முகத்தில் அதிகப்படியான பரு இருந்த காரணத்தால் திருமணம் தள்ளிப்போனதால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், பாண்டா மாவட்டத்தில் உள்ள அஜிட் பரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தன் முகத்தில் இருந்த அதிகளவிலான பரு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்த வண்ணம் இருந்துள்ளனர். ஆனால் திருமணம் நிச்சயம் ஆகாமலே இருந்துள்ளது. இதற்கு தன் பரு பிரச்னைதான் காரணம் என நினைத்த அவர், திங்கட்கிழமையன்று தன்னுடைய வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியில் சென்றிருந்த ராணியின் தாயும், சகோதரியும் வீட்டிற்கு வந்து, வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு உணவளிக்க உணவு எடுக்கச் சென்றபோது ராணி தற்கொலை செய்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதன்பின் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலை குறித்து இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறும்போது, 'பல மருத்துவ சிகைச்சைகள் மேற்கொண்டபோதும், பரு பிரச்னை சரியாகவில்லை. மேலும் திருமணப் பேச்சு வார்த்தையின்போதும், பரு பிரச்னையை காரணம் காட்டி திருமணம் தடைபட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால்தான் தற்கொலை செய்து கொண்டார்'' என்று துயரத்துடன் கூறுகின்றனர்.
இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் பிசண்டா காவல் நிலைய அதிகாரி கூறுகையில், 'வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம், பிரேத பரிசோதனை முடிந்ததும் தான் மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்த முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/india/up-woman-committed-suicide-depressed-of-her-pimple-problem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக