Ad

வியாழன், 19 மே, 2022

அஸ்ஸாம்: பள்ளிக்கு மாட்டிறைச்சி உணவு கொண்டு சென்ற தலைமையாசிரியை கைது!

அஸ்ஸாம் மாநிலம், கோல்பரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமையாசிரியை ஒருவர், மதிய உணவுக்கு மாட்டிறைச்சி உணவு கொண்டுவந்ததாகக் கூறி கடந்த திங்கள்கிழமை போலீஸ் அவரைக் கைதுசெய்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், தலைமையாசிரியை டாலிமான் நெஸ்ஸா (56), பள்ளிக்கு மாட்டிறைச்சி உணவு கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக பள்ளி நிர்வாகக்குழு, நெஸ்ஸா மாட்டிறைச்சி உணவு கொண்டுவந்ததாகவும், ஊழியர்கள் சிலருக்கு அதைப் பரிமாறியதாகவும் போலீஸில் புகாரளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் நெஸ்ஸாவை கடந்த திங்கள்கிழமை போலீஸ் கைதுசெய்துள்ளது.

மாட்டிறைச்சி கொண்டு சென்ற தலைமையாசிரியை கைது

இது தொடர்பாக தனியார் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தண்டனைச் சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளைக் கலைக்கும் நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் நெஸ்ஸா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், நெஸ்ஸாவின் இத்தகைய செயல் அங்கிருப்பவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும், பள்ளியில் இரு மத சமூகத்தினரையும் கொந்தளிக்க வைத்ததாகவும் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள தலைமையாசிரியை நெஸ்ஸா, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப்படவில்லை, எனினும் அஸ்ஸாம் பசு பாதுகாப்புச் சட்டம், இந்துக்கள், ஜெயின்கள் மற்றும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சியை விற்கவும் வாங்கவும் தடைவிதிக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/in-assam-govt-school-woman-headmaster-arrested-for-carrying-beef-food-in-lunch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக