Ad

செவ்வாய், 31 மே, 2022

``அண்ணாமலை அரசியல் செய்கிறார்; நாங்கள் நல்லது செய்கிறோம்" - முதல்வர் ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணத்திற்காக மே 30-ம் தேதி மதியம் திருச்சி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,வின் மூத்த முன்னோடியும், கழக வெளியீட்டுச் செயலாளருமான திருச்சி செல்வேந்திரன் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். மேலும், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டதோடு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர், அங்கு நடைபெற்று வரும் நீர் ஆதாரப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முதல்வர், விமான நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தூர்வாரும் பணிகளை பார்வையிடும் முதல்வர்

அப்போது அவர் பேசுகையில், ``சட்டமன்றத் தேர்லுக்கு முன்பு இதே திருச்சியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 7 உறுதிமொழிகளை அறிவித்தேன். அதில் ``மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!” என்ற வாக்குறுதி எப்படி நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகத் தான் 2 நாள்களாக டெல்டா பகுதியில் ஒரு மின்னல் வேக சுற்றுப் பயணத்தை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறேன். கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி பயிர் சாகுபடி மற்றும் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது. அதேபோல, இந்தாண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்ட வரலாறு இதுவரையில் கிடையாது. அந்த வரலாற்றுச் சாதனை இந்தாண்டு நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய நிதிநிலையைப் பற்றி உங்களுக்கே தெரியும். ஆனாலும், உழவர் பெருமக்களுக்கான உதவிகளைச் செய்வதில் என்றைக்கும் தி.மு.க., அரசு பின் வாங்கியது கிடையாது” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு, அரசினுடைய முக்கியமான விஷயங்கள் வெளியாவதற்கு முன்பே அண்ணாமலைக்கு எப்படி தகவல் போகிறது என பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், ``நானும் ஒரு ஆள் இருக்கிறேன் என்று மக்களுக்கு சொல்வதற்காக ஒவ்வொரு நாளும் எதையாவது சொல்லிக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க., அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கலவரம், சாதி, மத சண்டைகள், துப்பாக்கிச் சூடுகள், கூட்டு வன்முறைகள் போன்ற எந்த சம்பவமும் நடக்காத ஒரு ஆட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்ற காரணத்தினால் தான், பல்வேறு முதலீடுகள் தேடி வரக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு இது ஒரு சாட்சி” என்றவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம்” என சுருக்கமான பதிலோடு முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-mk-stalin-press-meet-in-trichy-regarding-agriculture-and-annamalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக