Ad

வியாழன், 11 மார்ச், 2021

புதுச்சேரி: `பதவியும் இல்லை; தொகுதியும் இல்லை!’ - பா.ஜ.கவுக்கு தாவிய நமச்சிவாயம் அப்செட்

முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜ.கவில் இணைந்தார். அதன்பிறகு புதுச்சேரி பா.ஜ.க அலுவலகத்தில் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, “நமச்சிவாயம் தலைமையில் தேர்தலை சந்திப்போம்” என்று பேசி குதூகலப்படுத்தினார். என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்தாலும், பா.ஜ.கவின் ராஜதந்திர வியூகம் கண்டிப்பாக தன்னை முதலமைச்சராக்கும் என்று நம்பினார் நமச்சிவாயம்.

பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ்

இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் வில்லியனூர் தொகுதியில் இந்த முறை பா.ஜ.க சின்னத்தில் போட்டியிட்டால் கண்டிப்பாக மண்ணைக் கவ்வுவோம் என்று நினைத்த நமச்சிவாயம், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மண்ணாடிப்பட்டு தொகுதியை குறி வைத்து சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை துவக்கினார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன்தான் தேர்தலை சந்திக்க விரும்பியது பா.ஜ.க. ஆனால் முதல்வர் பதவி என்ற வாக்குறுதியுடன் காங்கிரசில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கும் நமச்சிவாயம் அக்கட்சியில் இருப்பதாலும், கேட்ட தொகுதிகளை தர தயங்கியதாலும் பா.ஜ.கவுக்கு பிடி கொடுக்காமல் சுற்றலில் விட்டார் ரங்கசாமி.

ஆனால் ’என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி இல்லையென்றால் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் நாம் டெபாசிட் இழப்பது உறுதி’ என்று உள்ளூர் நிர்வாகிகள் பா.ஜ.க தலைமையிடம் கிசுகிசுத்திருக்கிறார்கள். அதையடுத்து புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்று காய் நகர்த்தி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரங்கசாமியை நேரடியாக தொடர்புகொண்டு ”நீங்கள்தான் முதல்வர். 16 தொகுதிகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒரே போடு போட மகிழ்ச்சியுடன் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் ரங்கசாமி.

இந்த விவகாரத்தில் கடுப்பான முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், “காங்கிரஸ் கட்சி செய்ததைத்தான் இப்போது நீங்களும் செய்கிறீர்கள். உங்கள் கட்சியில் இணைந்ததால்தான் சிட்டிங் தொகுதியை விட்டுவிட்டு மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு மாறுகிறேன். ஆனால் நீங்கள் இப்படி செய்கிறீர்களே..” என்று நிர்மல்குமார் சுரானாவிடம் குமுறியிருக்கிறார்.

பா.ஜ.க பொதுக்கூட்டத்தின் நமச்சிவாயம்

அதற்கு, “நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். அதேபோல மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பதால் அவர்கள் கேட்கிறார்கள். அதனால் இந்தமுறை நீங்கள் வில்லியனூர் தொகுதியிலேயே நில்லுங்கள். உங்கள் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சுரானா வீசிய அடுத்த குண்டில் நொந்துபோனார் நமச்சிவாயம். அதன் தொடர்ச்சியாக மார்ச் 9-ம் தேதி நிர்மல்குமார் சுரானா, ரங்கசாமி, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் ஜனநாயகக் கூட்டணியை உறுதி செய்தனர். அந்தக் கூட்டத்தை புறக்கணித்து தனது எதிர்ப்பைக் காட்டினார் நமச்சிவாயம். ஆனால் தலைவலியால்தான் வர முடியவில்லை என்று அவரை தொடர்புகொண்ட செய்தியாளர்களிடம் கூறினார்.

அன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார் சுரானா, ”தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை ஏற்பார். அவரது தலைமையில் தேர்தலை சந்திப்போம். 14 தொகுதிகளை நாங்களும் அ.தி.மு.கவும் பிரித்துக்கொள்வோம்” என்றார். அப்போது முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்துவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தேர்தலுக்குப் பிறகு எங்கள் கூட்டணி எம்.எல்.ஏக்கள் சேர்ந்து அதனை முடிவெடுப்பார்கள்” என்று முடித்துக் கொண்டார். தொடர்ந்து நிர்மல் குமார் சுரானாவும், ரங்கசாமியும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

அதையடுத்து நமச்சிவாயத்தை நேரில் சென்று சந்தித்த சுரானா, ”மண்ணாடிப்பட்டு தொகுதியை அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் இருவருமே கேட்கிறார்கள். ஆனால் அதனை எப்படியாவது உங்களுக்கு வாங்கித் தர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்று சமாதானப்படுத்தி அழைத்துவந்திருக்கிறாராம். நம்பி வந்த நமச்சிவாயத்துக்கு முதல்வர் பதவியைத்தான் உறுதிப்படுத்த முடியவில்லை. கேட்ட தொகுதியையாவது கொடுத்துவிட வேண்டுமென்று தவித்துக் கொண்டிருக்கிறாராம் நிர்மல்குமார் சுரானா.

Also Read: புதுச்சேரி: `சங்கடங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான்!’- ஜெ.பி.நட்டாவைப் புகழ்ந்த நமச்சிவாயம்

2006-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த ரங்கசாமி, சொந்தக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை மதிக்காமல் ஒன் மேன் ஆர்மியாக வலம் வந்தார். அதனால் அவருக்கு எதிராக அமைச்சர்கள் ஒன்றிணைந்து அவரது முதல்வர் பதவியை பறித்தனர். அந்த கோபத்தில்தான் என்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் துவங்கி ஆட்சியை பிடித்தார் ரங்கசாமி. அப்போது அவரது முதல்வர் பதவி பறிபோகக் காரணமாக இருந்த அமைச்சர்களில் ஒருவர்தான் நமச்சிவாயம்.

இந்த பழைய சம்பவங்கள் அனைத்தையும் நினைத்து குழம்பிப் போயிருக்கும் நமச்சிவாயம், ’எதிர்பார்த்த பதவியும் கிடைக்கவில்லை, கேட்ட தொகுதியும் கிடைக்கவில்லை என்று மெல்லமும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறாராம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/namachivayam-who-moved-into-bjp-was-upset-because-of-not-getting-post-and-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக