Ad

வெள்ளி, 27 மே, 2022

`வீட்டில் போய் சமையல் செய்யுங்கள்!' - சுப்ரியா சுலேவை பேசிய பா.ஜ.க தலைவர், வலுக்கும் எதிர்ப்பு!

மகாராஷ்டிராவில் நடந்த போராட்டம் ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) பெண் தலைவர் சுப்ரியா சுலேவை, 'அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையலை கவனியுங்கள்' என்று ஆணாதிக்கத்துடன் பேசியிருப்பது, சர்ச்சை, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சுப்ரியா சுலே

மகாராஷ்டிராவில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் சுப்ரியா சுலே, 'மத்திய பிரதேச முதல்வர் டெல்லிக்கு வந்து 'யாரையோ' சந்தித்தார். அடுத்த இரண்டு நாள்களில் திடீரென்று என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. திடீரென இடஒதுக்கீட்டிற்கான அனுமதியைப் பெற்றனர்' என்று பேசியிருந்தார். மேலும், மகாராஷ்டிராவின் ஓபிசி கோட்டாவுக்கான போராட்டத்தை மத்திய பிரதேசத்துடன் ஒப்பிட்டுப் பேசிய சுப்ரியா சுலே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றத்திடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிராவில் நடந்த இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில் பேசிய மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சுப்ரியா சுலேவுக்கு பதிலளிக்கையில், பாலின அடக்குமுறையுடன், 'உங்களுக்கு அரசியல் வரவில்லை. நீங்கள் வீட்டிற்கு சென்று சமையலை கவனியுங்கள்' என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், 'டெல்லிக்கோ, கல்லறைக்கோ போங்கள், ஆனால் எங்களுக்கு ஓபிசி ஒதுக்கீட்டைப் பெறுங்கள். லோக்சபா உறுப்பினரே, உங்களுக்கு எப்படி முதலமைச்சரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவது என்று தெரியவில்லையா?' என்று பேசியுள்ளார்.

சந்திரகாந்த் பாட்டீல்

சந்திரகாந்த், சுப்ரியா சுலேவை சமையல் செய்யச் சொல்லி பேசியதற்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், சந்திரகாந்த் பாட்டீலின் கருத்துகளை கடுமையாகச் சாடியுள்ளனர்.

சுப்ரியா சுலேயின் கணவர் சதானந்த் சுலே தன்னுடைய சமூக வலைதளத்தில், 'இந்தியாவில் உள்ள பல கடின உழைப்பாளி மற்றும் திறமையான பெண்களில் ஒருவரான, இல்லத்தரசி, தாய் மற்றும் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியான என் மனைவியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், பா.ஜ.க தலைவர் கூறியுள்ள கருத்து அனைத்துப் பெண்களையும் அவமதிக்கும் செயலாகும்' என்று கருத்திட்டுள்ளார்.

சுப்ரியா சுலே

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாட்டீல், 'பெண்களை மதிப்பது என் இயல்பிலேயே உள்ளது. நான் பேசியது, கிராமத்தில் பழமொழிகள் பேசுவதுபோன்றது. நான் சுப்ரியாவை மிகவும் மதிக்கிறேன், நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/india/maharashtra-bjp-chief-condemned-for-go-home-and-cook-remark-at-supriya-sule

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக