Ad

சனி, 6 மார்ச், 2021

இந்த மகளிர் தினத்தில் உரக்கச் சொல்ல வேண்டிய விஷயம் இதுதான்! #StopJudgingWomen #DontJudgeMe

பெண்களை ஜட்ஜ் செய்வது இந்தச் சமூகம் செலுத்தக்கூடிய எளிமையான ஆதிக்கம். ஏனெனில், அதை எதிர்த்து ஒலிக்கும் குரல்கள் குறைவு. அப்படி குரல் எழுப்பும் பெண்களையும் `திமிர் பிடித்தவள்' என்று லேபிள் ஒட்டும் `ப்ளான் பி'யும் இந்த சமூகத்திடம் தயாராக இருக்கும். எனில், அந்தத் திமிரை பிடித்துக்கொள்வோம் தோழிகளே தவறில்லை. நம் விருப்பம், முன்னேற்றம், சுயமரியாதை, ஆசைப்படும் வாழ்க்கை இவற்றுக்கான முடிவுகளை நாம் எடுக்கும்போது, சமூக மதிப்பீடுகளால் நாம் பின்னிழுக்கப்படாமல் இருப்பதற்கான கேடயமாக இருக்கட்டும் அவர்கள் சொல்லும் `திமிர்'.

Representational Image

சிவப்பு நிற லிப்ஸ்டிக், ஸ்லீவ்லெஸ் ஆடை என்று தன்னை பொலிவாக்கிக்கொள்ளும் பெண்ணை உடனே தராசில் தூக்கிப் போடுபவர்களுக்கு, அந்த அலங்காரம் அவளுக்குத் தரும் தன்னம்பிக்கை பற்றி புரிந்துகொள்ள மனமிருக்காது.

திருமணமாகி ஒரு சில வருடங்களில், `விசேஷம் இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு, கேட்கப்படுபவளின் உடல், மன வலிகள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள நேரமிருக்காது.

ஆறு மாத கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று திரும்பும் பெண்ணின் தாய்மையை மதிப்பீடு செய்பவர்களுக்கு, எந்தச் சூழ்நிலையில் அவள் அப்படி ஓடிக்கொண்டிருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்காது.

Representational Image

தன் குழந்தையுடன் மறுமணம் செய்துகொள்பவளின் முடிவு குறித்து, `இது தேவையா?’ என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, ஒரு துணை அவளுக்கு எந்தளவுக்குத் தேவை என்பதை உணர்வது பற்றியெல்லாம் அக்கறை இருக்காது.

இன்னும்...

`சோஷியல் மீடியாவுல ஆக்டிவ்வா இருக்கா, இவ அட்ராக்‌ஷனுக்கு ஆசைப்படுறவளா இருப்பா...'

`பியூட்டி பார்லர் போற பொண்ணு குடும்பத்துக்குச் சரிவருமா..?'

`அவளுக்கு ஆண் நண்பர்கள் நிறைய, கேரக்டர் சரியிருக்காது...'

`இவ ரொம்ப வாசிக்கிறா இல்ல, அதான் வாய் நீளுது'

`ரெண்டும் பொம்பளப் புள்ளயா பெத்துட்டா, ராசி இல்லாதவ...'

`பொண்ணை வெளியூருக்கு வேலைக்கு அனுப்புறா, இவ கண்டிப்பே இல்லாத அம்மா...'

`டயட், எக்சர்சைஸ்னு திரியுறா, அம்மாவானதுக்கு அப்புறம் என்ன அழகிப் போட்டிக்கா போகப்போறா?'

`பெண்ணியம்லாம் பேசுறா, இவ சரிப்பட மாட்டா...'

`வொர்க்கஹாலிக்கா இருக்குற பொண்ணா... குடும்பத்தை நாசமாக்கிடுவா...'

Representational Image

இப்படி ஆடையிலிருந்து வேலை, வாழ்க்கை வரை பெண்ணின் ஒவ்வொரு தேர்வும், முடிவும் இங்கு ஜட்ஜ் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தன் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவாத, வேடிக்கை மட்டுமே பார்த்து வாய்க்கு வந்ததைப் பேசும் அந்த `நாலு பேரு' என்ன சொல்வார்களோ என்ற மதிப்பீடுகளுக்கு அஞ்சி, அதை மீறத் துணிவின்றி தேங்கிவிடும் பெண்கள்தானே இங்கு பெரும்பான்மை தோழிகளே?

இன்னொரு பக்கம், `என்ன வேணாலும் சொல்லிக்கோங்க, என் வாழ்க்கை, என் முடிவு' என்று சுதந்திர சிறகை தங்களுக்குப் பூட்டிக்கொண்டு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் பெண்கள்... நமக்கும் தைரியமும் நம்பிக்கையும் தருகிறார்கள்.

Representational Image

இது குறித்து, செலிப்ரிட்டிகள் முதல் சாமான்யப் பெண்கள்வரை பலரிடம் பேசியபோது, பல விஷயங்களை உணர முடிந்தது. நகரத்தில் இருக்கும் பெண்களைவிட கிராமத்தில் இருக்கும் பெண்களை சமூக மதிப்பீடுகள் அதிகமாக இறுக்கியிருக்கின்றன என்பது நாம் அறிந்ததுதான். என்றாலும், `அடப் போங்கப்பா' என்று ஊரிடம் சொல்லிவிட்டு கிராமத்திலிருந்தபடியே சாதிக்கும் பெண்களையும் பார்க்கிறோம். நகரத்தில் இருந்தாலும், `யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோ' என்று நத்தையாக வீட்டுக்குள் முடங்கும் பெண்களையும் பார்க்கிறோம்.

துணிச்சலை துணையாகத் தேர்ந்தெடுக்கும்போது, ஒரு பெண்ணை எந்த சமூக அடக்குமுறையாலும் நிறுத்தமுடியாது. அதுவே, ஒரு பெண் தன்னை உள்ளச் சிறையிலிருந்து விடுவித்துக்கொள்ளாவிட்டால், எத்தனை கைகள் அவளை காக்க நீட்டப்பட்டாலும்ம் அவளால் கரையேற முடியாது. எனவே, சமூக மதீப்பீடுகளை தகர்த்துத் தழைக்க, முதலில் உங்களுக்கு நீங்களே போட்டுக்கொண்டுள்ள சங்கிலிகளை விடுவியுங்கள். பிறகு சமூகப் பூட்டுகள் எல்லாம் தானாகக் கழன்றவிழுந்து விழுந்தே தீரும் தோழிகளே.

இந்தப் பெண்கள் தினத்தில், அடக்குமுறையான சமூக மதிப்பீடுகளை அப்படி கடந்து வந்ததால் தாங்கள் அடைந்திருக்கும் வெற்றி மற்றும் மகிழ்ச்சி பற்றி அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்கிறார்கள் பல்துறை பெண்கள். இணைந்திருங்கள். உங்கள் அனுபவங்களையும் அவள் விகடனுடன் இணைந்து பகிருங்கள்.

Woman

Also Read: என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை!

நீங்கள் மறுத்த பழைமைக்காகவும், எடுத்த புது முடிவுக்காகவும் தினம் தினம் மதிப்பீடு செய்யப்படும் தோழிகளுக்கு... அன்பும் வாழ்த்துகளும். உங்கள் முடிவின் பின்னுள்ள நியாயமான காரணங்களை நாங்கள் அறியமாட்டோம். என்றாலும், உங்கள் வாழ்க்கைக்கு எது எந்தளவுக்கு முக்கியமானது என்பதை புரிந்துகொள்வோம்.

மேலும் இந்த மகளிர் தினத்தில் சமூகத்திடம் அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்கிறோம்... #StopJudgingWomen



source https://www.vikatan.com/social-affairs/bollywood/aval-vikatan-campaign-on-stop-judging-women-on-stereotypes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக