கடந்த சில வாரங்களாக, இந்திய அணிக்கு அறிமுகமாகும் ஒவ்வொரு வீரரும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்டியா வரிசையில் பிரசித் கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார். ஆரம்பத்தில் அடி வாங்கினாலும், தன் மன உறுதியால் சிறப்பான கம்பேக் கொடுத்து இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு வீரருக்குமே தன் முதல் போட்டியில் முத்திரை பதிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதற்கு, ஒரு நல்ல தொடக்கம் தேவை. இஷான், சூர்யா, க்ருணால் எல்லோருக்கும் அது கிடைத்தது. ஆனால், பிரசித்துக்கு அது கிடைக்கவில்லை. அவர் எதிர்பாராத வகையில்தான் அந்தத் தொடக்கம் அமைந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் வீசிய நான்காவது பந்தே வைட் ஆகி பவுண்டரிக்கும் சென்றது. அந்த ஓவரில் 7 ரன்கள். அடுத்த ஓவரில் 4 டாட் பால்கள் வீசினாலும், அடுத்த 2 பந்துகளும் பவுண்டரிக்குப் பறந்தது. 8 ரன்கள். சரி, மூன்றாவது ஓவரில் ஏதும் மாற்றம் நிகழுமா என்று பார்த்தால், போட்டியையே மாற்றக்கூடிய ஓவராக மாறியது. மூன்றாவது கியரில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் ஐந்தாவது கியருக்கு மாறினார்கள். 2 பவுண்டரி, 2 சிக்ஸர்… மொத்தம் 22 ரன்கள். அதுவரை விக்கெட் எடுக்கவேண்டும் என்ற மனநிலையில் பந்துவீசிய பிரசித், டிஃபன்ஸிவாக பந்துவீச நினைத்தார். அந்த அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடியை உணர்ந்தார் அவர்.
3 ஓவர்களில் 37 ரன்கள். கடைசியாக வீசிய 8 பந்துகளில் மட்டும் 30 ரன்கள். உடனடியாக ஓவர் மாற்றப்படுகிறது. பிரசித் கிருஷ்ணாவின் முதல் சர்வதேச ஸ்பெல் மறக்கவேண்டிய ஒன்றாக மாறுகிறது.
ஆனால், அந்த 3 ஓவர்களில் தன் திறமையை பிரசித் காட்டாமல் இல்லை. அவர் வீசிய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்து, இன்ஸ்விங் ஆகிறது. டிரைவ் செய்ய நினைத்து தவறவிடுகிறார் ஜேசன் ராய். அந்தப் பந்தின் ரீப்ளே காட்டப்படுகிறது. பேட்ஸ்மேனுக்குப் பின்னால் இருக்கும் கேமராவிலிருந்து காட்டப்படும் ரீப்ளேவில் பிரசித்தின் ரிலீஸைப் பார்த்து வியக்கிறார் வர்ணனையில் இருந்த கவாஸ்கர்.
“பிரசித்தின் கையைப் பாருங்கள், பந்தின் seam இரண்டாவது ஸ்லிப்பில் இருக்கும் ஃபீல்டரை நோக்கி இருக்கிறது. பொதுவாக இப்படி இருக்கும் பந்து அவுட் ஸ்விங் ஆகும். ஆனால், இந்தப் பந்தோ இன்ஸ்விங் ஆகியிருக்கிறது. 1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பல்விந்தர் சிங் சாந்து வீசிய அதே பந்து” என்று வியந்துகொண்டிருந்தார் கவாஸ்கர்.
அந்த அளவுக்கு அட்டகாசமாக வீசியிருந்தார் பிரசித். அவர் சொன்னதுபோல், அவுட்ஸ்விங் ஆகும் பந்துகளின் seam ஸ்லிப் ஃபீல்டர்களைப் பார்த்ததுபோல்தான் இருக்கும். அவுட்ஸ்விங் போல் seam-ஐப் பிடித்து ஒரு இன்ஸ்விங்கர் வீசி பிரமாதப்படுத்தியிருப்பார் பிரசித். 1983 உலகக் கோப்பை ஃபைனலில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கார்டன் கிரீனிட்ஜுக்கு எதிராகத்தான் அப்படியொரு பந்தை வீசியிருப்பார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பல்விந்தர் சிங் சாந்து. அவுட்ஸ்விங் ஆகும் என நினைத்து, பந்தை விடுவதற்காக பேட்டைத் தூக்கிவிடுவார் கிரீனிட்ஜ். ஆனால், இன்ஸ்விங் ஆகிவந்து ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது அந்த பந்து. அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் சரிவு தொடங்கிய இடம் அதுதான். அந்தப் பந்துக்கு நிகராகத்தான் இதைப் புகழ்ந்தார் கவாஸ்கர். என்ன, இது ஸ்டம்பைத் தாக்கவில்லை. அவ்வளவுதான்.
பிரசித் வீசிய முதல் 10 பந்துகள் நன்றாக வீசப்பட்டவையே. சரியான லென்த்தில் பிட்ச் செய்து, பந்தை இரு புறமும் நகரவைத்தார். கூடுதல் பௌன்ஸ் கொடுத்தார். பௌன்ஸும், மூவ்மென்ட்டும் சேர்ந்து ஒருசில பந்துகளில் ஜேசன் ராய்க்கு தடுமாற்றம் ஏற்படுத்தின. போக, வேகமும் 135+ இருந்தது. எல்லா வேரியேஷன்களும் வாய்க்கப்பட்ட பிரசித், ஒரேயொரு தவறு மட்டும் செய்தார். தவறான லென்த்தில் பந்தை பிட்ச் செய்தார். பேர்ஸ்டோ அந்தத் தவறைத் தண்டித்தார்.
ஒரு தவறு தன் இத்தனை வருட உழைப்பை வீணாக்கிவிடப்போவதில்லை. நிச்சயம் இரண்டாம் வாய்ப்பு கிடைக்கும். அதை நம்பிக்கையோடு அணுகுவதுதான் முக்கியம். ஏனெனில், பிரசித் வசம் வித்தைகள் இருக்கிறது. இரண்டாவது ஸ்பெல்லில் அந்த நம்பிக்கையை தன் அஸ்திரமாக்கினார் அவர். முதல் பந்து மீண்டும் பவுண்டரி. அதுவரை ஃபுல் லென்த்திலேதே பிட்ச் செய்தவர், இம்முறை நல்ல லென்த்தில்தான் பிட்ச் செய்தார். இருந்தும் அதை அட்டகாசமாக பவுண்டரி அடித்தார் ராய்.
பிரசித் தளர்ந்துவிடவில்லை. மீண்டும் லென்த்தை மாற்ற நினைக்கவில்லை. அதே லென்த்தில் பிட்ச் செய்தார். கூடுதல் பௌன்ஸ் ஏற்படுத்தினார். ஆனால், முந்தைய பந்திலிருந்து வேகத்திலும், மூவ்மென்ட்டிலும் வேறுபட்டது இந்தப் பந்து. கொஞ்சம் மெதுவாக இன்ஸ்விங் ஆனது. சீக்கிரமாக ஷாட் ஆடிவிட்ட ராய்க்கு, நகர்ந்து விளையாட இடம் கிடைக்கவில்லை. அரைகுறையாக பேட்டில் பட்டு பாயின்ட்டில் நின்றிருந்த சூர்யாவின் கைகளில் விழுந்தது. சர்வதேச அரங்கில் தன் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் பிரசித்.
அடுத்த வந்த ஸ்டோக்ஸை தொடக்கத்திலிருந்தே அட்டாக் செய்தார். லென்த்தை மாற்றினார். மூவ்மென்ட் கொடுத்தார். ஃபுல் லென்த்தில் அவுட்ஸ்விங் ஆகும் டெலிவர்களை வீசினார். ஸ்டோக்ஸை ஆடத் தூண்டினார். ஆனால், ஸ்டோக்ஸ் டிஃபன்ஸிவாக ஆட, நான்காவது ஓவரின் கடைசி 4 பந்துகளுமே டாட் பால் ஆனது.
அடுத்த ஓவர், ஸ்டோக்ஸ் மீதான அட்டாக் தொடர்கிறது. இரண்டாவது பந்து சுமார் 142 kmph வேகத்தில் ஆஃப் கட்டராக வர, அதை ஷுப்மன் கில் கைக்கே அடித்து வெளியேறினார் ஸ்டோக்ஸ். அடுத்து வந்த மார்கனையும் அட்டாக் செய்கிறார். ஆடத் தூண்டுகிறார். முதல் பந்திலேயே முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஆகியிருப்பார் இங்கிலாந்து கேப்டன். இந்திய கேப்டன் கோலி அதைத் தவறவிட, தப்பிப் பிழைத்தார் மார்கன். விக்கெட் மெய்டன். தன் கம்பேக்கை அட்டகாசமாக அரங்கேற்றினார் பிரசித் கிருஷ்ணா.
அந்த நம்பிக்கை அப்படியே தொடர, மேலும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், தன் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.
4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார், புதிய சாதனை படைத்திருக்கிறார், இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் கவாஸ்கரை வியக்க வைத்திருக்கிறார்… வேறென்ன வேண்டும். அத்தனை திறன்களும் இருக்கிறது. நம்பிக்கை மட்டும் அதிகரித்தால், பிரசித் கிருஷ்ணா விக்கெட்டுகளை வேட்டையாடுவார்!
source https://sports.vikatan.com/cricket/prasidh-krishna-made-a-record-breaking-debut-in-odi-circuit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக