கல்விக்கு பெயர் பெற்றது நாமக்கல் மாவட்டம். இங்கு, ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 200 மையங்களில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல், பதினோறாம் வகுப்புக்கான தர்வு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு ஜி.டி.ஆர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அரசு தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) பொன்.குமார் நேற்று முன்தினம் கொல்லிமலைக்கு ஆய்வு பணிக்காக சென்றார். அப்போது, வாழவந்தி நாட்டிலுள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்திருந்ததை பார்த்திருக்கிறார். அவருக்கு ஏதோ பொறி தட்ட, அந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்றிருக்கிறார். அவர் அங்கு சென்று பார்த்த போது, மைக்ரோ பிட் என்னும் சிறிய வகையில் பாடப் புத்தகத்தில் இருந்து மாணவர்கள் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அதைக் கண்டு அதிர்ச்சியான அவர், உடனடியாக அந்த கடையில் இருந்த அவற்றை பறிமுதல் செய்தவர், ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், மாணவ மாணவிகளிடம் இருந்து சுமார் அரை கிலோ எடை அளவில் ஜெராக்ஸ் பிட்டுகளை அவர் பறிமுதல் செய்தார். மாணவர்களின் நலன் கருதி, அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது. அதேபோல், நேற்று (17 - ம் தேதி) காலை 9.30 மணியளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் முன்னதாகவே மாணவர்களிடம் இருந்து பிட் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் ஜெராக்ஸ் கடைகளில் பொதுத்தேர்வுக்கான பிட் தயாரித்து கொடுக்கப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் அரசுத் தேர்வுகள் பறக்கும் படையினர் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக மையங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான பிட் பேப்பர்கள் கைப்பற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஜெராக்ஸ் கடைகளில் மாணவர்களுக்கு பிட் தயாரித்து தந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/in-namakkal-educational-officer-found-students-preparing-micro-bit-for-public-exam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக