வீசியிருப்பார். 10, 11, 12 இந்த 3 ஓவர்களில் கொல்கத்தா அணிக்கு 46 ரன்கள் கிடைத்திருந்தன. வேகத்தடையாக திடீரென மோஷின் கானின் இந்த ஓவர் வர, கொல்கத்தா அடுத்தடுத்த ஓவர்களில் திணற தொடங்கியது. ஸ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ரஸல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ரஸலின் விக்கெட்டையும் மோஷின் கானே வீழ்த்தியிருந்தார். போட்டி இப்போது லக்னோவின் கைக்குள் வந்தது. ஆனால், அது அப்படியே தொடரவில்லை.
கடைசி 3 ஓவர்களில் ரிங்கு சிங்கும் நரைனும் மீண்டும் கொல்கத்தாவை தலை நிமிரச் செய்தனர். இருவருமே சிக்ஸர்களாகப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தனர்.
ஸ்டொய்னிஸ் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் நான்கு பந்துகளிலேயே இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் ரிங்கு சிங் 18 ரன்களைச் சேர்த்திருப்பார். இப்போது 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவை. சுலபமான காரியம். ஆனால், மீண்டும் ஒரு ட்விஸ்ட் நடந்தது. ஐந்தாவது பந்தில் ரிங்கு சிங் பெரிய ஷாட்டுக்கு முயல அது சரியாக க்ளிக் ஆகாமல் டீப் பாய்ண்ட்டில் நின்ற எவின் லீவிஸிடம் கேட்ச் ஆகியிருப்பார்.
கேட்ச் என்றால் சாதாரண கேட்ச் இல்லை. அட்டகாசமான கேட்ச். பவுண்டரி லைனிலிருந்து ஓடி வந்து விழ்ந்து வாரி இடது கையில் நேர்த்தியாகப் பிடித்திருப்பார். இந்த சீசனின் மிகச்சிறந்த கேட்ச் எனச் சொல்வதற்கான அத்தனை தகுதியையும் உடையது.
கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டொய்னிஸ் ஒரு வெறித்தனமான யார்க்கரில் உமேஷ் யாதவை போல்டாக்கியிருப்பார். லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பாகச் வென்றது.
என கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருந்தார். ஆனால், நல்ல குணாதிசயத்தை காட்டியதற்கெல்லாம் 2 புள்ளிகளைக் கொடுக்க முடியாதென்பதால் அடுத்த சீசனுக்கான 'ஆல் தி பெஸ்ட்' ஐ மட்டும் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். கொல்கத்தா வெளியே செல்ல, லக்னோ இரண்டாவது அணியாக பிளேஆஃப்ஸூக்குள் காலடி எடுத்து வைத்தது.
source https://sports.vikatan.com/ipl/dekocks-record-breaking-century-helped-lucknow-to-enter-playoffs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக