Ad

செவ்வாய், 16 மார்ச், 2021

வாரிசு வேட்பாளர்கள் ஆதிக்கம் எந்தக் கட்சியில் அதிகம்? #TNElection2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக 20 நாள்கள் மட்டுமே இருக்கின்றன. இப்போது வரை சில கட்சிகள் முழுமையாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளான காங்கிரஸில் நான்கு தொகுதிகளுக்கும், பா.ஜ.க-வில் மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்னும் சில கட்சிகள் வேட்பாளரை தற்போது வரை மாற்றி வருகின்றன. தி.மு.க-வில் இன்று காலையில்கூட ஒரு வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். இப்படியாக வேட்பாளர் பட்டியலில் எக்கச்சக்க குளறுபடிகள் நடந்து வருகின்றன. இந்த சமயத்தில் `வாரிசுகளுக்கு அதிகம் வாய்ப்பளித்த கட்சி எது?' என்கிற விவாதமும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் கொடி

காங்கிரஸ் வாரிசு வேட்பாளர் பட்டியல்!

வேட்பாளர் தேர்வில் அதிக குளறுபடி நடந்தது காங்கிரஸ் கட்சியில்தான். காங்கிரஸ் கட்சியில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கும் 21 தொகுதிகளில், ஐந்து தொகுதிகளில் வாரிசுகள்/சொந்தங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

1. திருநாவுக்கரசரின் மகன் டி.எஸ்.ராமச்சந்திரன் - அறந்தாங்கி தொகுதி

2. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வே.ரா - ஈரோடு கிழக்கு தொகுதி

3. ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் - ஓமலூர் தொகுதி

4. கே.ஆர்.ராமசாமியின் மகன் ஆர். கருமாணிக்கம் - திருவாடானை தொகுதி

5. மாணிக்கம் தாகூரின் மாமனார் டி.ரவிச்சந்திரன் - மேலூர் தொகுதி

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலிலும் மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கே வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: வாரிசுகளுக்கு வாய்ப்பு... காங்கிரஸ் வேட்பாளர் தேர்வும் கதர்ச்சட்டைகள் கதறலும்!

தி.மு.க வாரிசு வேட்பாளர் பட்டியல்!

தி.மு.க மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று `வாரிசு அரசியல்!' அந்தக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், இந்தத் தேர்தலில் 17 வாரிசு/ சொந்தங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது தி.மு.க.

ஸ்டாலின்

1. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி

2. மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் - வில்லிவாக்கம் தொகுதி

3. டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா - மன்னார்குடி தொகுதி

4. ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் - பழநி தொகுதி (ஐ.பெரியசாமியும் இந்தத் தேர்தலில் ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதியில் போட்டியிடுகிறார்)

5. பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் பழனிவேல் தியாகராஜன் - மத்திய மதுரை தொகுதி

6. மறைந்த ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி - தி.நகர் தொகுதி

7. கே.பி.பி.சாமியின் தம்பி சங்கர் - திருவொற்றியூர் தொகுதி

8. ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை - ஆலங்குளம் தொகுதி

9. நாகநாதனின் மகன் எழிலன் - ஆயிரம் விளக்கு தொகுதி

10. தங்கபாண்டியனின் மகன் தங்கம் தென்னரசு - திருச்சுழி தொகுதி

11. காஞ்சிபுரம் அண்ணாமலையின் பேரன் எழிலரசன் - காஞ்சிபுரம் தொகுதி

12. காதர்பாட்சாவின் மகன் முத்துராமலிங்கம் - ராமநாதபுரம் தொகுதி

13. பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் - திருவெறும்பூர் தொகுதி

14. பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் - தூத்துக்குடி தொகுதி

15. பெரியண்ணன் மகன் இன்பசேகரன் - பென்னாகரம் தொகுதி

16. சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் - திருமங்கலம் தொகுதி

17. பூண்டி கலைச்செல்வனின் தம்பி பூண்டி கலைவாணன் - திருவாரூர் தொகுதி

மற்ற கட்சிகள்!

தே.மு.தி.க-வில் விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோர் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ம.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளில் எந்த வாரிசு வேட்பாளரும் இல்லை.

எடப்பாடி, ஓபிஎஸ் 

2021 சட்டமன்றத் தேர்தலில், வாரிசுகளுக்குப் போட்டியிட வாய்ப்பளித்திருக்கும் தி.மு.க-வை, அ.தி.மு.க-வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ``அ.தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால் அடிமட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சியில் அடிமட்டத் தொண்டன்கூட முதல்வராகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓ.பி.எஸ்ஸும், இபிஎஸ்ஸும் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வில் கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இருக்கிறார். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி அந்த இடத்துக்கு வருவார். அதன் பிறகு இன்பநிதி வருவார். தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் குடும்ப வாரிசுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல் குடும்பங்களுக்கே வாய்ப்பளித்து வருவதால் மக்கள் நிச்சயம் இந்தத் தேர்தலில் தி.மு.க-வை நிராகரிப்பார்கள்'' என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க-வினர் சிலர், ``தி.மு.க-வில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கும் வாரிசுகள்/ சொந்தங்கள் அனைவருமே கட்சிக்காகப் பல பணிகளை செய்திருக்கிறார்கள். அதில் பலரும் ஏற்கெனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்தாம். தங்கம் தென்னரசு, பூங்கோதை உள்ளிட்ட சிலர் அமைச்சர்களாக இருந்து சிறப்பாகப் பணியாற்றியிருக்கின்றனர். திறமையில்லாதவர்களுக்கும், கட்சிப் பணி செய்யாதவர்களுக்கும் என்றுமே தி.மு.க வாய்ப்பளித்ததில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அமைச்சர்களின் வாரிசுகள் சிலர் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டனரே, அப்போது வாய்திறக்காத அ.தி.மு.க-வினர் இப்போது மட்டும் விமர்சனம் வைப்பது சரியா'' என்று காட்டமாக கேள்வியெழுப்புகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

மேலும், ``எங்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி சொன்னதைத்தான் நாங்களும் சொல்ல நினைக்கிறோம். எம்.எல்.ஏ என்பது நியமனப் பதவியல்ல. வாரிசு அரசியல் வேண்டாம் என்று நினைத்தால் எங்கள் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்கட்டும். ஆனால், மக்கள் வாரிசா, சொந்தக்காரரா என்றெல்லாம் பார்த்து வாக்களிக்கமாட்டார்கள். நம் தொகுதிக்கு நல்லது செய்வாரா, தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்குமா என்பதைப் பொறுத்துத்தான் வாக்களிப்பார்கள். அந்த வகையில் நிச்சயம் தி.மு.க இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது'' என்கின்றனர்.

Also Read: வாரிசு அரசியல் : உதயநிதியை நியாயப்படுத்தும் ஸ்டாலினின் கருத்து எத்தகையது? - ஒரு பார்வை!

வாரிசு லிஸ்ட்டில் எந்த வேட்பாளரின் பெயராவது விடுபட்டிருந்தால் கமென்ட்டில் பதிவிடுங்கள்!


source https://www.vikatan.com/government-and-politics/election/tn-election-2021-family-politics-in-candidate-selection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக