டெக்ஸாஸில் அடுத்தடுத்து வீசிய சூறாவளிகள், ரஷ்யாவில் அதிதீவிரப் பனிப்புயல், சீனா தலைநகர் பெய்ஜிங்கில் மணற்புயல், மங்கோலியாவில் புழுதிப்புயல், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் குளிர்காலப் புயல், காங்கோவில் வெள்ளப்பெருக்கு, அலபாமாவில் டொர்னேடோ சூறாவளி, மெக்சிக்கோவில் காட்டுத்தீ...
2021ல் மார்ச் 14 முதல் 21 வரை, அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகெங்கும் நிகழ்ந்திருக்கும் இயற்கை சீற்றங்களின் சிறு பட்டியல் இது.
சென்ற வார இறுதியில் தொடங்கிய வெள்ளப்பெருக்கு ஆஸ்திரேலியாவை பீதியடையச் செய்திருக்கிறது. ஒரு சில இடங்களில் ஐம்பது ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை, ஒரு சில இடங்களில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை. 18,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பல ஊர்களில் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அவசரகால எண்களுக்கு, மீட்பு உதவி கேட்டு அழைப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன. பொதுவாக காட்டுத்தீயாலும் வறட்சியாலும் அவதிப்படும் வெக்கை நிறைந்த இடங்களிலும் இப்போது வெள்ளம் வந்திருக்கிறது என்றால், நிலைமை எவ்வளவு மோசம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். வெள்ளத்தில் மூழ்காமல் இருப்பதற்கு ஆஸ்திரேலியா எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் வெள்ளம், இயற்கை சீற்றங்களின் பட்டியல், எல்லாவற்றுக்கும் காலநிலை மட்டும் காரணமா என்று கேட்டால் குழப்பமான பதில்தான் கிடைக்கும். ஆனால், காலநிலை மாற்றத்தின் கைரேகை எல்லா சீற்றங்களின்மீதும் அழுத்தமாகப் படிந்திருக்கிறது.
கொரோனா காலகட்டத்தின்போது 'புதிய இயல்பு நிலை' (New normal) என்ற சொல்லாக்கம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் இந்தக் காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகிற புதிய இயல்பு நிலை மிக மிக மோசமானதாக இருக்கும் என்று எச்சரிக்கும் விஞ்ஞானிகள், "நாங்கள் சும்மா பயமுறுத்தவில்லை. இது தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல். ஆனாலும் நிலைமை அந்த அளவுக்கு மோசமாகிவிடக்கூடாது என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்" என்று பதற்றத்துடன் தெரிவிக்கிறார்கள்.
காலநிலை மாற்றம் பேரிடர்களை எவ்வாறு மாற்றியமைக்கும்?
காலநிலை மாற்றத்தால் பேரிடர்களின் எண்ணிக்கை, ஒரு பேரிடருக்கும் இன்னொரு பேரிடருக்குமான கால இடைவெளி, பேரிடரின் தீவிரத் தன்மை ஆகியவை மாறும்.
பேரிடர்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாறும்.
பேரிடர்கள் வழக்கமாகத் தாக்கும் இடங்கள் மாறும்.
உதாரணமாக, கனமழையால் ஏற்படும் வெள்ளபெருக்கை எடுத்துக்கொள்வோம். பொதுவாக மழை அதிகம் வராத காலகட்டத்தில் மழை வரலாம், சாதாரண மழை அளவை மட்டும் பெறும் நகரங்களிலும் திடீரென்று கன மழை பெய்யலாம், இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்படலாம், கனமழையின் அளவு தீவிரமாக அதிகரிக்கலாம், ஒரு நகரத்துக்குள்ளேயே வெள்ள பாதிப்பு இல்லாத இடங்களிலும் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம் - இப்படி எது வேண்டுமானாலும் மாறலாம்.
ஏன் இத்தனை குழப்பங்கள்? ஒரு பெரிய பட்டியல் போட்டு, இதில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்கிறார்களே ஏன்?
காலநிலை என்பது ஒரு வலைப்பின்னல். அந்த சமநிலை அறுபடும்போது, பாதிப்பு பல்வேறு விதங்களில் வெளிப்படும். தவிர, காலநிலை மாற்றத்தின் முக்கியமான அம்சம், எளிதில் கணிக்கமுடியாத இதுபோன்ற சீற்றங்கள்/நிகழ்வுகள்தான் (Unpredictable Erratic Extreme weather events). எளிதில் கணிக்க முடியாது என்பதால், இந்த நிகழ்வுகளுக்குத் தயார்நிலையில் இருப்பதும், இவற்றை சமாளிப்பதும் கடினமான வேலையாகிவிடுகிறது. இப்போது ஆஸ்திரேலியாவின் வறண்ட பகுதிகளில் வந்திருக்கும் வெள்ளம் அப்படிப்பட்டதுதான்.
காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படவிருப்பது ஆசியாவில் உள்ள நாடுகள் என்று பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வெப்ப மண்டலப் புயல்களால் (Tropical cyclones) பாதிப்பு அதிகமாக இருக்கும். புயல்களின் தீவிரத் தன்மை, ஒரு வருடத்தில் வரக்கூடிய புயல்களின் எண்ணிக்கை, புயலால் பாதிக்கப்படும் பரப்பளவு என்று எல்லாமே அதிகரிக்கும். புவியின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், தீவிர மற்றும் அதிதீவிரப் புயல்கள் 30% வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இப்போது நாம் பொதுவாக 'கன மழை' என்று வகைப்படுத்தும் மழை அளவு, 1958ன் வகைப்பாட்டோடு ஒப்பிடும்போது 75% அதிகம்! நம் முன்னோர்களை நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தாக்கிய பேரிடர்களை நாம் கிட்டத்தட்ட வருடாவருடம் சந்திக்கிறோம். காலநிலை மாற்றம் இன்னும் தீவிரமடையும்போது, வருடாவருடம் ஒன்றுக்கும் மேற்பட்ட 'ரெட் அலெர்ட்' நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புயல்களுக்குப் பெயர் வைத்து மாளாது.
பேரிடர்களின் சொல்லாடல்களையும் வகைமைகளையுமே மாற்றியமைத்திருக்கிறது காலநிலை மாற்றம். பனியால் ஏற்படும் அதீத பாதிப்புகளை பனி ஊழி (Snowpocalypse) என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். எதிர்காலத்தில் பல இடங்கள் பனி ஊழியால் அழியும் என்றும் கணிக்கப்படுள்ளது. இர்மா புயல் தாக்கியபோது, அதன் தீவிரத்தன்மை இதுவரை இல்லாத அளவுக்கு இருந்தது. அதனால், புயலின் தீவிரத்தன்மையில் கூடுதலாக ஒரு எண் சேர்க்கப்பட்டு அறிவியலே மாற்றியமைக்கப்பட்டது!
2020ல் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான காட்டை அழித்தொழித்தது. அதனால் 'மெகா'காட்டுத்தீ என்ற நிலையிலிருந்து, 'கிகா' காட்டுத்தீ (Giga wildfire) என்று அதற்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதுபோன்ற பல கிகா பேரிடர்கள் எதிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும்.
2020ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும், 200 இயற்கைச் சீற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டன! அதில் மொத்தமாக உயிரிழந்தவர்கள் 2200 பேர். ஆசியாவில் மட்டும் 1000 பேர் இறந்திருக்கிறார்கள். கலிஃபோர்னியா காட்டுத்தீ, சீனா வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, ஆம்பன் புயல், ஆஸ்திரேலியா காட்டுத்தீ, அட்லாண்டிக் புயல்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவரை மனித வரலாற்றிலேயே அதிக வெப்பநிலையைக் கொண்ட ஆண்டுகளில் ஒன்றாக 2020ம் வரிசைப்படுத்தப்பட்டது. இவை எல்லாவற்றின் பிண்ணனியையும் ஆராய்ந்தால் காலநிலை மாற்றமும் ஒரு முக்கியக் காரணம் என்பது தெரியும்.
பேரிடர்களைப் பொறுத்தவரை, "அடுத்தடுத்து நிகழக்கூடிய" என்கிற விவரணை மிகவும் அச்சமூட்டுகிறது. "ஒரு பேரிடரால் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டால்கூட, அந்த நகரத்தில் போதுமான அளவு வளங்களும் சமநிலை அரசாங்கமும், பேரிடர் நிகழ்ந்தபிறகு போதுமான கால இடைவெளியும் கிடைத்தால், திரும்ப அந்த நகரத்தை மீட்டெடுத்து நாம் மீள் உருவாக்கம் செய்துவிடலாம்" என்கிறார் அறிவியலாளர் டேவிட் வாலஸ் வெல்ஸ். போதுமான கால இடைவெளி கிடைக்காவிட்டால் என்ன செய்வது? ஒரு வெள்ளத்திலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நகரத்தில் தண்ணீர் வடிவதற்குள் அடுத்த மழை தாக்கினால் என்ன ஆகும்?
காலநிலை மாற்றத்தால் இத்தகைய 'கூட்டு நிகழ்வுகள்' (Compound events) அதிகரிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உதாரணமாக, ஒருபக்கம் மழைவெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போதே கடல்மட்டமும் உயரலாம், அதீத வெப்பநிலை தாளாமல் மக்கள் அவதிப்பட்டு இறந்துகொண்டிருக்கும்போதே வறட்சியும் காட்டுத்தீயும் சேர்ந்துகொள்ளலாம். கூட்டு நிகழ்வுகள் ஏற்படும்போது, குறிப்பாக இடைவெளியின்றி அவை வரும்போது நாம் என்ன செய்யப்போகிறோம்?
கடந்த 65 ஆண்டுகளில் இந்தியாவில் கனமழை விகிதம் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவைப் போன்ற ஒரு வெப்பமண்டல நாட்டில், வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களும் அதிகரிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படவிருக்கிற துறைகளை 80 கோடி இந்திய மக்கள் நேரடி வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் இடர்கள் அதிகரிக்கும்போது, இவர்களின் வருமானமும் கேள்விக்குறியாகும்.
மேற்குவங்கத்தின் சுந்தரவனக்காடுகளில் கடல்மட்டம் அதிகரிப்பதாலும் வெள்ளப்பெருக்காலும் தொடர்ந்து சூழல் சீர்குலைந்தது. நிலையற்ற வருமானத்தால் நொந்துபோன பலர், மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு வேற்று மாநிலங்களுக்கு வேலைதேடிப் போனார்கள். கொரோனா ஊரடங்கால் திரும்ப சொந்த ஊருக்கே வந்தவர்கள், வருகிற ஆபத்து வரட்டும் என்று வேறுவழியில்லாமல் திரும்ப மீன்பிடித்தொழிலைக் கையிலெடுத்திருக்கிறார்கள். சரியாக அந்தச் சமயத்தில் சுழன்றடித்த ஆம்பன் புயல், அவர்களது வீடுகளையும் படகுகளையும் நொறுக்கி, மிச்சசொச்ச வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்திருக்கிறது. இது ஒரு சிறு உதாரணம். உலகெங்கிலும் இயற்கை சீற்றங்களால் இப்படி அலைக்கழிக்கப்படுபவர்களின் பல கதைகள் காற்றில் கலந்திருக்கின்றன. காலநிலையால் புலம்பெயர்ந்தவர்களின் பட்டியல் மிகப்பெரியது.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இயல்புவாழ்க்கை என்பது நிச்சயம் இயல்பானதாக இருக்கப்போவதில்லை. காலநிலை சீற்றங்கள் பற்றிய எல்லா ஆய்வுகளையும் ஒன்றாகப் படித்தால், காலநிலைப் பேரிடர்கள் நிறைந்த ஓர் எதிர்காலம், 2012 திரைப்படத்தின் டிரெய்லரைப் போல மிகப்பெரிய இரைச்சலுடன் மனக்கண்ணில் விரிகிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களைப் பொறுத்தவரை, அதிகம் விவாதிக்கப்படாத, மேலாண்மையில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்த ஒரு பிரச்னை உண்டு. அதுதான் காலநிலை சச்சரவு. காலநிலை சச்சரவுகள் ஏன் நிகழ்கின்றன? அவற்றின் பாதிப்பு எப்படி இருக்கும்?
அடுத்த கட்டுரையில் பேசலாம்.
- Warming Up...
source https://www.vikatan.com/government-and-politics/environment/disasters-red-alerts-new-normal-is-this-the-trailer-of-our-future
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக