Ad

ஞாயிறு, 8 மே, 2022

SRH v RCB: இந்த சீசனில் 3வது முறையாக கோல்டன் டக்கான கோலி; தொடர் காயங்களால் இறங்குமுகத்தில் ஐதராபாத்!

தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகள் பெற்ற ஒரே அணி, திடீரென எல்லாவற்றையும் இழந்து வருகிறது. முதல் இரண்டு தோல்விகளுக்குப் பின்னர் ஐதராபாத்துக்கு எல்லாமே ஏறுமுகமாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் புவி பார்த்துக்கொள்ள, இடையில் ஸ்டம்புகளைத் தகர்ப்பதில் நடராஜனும், உம்ரான் மாலிக்கும் போட்டி போட்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் ஒரே பிரச்னை கேப்டன் கேன் வில்லியம்சனின் மித வேகமான பேட்டிங்தான். இந்த சீசனில் 150 பந்துகளுக்கு மேல் ஆடியவர்களில் மிக மோசமான ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பது வில்லியம்சன்தான்.

ஆனால், காயங்கள் எனக்கு பல நூறு இருக்கு என்பதாக சில நாள்களிலேயே எல்லாம் ஐதராபாத்துக்கு மாறிவிட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பட்ட கையிலேயே மீண்டும் பட்டது. பந்துவீச்சில் இருந்து முழுமையாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது. நடராஜனுக்கும் காயம்தான். குறைவான ரன்களில் எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி பெறும் வித்தையறிந்த சன் ரைசர்ஸ், 202, 207, 199 என ரன்களை வாரி வழங்க ஆரம்பித்தது. குஜராத், சென்னை, டெல்லி, பெங்களூரு என எல்லா பக்கங்களிலிருந்தும் ஐதராபாத் அடிவாங்குகிறது. அடுத்த போட்டி வட கிழக்கு மாநிலமான கொல்கத்தாவிடம்... அந்தத் திசையில் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது.

கோலி, மேக்ஸ்வெல் | SRH v RCB

மதிய நேர போட்டிகள் என்றாலே, டாஸ் வென்றால் பேட்டிங் என்பதுதான் இந்த சீசனின் தாரக மந்திரமாக இருக்கிறது. பிட்ச் ரிப்போர்ட் வாசித்த மேத்யூ ஹெய்டனும் அப்படியே எதிர்பார்த்தார். டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டு ப்ளெஸ்ஸியும் அதையே செய்தார். கேன் வில்லியம்சன் டாஸ் தோற்பதே அபூர்வமாக இருந்த சீசனில், டாஸில் அவர் தோற்றது பற்றி இரு கேப்டன்களுமே பேசினார்கள். பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்ரேயாஸ் கோபாலுக்குப் பதிலாக சுசித்தும், சியான் அபோட்டுக்குப் பதிலாக ஃபரூக்கியும் ஐதராபாத்தில் சேர்க்கப்பட்டனர்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் XI: கேன் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மர்க்ரம், பூரன், சஷாங் சிங், சுசித், கார்த்திக் தியாகி, புவனேஷ் குமார், உம்ரான் மாலிக், ஃபரூக்கி
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு XI: டு ப்ளெஸ்ஸி, கோலி, ராஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சபாஷ் அஹமது, ஹசரங்கா, ஹர்சல் படேல், சிராஜ், ஹேசல்வுட்

சிக்ஸரும், பவுண்டரிகளும் பறக்கும்; 175 ரன்கள் எதிர்பார்க்கலாம் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்ட மைதானத்தில் கோலியும் டு ப்ளெஸ்ஸியும் ஓப்பனிங் இறங்கினார்கள். முதல் ஓவரை வீசினார் சுசித். பேடுக்கு வீசப்பட்ட பந்தை லெக் சைடில் திருப்பினார் கோலி. ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த கேன் வில்லியம்சன் இதை எளிதாக கேட்ச் பிடித்தார். இந்த சீசனில் மூன்றாம் முறையாக கோல்டன் டக் ஆனார் கோலி. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக கோல்டன் டக் பெற்ற வீரர்களில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார் கோலி. இதுவரையில் ஆறு கோல்டன் டக் வரிசையில் கம்பீர், பார்த்தீவ், ஏபி டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, அஷ்வின் மட்டுமே இருந்தார்கள். அவர்களுடன் இணைந்துகொண்டார் கோலி.

Du Plessis | SRH v RCB

ஒரே சீசனில் மூன்று கோல்டன் டக் என்பதும் கோலி மட்டுமே செய்த சாதனை அல்ல. ரோஹித் ஷர்மா, ரெய்னா, ரானா என பலர் இப்படி ஒரே சீசனில் மூன்று முறை கோல்டன் டக் அவுட்டாகி இருக்கிறார்கள். ஆனாலும், தொடர்ச்சியாக பல பௌலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கோலி இப்படி ஃபார்ம் அவுட்டில் இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கோலி இன்னும் 1 ரன் அடித்தால், ஐபிஎல் வரலற்றில் 6500 ரன்கள் அடித்த முதல் வீரர் ஆவாராம். ஆனால், அதை எப்போது அடிப்பார் என்றுதான் தெரியவில்லை. முதல் ஐந்து ஓவரில் மேலும் விக்கெட் விழாமல் டு ப்ளெஸ்ஸியும், ரஜத் படிதாரும் பார்த்துக்கொண்டார்கள்.

கார்த்திக் தியாகி வீசிய ஆறாவது ஓவரில்தான் கொஞ்சம் ரன்கள் வர ஆரம்பித்தது. டீப் மிட்விக்கெட் திசையில் 75 மீட்டரில் ஒரு சிக்ஸ். அதே ஓவரில் இரு பவுண்டரிகள் என ஆறு ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. உம்ரான் மாலிக்கின் முதல் ஓவரே எச்சக்கச்சமாக ரன்கள் பறந்தது. படிதார் எக்ஸ்டிரா கவரில் ஒரு பவுண்டரி; அடுத்து டு ப்ளெஸ்ஸி தன் பங்குக்கு 4, 4, 6 என மிரட்டினார்.

Dinesh Karthik | SRH v RCB

உம்ரான் மாலிக்கின் முதல் ஓவரில் 20 ரன்கள். கார்த்திக் தியாகியின் ஓவரில் கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் டு ப்ளெஸ்ஸி. அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த படிதார் சுசித் பந்தில் ஆட்டமிழந்தார். மேக்ஸி வந்த வேகத்தில் ஸ்விட்ச் ஹிட் மோடுக்குச் சென்றார். அவுட்சைட் ஆஃபில் வந்த பந்தை, சட்டென இடது பேட்டராக மாறி சிக்ஸருக்கு விளாசினார். டு ப்ளெஸ்ஸியும், மேக்ஸியும் இணைந்து ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட் கீழே இறங்காமல் பார்த்துக்கொண்டனர். ஆட்டத்தின் 17வது ஓவரை ஃபரூக்கி வீசினார். டு ப்ளெஸ்ஸி அதை ஓங்கி அடிக்க, பந்து நேராக ஃபரூக்கியின் காலை பதம் பார்த்தது. மேக்ஸ்வெல் 19வது ஓவரில் அவுட்டாக, உள்ளே வந்தார் தினேஷ் கார்த்திக். கார்த்திக் தியாகியின் ஓவரில் டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் அடித்தார்.

SRH v RCB

ஃபரூக்கியின் கடைசி ஓவரில் 25 ரன்கள் சென்றது. டீப் ஸ்கொயர் லெக்கில் நின்றுகொண்டிருந்த ராகுல் திரிபாதியின் கைகளுக்கு இடையே சென்று சிக்ஸ் லைனைத் தொட்டது. அடுத்த வந்த யார்க்கரை லாங் ஆன் பக்கம் சிக்ஸ் ஆக்கினார். அடுத்து டீப் மிட்விக்கெட்டில் ஒரு ஹாட்ரிக் சிக்ஸ், அடுத்து ஒரு பவுண்டரி என மீண்டுமொருமுறை ஃபினிஷருக்கான இன்னிங்ஸ் ஆடினார் டிகே. 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது பெங்களூரு.

முதல் ஓவரை வீசினார் மேக்ஸி. மேக்ஸி வீசிய முதல் பந்தை, அபிஷேக் கவர் பக்கம் சிங்கிளுக்குத் தட்டிவிட, அதை சபாஷ் அஹமது, கீப்பருக்கு வீச, வில்லியம்சன் ஒரு பந்தைக் கூட ஆடாமல், ரன் அவுட்டில் வெளியேறினார். ச்ச, கேப்டனுக்கு இப்படி செய்துவிட்டோமே என்கிற வருத்தத்திலேயே அபிஷேக் அதே ஓவரில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். பவர்பிளே இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது ஐதராபாத். ஹசரங்கா பந்துவீச்சில் டீப் மிட் விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் மார்க்ரம். அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்தார் பூரான். ஹசரங்கா வீசிய கூக்ளியை அடிக்க முயன்று, சபாஷ் அஹமதிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பூரான். சிராஜ் பந்துவீச்சில், டீப் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார் ராகுல் திரிபாதி.

ராகுல் திரிபாதி | SRH v RCB

இந்தப் போட்டியில் எல்லா விக்கெட்டுமே ஹசரங்கா பெயரில்தான் எழுதியிருந்தது போலும். சொல்லி வைத்தது போல் எல்லா முக்கிய விக்கெட்களையும் கைப்பற்றினார். அடுத்து வந்த சுசித் க்ரீஸை விட்டு வெளியே வந்து அடிக்க முயல்வதற்கும், தினேஷ் கார்த்திக் பெயிலை தட்டிவிடுவதற்கும் சரியாக இருந்தது. இரண்டு சிக்ஸர், ஆறு பவுண்டரிகளுடன் ஒற்றை ஆளாய் அடித்துக்கொண்டிருந்த ராகுல் திரிபாதியை அவுட்டாக்கினார் ஹேசல்வுட். லெந்த் பந்தை டீப் பேக்வேர்டு ஸ்கொயரில் அடிக்க முயன்று, அது எளிதாக லோம்ரோரிடம் கேட்ச் ஆனது. அதே ஓவரில் கார்த்திக் தியாகி கோல்டன் டக்.

அடுத்த ஹசரங்கா ஓவரில் சஷாங் சிங்கும், உம்ரான் மாலிக்கும் அடுத்தடுத்து அவுட். ஒரு அணியில் மூன்று வீரர்கள் டக் அவுட்டானால், அது எங்கே வெல்ல போகிறது. இறுதியாக ஐதராபாத்தால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஒரு மெய்டனுடன் நான்கு ஓவர்களில் ஐந்து விக்கெட் வீழ்த்திய ஹசரங்கா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-hasaranga-makes-sure-rcb-is-in-the-fight-for-the-playoffs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக