புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பா.ஜ.க தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் பரப்புரைக்காக வாக்காளர்களின் சொல்போன் எண்களுக்கு வாட்ஸாப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் விதிகளுக்கு புறம்பான வகையில் பா.ஜ.க குறுஞ்செய்திகள் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்,`` வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் செல்போன் எண் குறித்த தகவல் இருக்காது. ஆதாரில் மட்டுமே செல்போன் எண் இணைக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள வாக்காளர்களின் செல்போன் எண்ணை பா.ஜ.க-வினர் ஆதார் ஆணையத்திடம் இருந்து பெற்று வாட்ஸாப் குரூப்புகள் மூலமும், எஸ்.எம்.எஸ் மூலமும் பரப்புரை செய்கின்றனர். இதை நீதிமன்றம் தடுக்க வேண்டும்” என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி, புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பா.ஜ.க-வினருக்கு எப்படி கிடைத்தது என ஆதார் ஆணையம் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. அதில், இந்த புகார் மீது சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பல்க் எஸ்.எம்.எஸ் மூலம் பிரசாரம் செய்ய அனுமதி பெறாத பா.ஜ.க-வுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது தேர்தல் ஆணையம்.
Also Read: புதுச்சேரி: பாஜக வேட்பாளருக்கு எதிராக 117 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை!
தேர்தல் ஆணையத்தின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு கூறி வழக்கை மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
source https://www.vikatan.com/government-and-politics/news/why-dont-you-postpone-puducherry-election-asks-madras-high-court
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக