- காரை அக்பர்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
1957-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழகத்தின் இரண்டாவது சட்டமன்ற தேர்தலில் வென்றதிலிருந்து தொடர்ந்து அறுபதாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து, தமிழக அரசியலில் யாருமாகிக் கோலோச்சிய கலைஞர் கருணாநிதி இல்லாத முதல் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கப் போகிறது தமிழ்நாடு.
தமிழக அரசியலின் மற்றொரு ஆளுமையான ஜெயலலிதாவும் இல்லாத தேர்தல் என்றாலும், கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கும் ஜெயலலிதாவின் தைரியத்துக்கும் அரசியல் ரீதியாக வித்தியாசங்கள் உண்டு. கருணாநிதியையே அரசியல் வனவாசத்துக்கு அனுப்பிய எம்.ஜி.ஆர் எனும் வசீகரத்தின் இரட்டை இலை, துணை ஜெயலலிதாவுக்கு இருந்தது. ஆனால், அண்ணாவின் மறைவிலிருந்து தொடர்ந்து போராடி கட்சி மற்றும் அரசியல் பதவிகளைத் தக்கவைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப களமாடி, வயோதிக மூப்பால் பேசாதிருந்த காலத்தில் கூட தமிழக அரசியலைத் தன்னை பற்றிப் பேச வைத்துக்கொண்டிருந்த சாணக்கியர் கருணாநிதி.
கருணாநிதி இருந்தவரையிலும் இரவு பகலை போலவே தமிழக அரசியலும் இரண்டே பக்கங்கள் தான் இருந்தன என்பதை அவரது அரசியல் எதிரிகள் கூட மறுக்க மாட்டார்கள். ஒன்று கருணாநிதி ஆதரவு. மற்றொன்று கருணாநிதி எதிர்ப்பு. அவர் இருந்த வரையிலும் அவரை எதிர்த்தாலே அரசியலில் பாதி சாதித்துவிடலாம் என்ற நிலைதான் தமிழ்நாட்டிலிருந்தது. அவரை எதிர்த்தாலே அரசியலில் வென்றுவிடலாம் என நினைத்தவர்களைப் போலவே அவர் இருந்ததனாலேயே அரசியல் ஆசையை மூட்டை கட்டி வைத்திருந்தவர்களும் அதிகம்.
இன்று அரசியல் கடை விரித்த, விரிக்க முயன்ற, விரிக்க முயற்சிக்கும் பல பிரபலங்களும் கருணாநிதி இருந்தபோது அந்த மூட்டையை ஒளித்துவைத்திருந்தவர்கள் தான். அரசியல் சாதுரியம், நாவன்மை, மிகக் கூர்மையான ஞாபக சக்தி ஆகியவற்றால் தன் சொந்த கட்சியை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பிரபலங்கள் தொடங்கி அரசாங்க அதிகாரிகள் வரை அனைத்து தரப்பையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் கருணாநிதி. தேர்தல் கூட்டணி பேச வருபவர்களிடம் இந்த முறை என் இதயத்தில் மட்டும் இடம் தருகிறேன் எனக் கூறி சில்லறை கட்சிகளைச் சாந்தப்படுத்த அவரால் மட்டுமே முடிந்தது.
ஒரு ஒற்றைத் துண்டு அறிக்கையின் மூலம் தான் நினைத்த நேரத்தில், தனக்குச் சாதகமான சூழலுக்கு அரசியல் சுக்கானைத் திருப்பிவிடும் திறமை வாய்ந்த ஒரே அரசியல்வாதி கருணாநிதியாகத்தான் இருந்திருக்க முடியும். அப்படியொரு அரசியல் திறமையைக் கொண்டிருந்ததால்தான் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பதிமூன்றாண்டுக்கால அரசியல் வனவாசத்துக்கு பிறகும் அவரால் மீண்டும் ஆட்சிக்கட்டிலைப் பிடிக்க முடிந்தது.
எம்.ஜி.ஆர் இருந்தவரையிலும் கருணாநிதியால் ஆட்சிக்கு வரமுடியவில்லையே என்ற கேள்வியும் எழலாம்.
பிரமாண்டமாகத் தொடங்கி, ஒரு சில ஆண்டுகளில் தேய்ந்து செல்லாக்காசாகி, ரப்பர் ஸ்டாம்பு இயக்கங்களாகிப்போன பல அரசியல் கட்சிகளுக்கான உதாரணங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உண்டு. ஆட்சி அதிகாரத்தின் ருசியைச் சுவைத்துவிட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களையும் தொண்டர்களையும், தொடர்ந்து தோல்விகளைத் தழுவும் சூழலில் கட்டுக்கோப்புடன் தக்கவைத்துக்கொள்வது, ஆட்சி நடத்துவதைவிடவும் சிரமமானது. மேலும், ஆட்சியிலிருப்பது, தாய்க்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பிரபலம் என்றால் கேட்கவே வேண்டாம்.
அப்படியான ஒரு சூழலில், பதிமூன்றாண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சூழலிலும் தன் கட்சியின் தொண்டர்பலத்தையும் வாக்குவங்கியையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் என்ற ஈடில்லாத வசீகரத்தால் கூட அவரது இனிய அரசியல் எதிரியான கருணாநிதியின் ஆட்சியைத் தான் பறிக்க முடிந்ததே தவிர, அவரது தனிமனித சட்ட மன்ற பதவியையோ அல்லது தொண்டர் படையையோ ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான அரசியல் உண்மை.
மேலே குறிப்பிட்டதையெல்லாம் தாண்டி, நிகழவிருக்கும் தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்ற தேர்தலின்போது கருணாநிதியை நினைவு கூற மற்றொரு மிக முக்கியமான காரணமும் உண்டு. இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி மாநிலக் கட்சிகளை நசுக்கி, பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கிய சூழலில், அவரை ஹிட்லராகச் சித்தரித்து முரசொலியில் கேலிச்சித்திரம் வெளியிட்டவர் கருணாநிதி. அதே இந்திரா காந்தியைப் பிற்காலத்தில் ஆதரித்தாலும் மாநில சுயாட்சிக்கான தன் அயராத போராட்டத்தை அவர் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை.
இன்றும் அரசியல் மற்றும் கலாச்சாரத் தளத்தில் இந்திராகாந்தியின் அவசர நிலையின் போது இருந்த அதே சூழல் மறைமுகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியத் துணைக்கண்டம் தன் வரலாற்றில் அறிந்தேயிராத , சாத்தியப்படாத ஒரு மொழி, ஓரின பகல்கனவுக்காக பல்வேறு பிராந்திய மொழிகளையும் கலாச்சாரங்களையும் குழி தோண்டி புதைக்க, பின் வாசல் வழிகள் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாநில நலன் சார்ந்த போராட்டங்கள் மூர்க்கமாய் ஒடுக்கப்படுகின்றன. குதிரை பேரங்களின் வழியாகவும், மிரட்டல்களின் மூலமாகவும் பிராந்திய கட்சிகள் பிளக்கப்படுகின்றன.
மதத்தாலும் மொழியாலும் மக்களைப் பிரிக்கும் தந்திர பரப்புரைகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. இந்த சூழலில் கருணாநிதியை நன்கறிந்த அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் மனதில் நிச்சயம் கருணாநிதி பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அவர் இருந்திருந்தால் தமிழக அரசியலின் தடம் மாறி மத்தியிலும் அதிரும்படி ஏதாவது செய்திருப்பார் என்ற எண்ணம் அவரை வெறுப்பவர்களின் மனங்களிலும் கூட தொக்கி நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ
தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle
source https://www.vikatan.com/government-and-politics/politics/tn-election-without-karunanidhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக