Ad

செவ்வாய், 16 மார்ச், 2021

`விஜயபாஸ்கர் திறம்பட நிர்வகித்ததால் கொரோனோ கட்டுக்குள் வந்தது!' -முதல்வர் பழனிசாமி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் விராலிமலை தொகுதி வேட்பாளர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டைத் தொகுதி வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், திருமயம் தொகுதி வேட்பாளர் வைரமுத்து, அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ராஜநாயகம், ஆலங்குடி தொகுதி வேட்பாளர் தர்ம. தங்கவேல், கந்தர்வக்கோட்டை தொகுதி வேட்பாளர் ஜெயபாரதி ஆகியோரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர், "கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களைப் பார்ப்பதற்கே பயந்து கொண்டிருந்த நேரத்தில் மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, அந்த நோயாளிகளை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் சொல்லி, அவரோடு மருத்துவக் குழுவையும் அழைத்துச் சென்று சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி, அந்த நோயாளிகள் மனம் குளிரும்படி செய்தார் உங்கள் மாவட்ட அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். நாடே பாராட்டும் அளவிற்கு இன்றைக்குத் திறம்பட அவரது துறையை நிர்வகித்ததால், தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்திருக்கிறோம். நானே நேரடியாக வந்து திறந்து வைத்தேன். அதற்கும் மேலாக உங்கள் மாவட்டத்தின் அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் புதுக்கோட்டையிலே அரசு பல் மருத்துவக்கல்லூரி கொண்டு வந்திருக்கிறோம். நீர் மேலாண்மையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ.14ஆயிரம் கோடிக்குக் காவிரி, தெற்கு வெள்ளாறு- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவடையும் போது வறண்ட புதுக்கோட்டை, செழிப்பான புதுக்கோட்டையாக மாறும். தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 79 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து அரசுப்பள்ளியில் படித்த குறைவான மாணவர்கள் தான் எம்.பி.பி.எஸ் படிக்க முடிந்தது. தற்போது, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் விதமாக 7.5சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில் தற்போது அரசுப்பள்ளியில் படித்த 435பேர் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மட்டும் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு துவங்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் எண்ணிக்கை 1,650 ஆக அதிகரிக்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று மக்களிடம் மனுக்களை வாங்கி அதைப் பெட்டியில் போட்டு பூட்டி அந்த மனுக்களுக்குத் தான் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதாகக் கூறுகிறார். இவர் துணை முதல்வராக இருந்த போது ஏன் மக்களைச் சந்திக்கவில்லை. இது மக்களை ஏமாற்ற ஸ்டாலின் போடும் நாடகம் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.

ஆனால், நாங்கள் 2020-ல் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த உதவி மையத்தை, உடனே அறிமுகப்படுத்தி அதன்மூலம் பெறப்பட்ட 9.77லட்சம் மனுக்களில் 5.27லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இனிமேல் ஸ்டாலின் கொண்டு போன பெட்டியை திறக்கவே முடியாது. மனுக்களையும் ஸ்டாலின் வாங்க மாட்டார்.

திமுக என்றாலே அராஜக கட்சி. ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். பெரம்பலூரில் திமுக மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்திற்குச் சென்று ஒரு பெண்ணைத் தாக்குகிறார். திருமயத்தில் தேங்காய் கடை வைத்திருக்கும் ஏழைப் பெண்மணியிடம் இலவசமாய் தேங்காய் கேட்டு சண்டை போட்ட கட்சி திமுக. இப்படிப்பட்ட அராஜக கட்சியான திமுகவை வருகின்ற தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.

நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, "எடப்பாடியோட ஆட்சி ஒரு மாதத்தில போயிடும், 3 மாசத்துல போயிடும்னு ஊர், ஊரா போய் ஸ்டாலின் பேசினாரு. ஒரு மாசம் இல்ல, மூணு மாசம் இல்ல, 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5வது ஆண்டில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிக்கிட்டு இருக்கேன். உழைப்பு, நேர்மை, விசுவாசம் எங்களிடத்தில் இருக்கிறது. டிராக்டர் மானியம், சோலார் மின் மோட்டர் மானியம் என வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம் ஏராளமான திட்டங்களைக் கொடுத்து விவசாயிகளைக் காக்கும் அரசாக அதிமுக திகழ்கிறது. இப்படி ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆனால், எடப்பாடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொய்யான பிரசாரம் செய்து வருகிறார். மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சி தி.மு.க. ஆனால், குண்டடிபட்டவர்களின் குடும்பத்தைத் தேடிப் பிடித்து நிவாரணம் வழங்கியது மாண்புமிகு அம்மாவின் அ.தி.மு.க.

இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பாக உள்ள அரசு அ.தி.மு.க. இந்தியாவிலேயே தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அ.தி.மு.க வலுவான கூட்டணி அமைத்திருக்கிறது. தி.மு.கவிடம் கெஞ்சி காங்கிரஸ் 25சீட் வாங்கியிருக்கிறது. பழமையான கட்சியான காங்கிரஸ் அடுத்தமுறை இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை" என்று முடித்தார்

முன்னதாக, ஆலங்குடி வேட்பாளரை ஆதரித்து ஆவணம் கைகாட்டியில் பரப்புரை மேற்கொள்ள அறந்தாங்கியிலிருந்து, ஆவணம் கைகாட்டி செல்லும் வழியில், பனங்குளம் பகுதியில், ஆலங்குடி அ.தி.மு.க வேட்பாளர் தர்ம.தங்கவேலுவை மாற்றக்கோரி மனு கொடுக்க அ.தி.மு.க நிர்வாகி பாண்டியன் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

முதலமைச்சரின் வாகனம் வரும்போது கையைக் காட்டி நிறுத்தி மனு கொடுக்க முயன்ற போது, வாகனம் ஏதும் நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றது. அதன்பின்பு அங்குக் குவிந்த ஆயிரக்கணக்கானோர் முதல்வர் வாகனம் நிற்காததைக் கண்டித்தும், வேட்பாளரை மாற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால், அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



source https://www.vikatan.com/news/politics/corono-came-under-control-because-of-vijayabaskar-says-chief-minister-palanisamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக