விவசாயத்துக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எவ்வளவுதான் மழை பெய்தாலும் கோடைக்காலம் வந்தாலே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அந்த நேரத்தில் சிறிதளவு தண்ணீர் கிடைத்தாலும் அது பனையளவு பயன் தரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. அந்த வகையில் பெங்களூரு மாநகராட்சி எடுத்திருக்கும் புது முயற்சி கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்ட விவசாயிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு மாநகரின் கிழக்குப் பகுதியில் உள்ள குமாரமங்கலா, செல்லாகட்டா (கே.சி பள்ளத்தாக்கு) வில் உருவாகும் கழிவு நீரைச் சுத்திகரித்து அருகிலுள்ள கோலார், சிக்பெள்ளாப்பூர் மாவட்ட விவசாய நிலங்களில் கொண்டு சென்று விடுகிற திட்டம்தான் கே.சி.பள்ளத்தாக்கு திட்டம். இந்தத் திட்டப்படி நாள்தோறும் அந்தப் பகுதியில் சுத்திகரிக்கும் நீரானது ஏரிகளில் கொண்டு சென்று விடப்படுகிறது. நாளொன்றுக்கு 37 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை கடந்த 18 மாதங்களாகக் கொண்டு சேர்த்து வருகிறது பெங்களூரு மாநகராட்சி. இதன் மூலம் 126 ஏரிகளில் 81 ஏரிகள் பயனடைந்திருக்கின்றன. நீரானது இரண்டு முறை சுத்திகரிக்கப்பட்டு ஏரிகளில் கொண்டு சென்று விடப்படுகிறது. இந்தத் திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பட்ஜெட்டில் மேலும் 450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் வளர்ச்சி ஆணையத்தின் ஆலோசகர் ராஜேந்திரன், ``சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏரிகளில் விட்டு நிலத்தடி நீரை உயர்த்தும் திட்டம் இது. இதுசம்பந்தமாக நரசபுரா பகுதியில் ஆய்வு செய்தோம். அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று தெரிவித்தனர். அவர்களின் வாழ்க்கையில் இது மாற்றத்தை ஏற்படுத்தும். முன்பெல்லாம் விவசாயத்துக்கான போர்வெல் அமைக்க 5 லட்சம் வரை செலவு செய்வார்கள். அப்படியே செலவழித்தாலும் தண்ணீர் கிடைக்காது. அப்படியே தண்ணீர் கிடைத்தாலும் இரண்டு மூன்று ஆண்டுகள்தான் பயனளிக்கும். இதனால் விவசாயிகள் கடனாளிகள் ஆனதுதான் மிச்சம். ஆனால், அந்த நிலைமை இப்போது மாறி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இவர் இப்படிச் சொன்னாலும் `கழிவு நீர் முழுவதுமாக சுத்திகரித்து அனுப்பப்படுவதில்லை' என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதைப் பெங்களூரு மாநகராட்சி கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ``இருந்தாலும் இப்படியொரு திட்டத்தை நாம் வரவேற்றாக வேண்டும். இதேபோன்று சென்னை மாநகராட்சியிலும் இப்படியொரு முயற்சியை முன்னெடுக்கலாம்" என்கிறார்கள் நீரியல் வல்லுநர்கள்.
சென்னை மாநகராட்சியில் கொடுங்கையூர், கோயம்பேடு, பெருங்குடி, நெசப்பாக்கம் ஆகிய நான்கு இடங்களில் ஒரு நாளைக்கு 72.7 கோடி லிட்டர் கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கான அமைப்புகள் உள்ளன. இதன்மூலம் 50 கோடி லிட்டர் தண்ணீர் நாள் ஒன்றுக்குச் சுத்திகரிக்கப்பட்டு நீர்நிலைகளில் விடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தச் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் கூவம், அடையாறு ஆறுகளில்தான் விடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள். இந்த 50 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருகிலுள்ள மாவட்டங்களுக்குத் திருப்பலாம்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் கால்நடை தீவனம் உற்பத்தி செய்து வரும் ஹரிகிருஷ்ணனிடம் பேசினோம். ``70 ஏக்கர் பரப்பளவில் சூப்பர் நேப்பியர் கால்நடை தீவனத்தை உற்பத்தி செஞ்சிட்டு வர்றேன். சென்னை மாநகரத்துக்கு அருகில் இருப்பதால் மாநகர கழிவுத் தண்ணீரைச் சுத்திகரித்து கொடுத்தால் விவசாயத்துக்கு ரொம்ப உதவியாக இருக்கும். இங்கே தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் அருகில் இருக்கும் கொடுங்கையூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்றுகிறார்கள். இதை அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்தால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு பயனுடையதாக இருக்கும்.
இதை சென்னை மாநகராட்சியில் மட்டும் செய்ய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களின் தலைநரகங்களிலும் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் இருக்கிறது. அதன்மூலம் கழிவு நீரைச் சுத்திகரித்து அருகிலுள்ள கிராமங்களுக்குக் கொடுத்தால் விவசாய நிலங்களில் பயிர் செய்ய உதவியாக இருக்கும். இதுபோன்ற கழிவு நீரை பயன்படுத்தலாம் என்று அறிவியலும் சொல்கிறது" என்றார்.
மூத்த பொறியாளர் வீரப்பனிடம் பேசியபோது, ``கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சென்னையில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் வேலையைத் தனியாரிடம் கொடுத்துவிடுகிறது சென்னை மாநகராட்சி. அவர்கள் சுத்திகரித்து அந்தத் தண்ணீரை என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. விவசாயப் பயன்பாட்டுக்கு சுத்திகரித்த நீரைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். பெங்களூரு மாநகராட்சியின் இந்த முயற்சியை சென்னை மாநகராட்சியும் பின்பற்றி விவசாயப் பயன்பாட்டுக்கு சுத்திகரித்த நீரைக் கொண்டு சேர்த்தால், விவசாய உற்பத்தி பெருகும். குறிப்பாக, மரங்கள் வளர்ப்புக்கு உறுதுணையாக இருக்கும்" என்றார்.
நீரியல் நிபுணர் ஜனகராஜனிடம் பேசியபோது, ``கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்டுத்தும் திட்டம் மிகச் சிறந்த யோசனை. சுத்திகரித்த நீரைக் கொண்டு தோட்டம் வளர்ப்பது, கழிவறைக்குப் பயன்படுத்துவது, வாகனங்கள் கழுவுவது போன்ற பயன்பாடுகளுக்குத்தான் தற்போது பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அதை எப்படி மறுசுழற்சி செய்கிறோம் என்பதுதான் முக்கியம். இரண்டொரு முறை சுத்திகரித்துவிட்டு, அதைக் கொண்டு சென்று அருகிலுள்ள ஏரிகளில் நிரப்பி அதை அருகிலுள்ள மக்கள், கால்நடைகள் குடிக்கப் பயன்படுத்தினால் அது தீங்கைத்தான் விளைவிக்கும்.
கழிவு நீரைச் சுத்திகரித்த பின் அதிலுள்ள வேதி கனிமங்களின் அளவை வைத்துதான் அதை நிலத்தடி நீர் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியுமா என்ற முடிவுக்கு வர முடியும். தீங்கு விளைவிக்கும் வேதி கனிமங்களை முற்றிலுமாக நீக்கி நிலத்தடி நீரை உயர்த்த பயன்படுத்தினால், அதைவிட சிறந்த திட்டம் ஒன்று இருக்க முடியாது. இப்போது மழைநீரைச் சேகரித்து அதை வெவ்வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியும். காரணம் அது ஜீரோ டி.டி.எஸ் கொண்டது. கழிவு நீர் அப்படியல்ல. முறையாகச் சுத்திகரித்து வழங்கினால் மட்டுமே அதற்குரிய பலன் கிடைக்கும்" என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/bengaluru-domestic-wastewater-being-reused-for-agriculture-is-it-possible-in-tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக