கடந்த சில வாரங்களாக இழுபறியாக இருந்த அ.தி.மு.க ராஜ்ய சபா வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அ.தி.மு.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் இரண்டு ராஜ்ய சபா இடங்களில் எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜாவின் பெயரும் டிக் அடிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கோகுல இந்திரா, ராஜன் செல்லப்பாவின் மகனும் அ.தி.மு.க ஐ.டி-விங் மதுரை மண்டலத் துணைத்தலைவருமான ராஜ்சத்யன், கழக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, கழக கொள்கைப் பரப்பு துணை செயலாளர் விந்தியா, கழக மகளிரணி துணைச் செயலாளர் கிருத்திகா முனியசாமி என பலரின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், இருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் 57 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. அதற்கானத் தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. அவற்றில் எம்.எல்.ஏ-க்கள் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அ.தி.மு.க-வுக்கு இரண்டு இடங்களும் கிடைத்தன. அதில் தி.மு.க சார்பில் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மறுபுறம் அ.தி.மு.க-வில் இரண்டு இடங்களுக்கான வேட்பாளர் தேர்வில் கடுமையான இழுபறி நீடித்துவந்தது. கடந்த வியாழக்கிழமை இதற்காக அ.தி.மு.க தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோதும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்கிற தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஒருவழியாக இரண்டு வேட்பாளர்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் நாளை அதற்கான அறிவிப்பு வரும் எனவும் அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏன் இவ்வளவு பெரிய இழுபறி?... அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
``முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் இருவருமே, `ஆளும் தி.மு.க-வை மிகக் கடுமையாக விமர்சித்து வருவது நாங்கள்தான், அதனால் அரசியல் பாதுகாப்பு வேண்டும் அதனால் எங்களுக்கு எம்.பி சீட் வழங்கவேண்டும்!' என மிகவும் உறுதியாக இருந்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு செம்மலைக்குக் கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இது தொடர்பாக அவருக்கு வாக்குறுதியும் முன்பே கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஜெயக்குமாரும் சி.வி.சண்முகமும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப்பெற்று தோல்வியுற்றவர்கள். ஆனால், செம்மலைக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை. அதனால் செம்மலைக்கு ஒரு இடமும், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் இருவரின் கடுமையான அழுத்தத்தால் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் எடப்பாடி. ஆனால், ஓ.பி.எஸ் தன் ஆதரவாளர் ஒருவருக்கு ஒரு இடத்தைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று உறுதியாக இருக்க, செம்மலையைத் தவிர்த்து அந்த ஒரு இடம் ஜெயக்குமாருக்கு முடிவாகியுள்ளது. சி.வி.சண்முகத்துக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஒ.பி.எஸ் கழக மகளிரணி துணைச் செயலாளர் கிருத்திகா முனியசாமி, திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட சிலரின் பெயர்களைக் கொடுத்திருக்கிறார். ஆனால், கிருத்திகா முனியசாமிக்குக் கொடுத்தால், கட்சியில் உள்ள மற்ற மகளிரணி நிர்வாகிகள் அதிருப்தியடைவார்கள் என்பதால் அவருக்குக் கொடுக்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இறுதியாக தச்சை கணேசராஜாவுக்கு முடிவாகியிருக்கிறது. இதற்கிடையில், எம்.எல்.ஏ-க்களுக்கு பணம் கொடுத்தாவது, எம்.பி சீட்டைப் பிடிக்க, ராஜ்சத்யனும் கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். ஆனால், கடந்த 2019 தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால் அவருக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இப்போதே சென்னையில் முகாமிட்டிருக்கும் தச்சை கணேசராஜாவுக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். சென்னையில் ஒருவர், தென் தமிழகத்தில் ஒருவர் என வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இப்போதைய நிலவரம்தான் கடைசி நேரத்தில் இதில் மாற்றம் வரவும் வாய்ப்பிருக்கிறது'' என்றார்கள்
source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-admk-rajyasabha-candidate-list
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக