Ad

புதன், 3 மார்ச், 2021

தஞ்சை: `விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சிக்கு இணையானது; கொடியை அகற்றுக!’ - அதிர வைத்த அதிகாரிகள்

`நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு சமமானது. எனவே அதன் கொடியினை அகற்ற வேண்டும்’ என பட்டுக்கோட்டையில் அதிகாரிகள் கூறிய நிலையில், ஆளும் அ.தி.மு.க நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து கொடியை அகற்ற வைத்ததாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி அக்கட்சியினர் கொடிகளை அகற்றினர். அத்துடன் கொடி கம்பத்தில் உள்ள கட்சியின் நிறம் தெரியாதவாறு துணியை கொண்டு மறைத்தனர்.

அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாளுக்காக அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் வரைந்திருந்த சுவர் ஓவியங்களும் மறைக்கப்பட்டன. இதே போல் பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்க கொடியினையும் அதிகாரிகள் அகற்ற வலியுறுத்தினர். அப்போது அதன் நிர்வாகிகள், `விஜய் மக்கள் இயக்கம் ஒன்றும் அரசியல் கட்சி கிடையாது. அப்புறம் ஏன் கொடியினை எடுக்க சொல்கிறீர்கள்?’ என வாக்குவாதம் செய்துள்ளனர். `விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிகளுக்கு இணையான இயக்கம். அதனால் கொடியினை அகற்றுவதுடன்,கொடி கம்பத்தையும் மறைக்க வேண்டும்’ என கூறினர்.

விஜய் மக்கள் இயக்க கொடி

அதன் பிறகு நிர்வாகிகள், அதிகாரிகள் கூறியது போல் கொடியினை அகற்றியதுடன், கொடி கம்பத்தையும் மறைத்தனர். மேலும் ஆளும் கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து கொடியினை அகற்ற வலியுறுத்தியதாகவும் பேசி வருகின்றனர். இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதி.ராஜாராமிடம் பேசினோம், ``இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் மதன் என்பவரின் தம்பி திருமணம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளரான புஸ்ஸி.ஆனந்த் பட்டுக்கோட்டைக்கு வந்தார். அப்போது அவருக்கு அரசியல் கட்சிகளையே விஞ்சும் அளவிற்கு பரிவட்டம் கட்டி, பெண்களை திரட்டி ஆரத்தி எடுக்க வைத்து, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு கொடுத்ததுடன், செங்கோல் ஒன்றையும் நினைவு பரிசாக வழங்கினோம்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

இதனை எதிர்பார்க்காத அண்ணன் புஸ்ஸி ஆனந்த், `எனக்கே இப்படி வரவேற்பு கொடுத்தீங்கன்னா தளபதி விஜய் வந்தா பட்டுக் கோட்டையே தாங்காத அளவிற்கு வரவேற்பு கொடுப்பீங்க போல’ என பாராட்டி விட்டு, `உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. உங்க நம்பிக்கை வீண் போகாது’ என வாழ்த்தி விட்டு சென்றார். இதனை பார்த்த அ.தி.மு.க நிர்வாகிகள் பின்னர் நிகழ்ச்சி ஒன்றிற்காக பட்டுக்கோட்டை வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திற்கு எங்களை போலவே வரவேற்பு கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எங்களிடம் தேர்தலுக்கு மறைமுக ஆதரவு கேட்டு தொடர்ந்து அனுகி வந்தனர்.

குறிப்பாக அ.தி.மு.கவை சேர்ந்த சிலர் எங்ககிட்ட ஆதரவு கேட்ட வந்த நிலையில், நாங்க முடியாது என கூறிவிட்டோம். இதையடுத்து தேர்தல் அறிவிப்பிற்கும் பிறகு நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. அனைத்து கட்சி கொடிகள் அகற்றப்பட்டு கொடி கம்பங்கள் மறைக்கப்பட்டன.

மறைக்கப்பட்ட கொடி கம்பம்

இரண்டு இடங்களில் கொடிகம்பங்கள் அமைத்து ஏற்றப்பட்டிருந்த மக்கள் இயக்க கொடியினை பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அகற்ற வலியுறுத்தினார். விஜய் மக்கள் இயக்கம் ஒரு அமைப்புதானே தவிர அரசியல் கட்சி கிடையாது ஏன் அகற்ற சொல்றீங்க என கேட்டதற்கு அரசியல் கட்சிக்கு இணையானதுதான் விஜய் மக்கள் இயக்கம் எனவே கொடியினை அகற்ற வேண்டும் என்றனர்.

இதன் பின்னணியில் ஆளும் அ.தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இருந்து கொடுத்த அழுத்தத்தினாலேயே கொடியை அகற்ற சொல்லி உத்தரவு வந்துள்ளது. பின்னர் நாங்களும் அதிகாரிகள் உத்தரவுப்படி கொடியினை அகற்றி விட்டோம். சர்கார் படம் வெளியான நேரத்தில் சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தினர். இதனால் நாங்கள் அ.தி.மு.கவிற்கு எதிராக செயல்படுவோம் என எண்ணி கொடியினை அகற்ற சொல்லியிருக்கலாம். எப்படியிருந்தாலும் அரசு அதிகாரிகளே விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சிகளுக்கு இணையானது என கூறியது எங்களுக்கு பெருமிதத்தை தந்துள்ளது” என்றார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி கம்பம்

அ.தி.மு.க தரப்பிலோ, `தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பது பொதுவானது. அதன் அடிப்படையிலேயே விஜய் கொடி அகற்ற வலியுறுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளதால் அ.தி.மு.க அரசுக்கு நல்ல பெயர் உள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளிட்ட பல காரணங்களால் எங்கள் வெற்றி உறுதியாகிவிட்ட ஒன்று. விஜய் மக்கள் இயத்தினர் சுய விளம்பரத்திற்காக கொடியினை நாங்க அகற்ற வைத்ததாக பேசி வருவது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/politics/in-pattukottai-officers-asked-to-remove-the-flag-of-vijay-makkal-iyakkam-for-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக