புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டவர்களுடன் பாஜகவையும் விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று உப்பளம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், ``திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்து புதுச்சேரியின் வளர்ச்சியை பின்னுக்குத்தள்ளி, அனைத்து துறைகளிலும் தோல்வியடைய வைத்தவர் நாராயணசாமி. புதுச்சேரியை பாதுகாக்க முடியாமல், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்த அவர், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் ரங்கசாமியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத செயல்.
புதுச்சேரி மாநில முதல்வராக இருந்த நாராயணசாமி தனது 5 ஆண்டுகள் முழுவதும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் துதி பாடி கொண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை முழுமையாக ஒழித்து விட்டார். அதனை எண்ணி வெட்கப்படாமல் தற்போது மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இங்கிருந்து துதி பாடிக் கொண்டிருக்கிறார்.
நம் நாட்டின் பிரதமரை சர்வாதிகாரி என அவர் பேசுவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். திமுக முதல்வர் ஸ்டாலின் தன்னை மெச்சிக்கொள்வார் என்கிற விதத்தில் ஒரு நாட்டின் பிரதமரை இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சிக்கும் நாராயணசாமிக்கு நாவடக்கம் தேவை.
நாடு முழுவதும் மின்துறையில் சில சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்த போது அந்தத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்புடையது அல்ல என தமிழக முன்னாள் அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதியாக எதிர்த்தனர். அதனால் தான் தமிழகத்தில் இன்று வரை இலவச மின்சாரம் திட்டம் தொடர்கிறது. புதுச்சேரியில் மின்துறை தனியார்மயம் ஆக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் கால சூழ்நிலைக்கு ஏற்ப அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அங்கு பணி புரியும் ஊழியர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த பென்ஷன் திட்டம் முழுமையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மின் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் நலன் எந்த விதத்திலும் சிறு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 150 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் அதில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் வீண் வறட்டு வீராப்பு செய்து, அந்தத் திட்டத்தையே பாழடித்ததுதான் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. தற்போது 500 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வழக்கம்போல இதையும் நாராயணசாமி குறை கூறிக் கொண்டிருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் ரங்கசாமி பலகீனமான முதல்வராக இருப்பதாக நாராயணசாமி கூறுவது தமாஷாக உள்ளது. உறுதியாக இருக்க வேண்டிய திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தினந்தோறும் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பதை நாராயணசாமி ஏன் உணர்வதில்லை? எதிர்க்க வேண்டிய கட்சிகளை தனது திறமையால் அடக்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பலம் மிக்கவராக இருக்கிறார் என்பதை நாராயணசாமி தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-admk-criticized-dmk-and-congress-over-the-issue-for-privatization-of-electricity-sector
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக