Ad

சனி, 21 மே, 2022

பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தைக் கட்டிய சீனா?! - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

கடந்த 2020 மே மாதத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எந்த நேரமும் இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல சீன தரப்பில் சுமார் 40 சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

இந்தியா - சீனா

இந்த மோதலுக்குப் பிறகு பாங்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்தனர். இந்தச் சம்பத்துக்குப் பிறகு சர்ச்சைக்குறிய லடாக்கின் பாங்காங் ஏரிப் பள்ளதாக்கு அருகே இரு நாட்டு படையினர் தொடர்ந்து குவிக்கப்பட்டு உள்ளனர். பாங்காங் ஏரி சுமார் 134 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம், 270 சதுர மைல் பரப்பளவு கொண்டதாகும். இதன் 50 சதவிகித பரப்பளவு சீனாவிடமும், 40 சதவிகித பரப்பளவு இந்தியாவிடமும் உள்ளது. சுமார் 10 சதவிகித பரப்பளவு சர்ச்சைக்குறிய பகுதியாக நீடிக்கிறது. பாங்காங் ஏரி 8 பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் 1 முதல் 4 வரையிலான பாகங்கள் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டவை ஆகும். அண்மைக் காலமாக பாங்காங் ஏரிப் பகுதியில் இந்திய ராணுவத்தின் கை ஓங்கி இருந்தாலும், சீன எல்லைக்கு உட்பட்ட பாங்காங் ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் அந்த நாட்டு ராணுவம் புதிய பாலத்தை ஜனவரியில் கட்டியது. இதுகுறித்த செயற்கை கோள் படத்தை சர்வதேச புவியியல் உளவுத்துறை நிபுணர் டேமியன் சைமன் ட்விட்டரில் வெளியிட்டார்.

பாங்காங் ஏரியின் வடக்குப் பகுதியான குர்னாக்கிலிருந்து தெற்கு பகுதியான ரூடாக்குக்கு சாலை வழியாக செல்ல 200 கி.மீ தொலைவை கடக்க வேண்டும். தற்போது இரு கரைகளையும் இணைத்துக் கட்டப்பட்ட பாலத்தால் பயணத் தொலைவு 40 முதல் 50 கி.மீ ஆகக் குறையும். இதனால், சீன ராணுவம் மிகக் குறுகிய நேரத்தில் அதிக வீரர்களை பாங்காங் ஏரிப் பகுதியில் குவிக்க முடியும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதனால், இந்திய ராணுவத்தை அந்தப் பகுதியில் வலுப்படுத்த எல்லையில் பாலங்கள், சாலைகள், சுரங்கங்கள் கட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

செயற்கை கோள் படம்

இந்த நிலையில், பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தியா வந்தபோது இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாக கூறப்பட்டது. மேலும், எல்லையில் சீனா படைகளைக் குவித்தால் இந்தியா-சீனா இடையே இயல்பான நல்லுறவு ஏற்படாது என்றும் எஸ்.ஜெய்சங்கா் கூறியிருந்தார். இந்த நிலையில், சீனா இரண்டாவது பாலம் கட்டிக் கொண்டிருப்பது இந்தியாவின் பேச்சுக்கு அர்த்தமற்று போயிருக்கிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடார்பாளர் அரிந்தம் பாக்சி, ``சீன எல்லையில் நிகழ்வுகளை இந்தியா கண்காணித்து வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனாவுடன் தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்" என்றார்.

ராகுல் காந்தி கேள்வி

மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்துக்கு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ``பாங்காங்கில் முதல் பாலத்தை சீனா கட்டுகிறது என்ற செய்தி வந்தபோதும், நிலைமையை கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறியது. இப்போது 2-வது பாலத்தை சீனா கட்டும்போதும், அதே போல கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எந்தவிதமான விட்டுக்கொடுக்கும் போக்கும் இருக்கக் கூடாது.

ராகுல் காந்தி

இதுபோன்ற விஷயங்களில் உரிய நேரத்தில் சரியான பதிலடியை அளிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டியது பிரதமரின் முக்கியமான கடமை. ஆனால், மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல் பாலம் கட்டியதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் சீனா 2-வது பாலம் கட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/international/did-china-builds-the-second-bridge-in-pangong-lake

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக