Ad

சனி, 6 மார்ச், 2021

டார்கெட் உதயநிதி; வாக்குகளை பிரிக்க எதிர்க்கட்சிகளின் மும்முனைத் தாக்குதல்!

தேர்தல் களத்தில் சமீப நாட்களாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா இல்லையா என்பது தான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை உதயநிதி அளித்தது முதல் அவரை சுற்றிப் பல்வேறு விமர்சனங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சி, குடும்ப அரசியல் நடத்தும் கட்சி என்று தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் வெளியானது.

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்ததில் உதயநிதி போட்டியில்லை என்று 100% அடித்துக் கூறுகின்றனர். அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ஒருவேளை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் தகவல்களை திரட்டத் தொடங்கினோம்...

Also Read: `உதயநிதி போட்டி இல்லையா..!’ - தகவல் பரவுவதன் பின்னணி என்ன?

உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், போட்டியிட்டால் அவரை தோற்கடிக்கத் தேவையான அனைத்து வேலைகளிலும் எதிர்க்கட்சி முகாம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது தி.மு.க-வின் பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகை குஷ்புவை போட்டியிட வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

குஷ்பு போட்டியிடும் பட்சத்தில் அங்கிருக்கும் பிராமணர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளை கணிசமாக பிரித்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனராம். அதேபோல அ.ம.மு.க தன் கூட்டணியில் இருக்கும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சிக்கு (எஸ்டிபிஐ) சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாம். அப்படி சேப்பாக்கம் தொகுதி அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் குறைந்தது 20,000 சிறுபான்மையினர் வாக்குகளாவது உதயநிதிக்கு கிடைக்காமல் தடுக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

நடிகை குஷ்பு

மற்றொருபுறம் ஓவைசியின் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவரையும் உதயநிதிக்கு எதிராகக் களம் இறக்க முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கும் இஸ்லாமியர் வாக்குகளை பிரித்துவிடலாம் என்று கணக்குப் போட்டுள்ளார்களாம். இப்படி மும்முனைத் தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருக்க வேண்டும். தோற்றால் அரசியலில் உதயநிதிக்கு அது மிகப்பெரிய அடியாக இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் திட்டம் என்கிறார்கள்.

உதயநிதி பேசும்போது....

தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், ஏன் வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றார் என்ற கேள்வி எழுகிறது. ``நேர்காணலின் போது தலைவரை நேரில் சந்தித்துவிடலாம் என்பதற்காகத்தான் கட்சித் தொண்டர்கள் பலர் விருப்பமனு அளித்தனர். என்னதான் தந்தை - மகன் உறவு இருந்தாலும், தொண்டனாக அவர் முன் உதயநிதி ஸ்டாலின் நேர்காணலில் பங்குபெற வேண்டும். அந்த உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று உதயநிதிக்கு விருப்பம் இருப்பதால் தான் அவர் நேர்காணலில் பங்கேற்றார்” என்கிறார்கள்.

மேலும், “ஒருவேளை உதயநிதி நிற்பதாக முடிவு செய்தால் சைதாப்பேட்டை அல்லது ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் நிற்பார். எதிர்க்கட்சி என்னவெல்லாம் திட்டமிட்டுள்ளனர் என்பது எங்களுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி இந்த இரு தொகுதிகளில் உதயநிதி போட்டியிட்டால் ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதுதான் தலைமையின் தற்போதைய திட்டமாக இருக்கிறது” என்வர்கள் “தற்போது வரை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதுதான் உதயநிதியின் நிலையாக இருக்கிறது. ஒருவேளை கிச்சன் கேபினெட்டின் அழுத்தம் அதிகரித்தால் கடைசி நேர முடிவாக உதயநிதியை போட்டியிட வைக்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. உங்களைப் போலவே நாங்களும் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/opposition-plans-to-split-vote-bank-against-udhayanidhi-stailn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக