'அந்தாதுன்', 'ஆர்ட்டிகள் 15', 'பதாய் ஹோ' என பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த படங்களை எல்லாம் கோலிவுட்டில் ரீமேக் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவரை வைத்து படம் தயாரிக்கும் நிறுவனம் நிச்சயமாக தமிழ் ரீமேக் உரிமை இருக்கிறது என்ற தைரியத்தில் தொடர்ந்து படம் எடுக்கலாம். சரி, இப்போது 'அந்தாதுன்' விஷயத்துக்கு வருவோம்.
ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்ற படம், 'அந்தாதுன்'. அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அதனை தியாகராஜன் தயாரிக்க பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி கடந்த ஆண்டு வெளியானது.
தமிழில் இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மோகன்ராஜா இந்தப் படத்தை இயக்குகிறார் என்ற தகவல் வர, ரீமேக் படங்களில் பல ஹிட் கொடுத்திருப்பதால், படத்தின் மீது பெரிய நம்பிக்கை எழுந்தது. ஆனால், திடீரென மோகன் ராஜா இப்படத்தில் இருந்து வெளியேறி, சிரஞ்சிவி படத்தை இயக்கப்போய்விட்டார். தியாகராஜனுக்கும் மோகன்ராஜாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக இப்பிரிவு நிகழ்ந்தது என்றார்கள்.
மோகன்ராஜா விலகியதும் 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கை 'பொன்மகள் வந்தாள்' படத்தை இயக்கிய ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தில் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃப்ரெட்ரிக் உள்ளே வந்ததும், கார்த்திக், சிம்ரன், ரைசா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என அடுத்தடுத்த நடிகர்கள் படத்திற்குள் வந்தனர். படத்திற்கு 'அந்தகன்' எனப்பெயரிட்டனர்.
பின் 'அந்தகன்' பற்றி எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் நேற்று, படப்பிடிப்பு ஆரம்பம் என்ற அறிவிப்போடு சில புகைப்படங்களும் வெளியானது. அந்த அறிவிப்பிலும், புகைப்படங்களிலும் இயக்குநர் ஃப்ரெட்ரிக் பெயரும் இல்லை, முகமும் இல்லை. அதேப்போல, ரைசா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெயர்களும் இல்லை. என்ன பிரச்னை, ஏன் ஃப்ரெட்ரிக் பெயர் இல்லை என்கிற கேள்விகள் எழுந்தநிலையில் ட்விட்டரில் '' 'அந்தகன்' படத்தில் இருந்து விலகிவிட்டேன்'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஃப்ரெட்ரிக். இயக்குநர் ஏன் விலகினார் என விசாரித்தோம்.
''மோகன்ராஜா படத்திலிருந்து வெளியே சென்றதற்கும் இப்போது ஃப்ரெட்ரிக் வெளியே சென்றதற்கும் ஒரே காரணம்தான். தியாகராஜனும், பிரசாந்த்தும் இயக்குநரை நம்பாமல் கதையில் தலையிடுவது, அவர்கள் சொல்வதைதான் இயக்குநர் கேட்க வேண்டும் என்று சொல்வது என தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் நெருக்கடிகள் தாங்கமுடியாமல்தான் இயக்குநர்கள் வெளியேறினார்கள்'' என்கிறார்கள் இப்படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள்.
இப்போது பிரசாந்த்தின் தந்தையும், இயக்குநருமான தியாகராஜனே இந்தப் படத்தை இயக்குகிறார். அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிப்பில் 2011-ல் 'மம்பட்டியான்' திரைப்படம் வெளியானது. பத்து வருடங்கள் கழித்து, 'அந்தகன்' படத்தின் மூலம் மீண்டும் மகனை இயக்குகிறார் தியாகராஜன்.
இயக்குநர் ஃபெட்ரிக் விரைவில் என் அடுத்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
'அந்தாதுன்' தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. தெலுங்கில் நிதின், தமன்னா, நபா நடேஷ் நடிக்கிறார்கள். மலையாளத்தில் ப்ரித்விராஜ், மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/why-the-directors-of-andhagan-getting-walk-out-from-the-movie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக