வெல்கம் டு தி கடைசி லீக் போட்டி ஆஃப் தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ. இந்தப் போட்டி ஏன் நடக்கிறது என்கிற கேள்வி எல்லோருக்குமே இயல்பாய் இருக்கும். ஆனாலும், கிரவுண்டில் ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது. சமூக வலைதளங்களில்தான் எந்தவொரு அறிகுறியுமே தென்படவில்லை. சும்மாவே இந்த அணிகள் விளையாடினால் கண்டுகொள்ளாத ரசிகர்கள் இன்று மட்டும் கண்டுகொள்வார்களா என்ன என்பதும் ஒரு விஷயம்.
எப்போதும் ஐ.பி.எல் சீசன்கள் டெட் ரப்பர் எனப்படும் போட்டிகள் இருக்கும். அதற்கு முந்தைய போட்டியின் முடிவினால் இப்படியான திருப்புமுனைகள் நடக்கும். குவாலிஃபை ஆன அணிகள் கொல்கத்தாவுக்குச் செல்ல பெட்டி படுக்கையை பேக் செய்து கொண்டிருக்க, எலிமினேட் ஆன இரண்டு அணிகள் இன்னும் இரண்டு பாயிண்டுகளை எடுக்க போட்டிப் போட ஆயுத்தமாகினர்.
குடும்பத்தில் நிகழும் மங்களகரமான விஷயத்துக்காக சீர் எடுத்துக்கொண்டு நியூஸிலாந்துக்கு கேன் வில்லியம்சன் பறந்துவிட, கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் புவனேஷ்வர் குமார். ஆனாலும், வில்லியம்சன் டாஸ் வெல்லும் மேஜிக்கைச் சொல்லிவிட்டுச் சென்றிருப்பார் போல. புவியும் டாஸ் வென்றுவிட்டார். வில்லியம்சன், நடராஜனுக்குப் பதிலாக சுசித்தும், ஷெபர்டும் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் XI: அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெபர்டு, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஃபரூக்கி, உம்ரான் மாலிக், சுசித்
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் XI: ஜானி பேர்ஸ்டோ, தவான், மயாங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், நாதன் எல்லிஸ், ரபாடா, பிரேரக் மன்கட், அர்ஷதீப் சிங்
அபிஷேக்கும், பிரியம் கார்கும் ஓப்பனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் லிவிங்ஸ்டன். முதலிரண்டு ஓவர்களில் இரு பக்கமும் பெரிய சேதாரமில்லை. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய ரபாடாவின் பந்தில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கார்க். அபிஷேக்கும், ஒன் டவுனில் வந்த ராகுல் திரிபாதியும் ஓவருக்கு ஒரு பவுண்டரி என டீல் செய்து கொண்டிருந்தார்கள். எல்லிஸ் வீசிய பவர்பிளேவின் கடைசி ஓவரில் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் ராகுல். அடுத்த ஓவரிலேயே டீப் மிட் விக்கெட் திசையில் தன் பங்குக்கு ஒரு சிக்ஸ் அடித்தார் அபிஷேக்.
அடுத்த ஹர்ப்ரீத் பிரார் ஓவரில் தன் விக்கெட்டை பறி கொடுத்தார் ராகுல். லெக்கில் வந்த பந்தை ஷார்ட் ஃபைன் லெக் பக்கம் ஸ்வீப் அடிக்க முயல, அது அங்கு நின்றுகொண்டிருந்த தவானிடம் சென்று விழுந்தது. என்னடா இது என்பதாக, பேட்டை காற்றில் சுழற்றிக்கொண்டே சென்றார் ராகுல். இனி சுழற்றி என்ன பிரயோசனம் ராகுல்ஜீ! யார் அவுட் ஆனாலும் சிக்ஸ் அடிப்பதை நிறுத்த மாட்டேன் என லிவிங்ஸ்டன் ஓவரில் 89 மீட்டருக்கு ஒரு சிக்ஸை அடித்தார் அபிஷேக். ஆனால், அந்த அபிஷேக்குக்கும், ஒரு பொடி வைத்திருந்தார் பிரார். அவர் வீசிய பந்தை இன்னொரு சிக்ஸாக்க ஓங்கி அடித்தார் அபிஷேக். ஆனால் அங்கு ரெடியாக நின்றுகொண்டிருந்தார் லிவிங்ஸ்டன். தாவிக் குதித்து பின் தரையில் சேஃப்ட்டி லேண்ட் ஆனார். கேட்சும் பிடிக்கப்பட்டது. பூரன், எல்லிஸ் ஓவரில் கீப்பர் கேட்ச் முறையில் வழக்கம் போல பொறுப்பில்லாமல் ஆடி அவுட்டாகி நடையைக் கட்டினார்.
அணியில் இருந்த கடைசி பேட்ஸ்மேனான மார்க்கரமுக்கும் ஐடியா வைத்திருந்தார் பிரார். பந்தை அடிக்க முயன்ற மார்க்கரம் நிலை தடுமாற, அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்டம்பிங் செய்தார் கீப்பர். 96 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஹைதராபாத். ஆனால், ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றினார்கள் வாஷிங்டன் சுந்தரும், ஷெபர்டும். எல்லிஸ் ஓவரில் சுந்தர் ஒரு பவுண்டரி அடிக்க, ஷெபர்டு பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். அடுத்த ரபாடாவின் ஓவரில், லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் வாஷிங்டன். அடுத்த எல்லிஸின் ஓவரில் லாங் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்தார் ஷெபர்டு. ஆனால், அதே ஓவரில் சுந்தரும், சுசித்தும் அவுட்டாக, நோபாலில் ரன் அவுட்டானார் புவி. அடுத்த வந்த உம்ரான் மாலிக்கை போல்டாக்கினார் எல்லிஸ். ஆனால் அது ஃப்ரீ ஹிட் என்பதால் மாலிக் சேஃப்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களம் இறங்கியது பஞ்சாப். இரவு 11 மணி ரயிலைப் பிடித்துவிடும் உத்வேகத்தில் வேகமாக ஆடினர் பஞ்சாப் வீரர்கள். கேப்டன் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகள் அடித்தார் பேர்ஸ்டோ. பேட்டிங்கில் மாயாஜாலங்கள் காட்டிய சுந்தர் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசினார். பேர்ஸ்டோவே பேட்டிங் பிடிக்கட்டுமே என நினைத்த தவான் சிங்கிள் தட்டிவிட்டார். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால், தவான் டக் அவுட்டுக்கே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். அந்த ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள். அடுத்த ஓவரை வீசினார் ஃபரூக்கி. நேராக வந்த பந்தை அடிக்க முற்பட்டு அது மிஸ்ஸாக, ஸ்டம்புகள் சிதறின. ஐந்து பௌண்டரிகளுடன் வெளியேறினார் பேர்ஸ்டோ.
ஐபிஎல்லில் முதல் முறையாக ஒன் டவுனில் உள்ளே வந்தார் தமிழக வீரர் ஷாருக் கான். புவி ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த ஃபரூக்கி ஓவரில் மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி. ஒரு காலத்தில் 150 ரன்கள் அடித்துவிட்டாலே சன்ரைசர்ஸ் அணியை யாரும் சேஸ் செய்ய முடியாது. அந்த அளவுக்கு அந்த அணியின் பௌலிங் அபாரமாக இருக்கும். ஆனால், இந்தப் போட்டியில் அப்படி எதுவுமே நடக்கவில்லை . பள்ளி அணியை டீல் செய்வது போல டீல் செய்தது பஞ்சாப். ஃபீல்டிங்கும் படு மோசம். சுசித் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் ஷிகர் தவான்.
உம்ரான் மாலிக் வீசிய முதல் பந்தை நேராக பவுண்டரிக்கு அனுப்பி வரவேற்றார் ஷாருக். அதே சமயம், அவர் வீசிய 144 கிமீ வேக பந்தை லாங் ஆன் பக்கம் அடிக்க முயல், அது அங்கிருந்த வாஷிங்டன் சுந்தரிடம் சென்றது. அடுத்த வாஷிங்டன் சுந்தர் ஓவரில் கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் அவுட். ரைட்டு நல்லது நடக்கப்போகுது போல, என நினைத்த நேரத்தில் உள்ளே வந்த லிவிங்ஸ்டன் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸராக்கினார். சுந்தரின் பந்தை டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸராக்கியவர்; அடுத்த உம்ரான் மாலிக் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். 153 கிமீ வேகத்தில் பந்தை மிட் ஆஃப் திசையில் இருந்த விளம்பரப் பலகையின் பக்கம் சிக்ஸ்ராக்கினார்.
தவான் அவுட்டானதும் உள்ளே வந்த ஜிதேஷ் ஷர்மா வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தினார். ஃபரூக்கி தவானை போல்டாக்கிய ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து அமர்க்களப்படுத்தினார் ஜித்தேஷ். அடுத்த சுசித் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 250+ ஸ்டிரைக் ரேட்டில் அவரும் ஆட்டமிழந்தார். 36 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்னும் நிலையில், இதற்கு எதற்கு 36 பந்துகள் எனக் கணக்குப்போட்டார் லிவிங்ஸ்டன்.
ஷெபர்டு அவர் கோட்டாவில் முதல் ஓவரை வீசினார். முதல் பந்து ஒய்டு. அடுத்த பந்து பவுண்டரி. நான்காவது பந்தில் லிவிங்ஸ்டன் ஒய்டு லாங் ஆஃப் பக்கம் 97 மீட்டரில் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த சீசனில் 1000வது சிக்ஸராகவும் அதுவே மாறிப்போனது. அடுத்த பந்தை உம்ரான் மிஸ்ஃபீல்டு செய்ய, அதுவும் பவுண்டரி ஆனது. அடுத்து மீண்டும் ஒரு சிக்ஸ். தேவைப்பட்ட 25 ரன்களில் 23 ரன்களை ஒரே ஓவரில் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் லிவிங்ஸ்டன்.
ஆட்டநாயகனாக ஹர்ப்ரீத் பிரார் தேர்வு செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டுக்குப் பிறகு சூப்பர் ஓவரே இல்லாமல் லீக் தொடர்கள் முடிவடைந்திருக்கின்றன.
source https://sports.vikatan.com/ipl/ipl-2022-livingstone-and-brar-shine-in-this-dead-rubber
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக