Ad

சனி, 13 மார்ச், 2021

மரணத்தோடு போராடிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார்... மயிலாப்பூரில் இறுதி அஞ்சலி!

இயற்கை', ' பேராண்மை', ' ஈ', 'பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை' என தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை 10 மணியளவில் மரணமடைந்தார். 61 வயதான ஜனநாதன் மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென மயக்கமாகி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால் சுயநினைவின்றி சிகிச்சை பெற்றுவந்த ஜனநாதன் மரணத்தோடு போராடி உயரிழந்திருக்கிறார்.

சினிமாவுலகில் நேர்மையாளராக அறியப்பட்டவர் ஜனநாதன். உழைக்கும் மக்களின் உயர்வு, சமூக சமநிலையின் அத்தியாவசியம், அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம் எனத் தொடர்ந்து கம்யூனிச சித்தாங்களைத் தன்னுடைய படங்களில் பேசியவர் ஜனநாதன்.

இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' படத்தை இயக்கிவந்தார் ஜனநாதன். 'லாபம்' படத்தில் விவசாயத்தில் நுழைந்திருக்கும் கார்ப்பரேட் அரசியல் குறித்து பேசியிருக்கிறார் ஜனநாதன். இந்தப்படம் முழுவதுமாக ஷூட்டிங் நிறைவடைந்து எடிட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருந்தபோதுதான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

ஜனநாதன்

'' கடந்த வியாழக்கிமை (11-03-2021) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் ஜனநாதன் இன்று காலை(14-03-2021) 10.07 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட இருக்கிறது. அங்கு அவருக்கு இறுதிமரியாதை செலுத்தப்படும்'' என்றார் 'லாபம்' படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுககுமார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-sp-jananathan-passed-away-due-to-cardiac-arrest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக