பெண்கள் அரசியல் பேசக்கூடாது என்பது நம் சமூகத்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. பொதுவாக, பெண்களின் ஆடையில் தொடங்கி, வேலை வரை எல்லாவற்றுக்கும் கட்டுப்பாட்டு வளையம் ஒன்று சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வரைமுறைகளையெல்லாம் உடைத்து வந்த பெண்களைக் கேலி, கிண்டல்கள் செய்து முடக்கப் பார்ப்பவர்கள், அதன் பின் காலத்தின் கட்டாயம் கருதி, கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். இந்த எல்லை சராசரி பெண்களுக்கு மட்டுமே... புதுத் துறையில் அடியெடுத்து வைக்கும் பெண், பிரபலமாகவோ, நடிகையாகவோ இருந்துவிட்டால், விமர்சனங்கள் எப்போதும் நிழலாகத் தொடரும்.
நடிகைகள் என்றால் கவர்ச்சியாக ஆடை அணிய வேண்டும், நடனம் ஆட வேண்டும், சமூக கருத்தெல்லாம் பேசக்கூடாது என்ற வரைமுறைகளையெல்லாம் உடைத்து, அரசியலில் தடம் பதித்த பெண் நடிகைகளின் ஷார்ட் லிஸ்ட் இதோ...
கே.பி.சுந்தராம்பாள் தொடங்கி ஶ்ரீப்ரியா வரை திரைத்துறை சார்ந்த பல பெண்கள் அரசியல் வாழ்க்கைக்கு அறிமுகம் ஆனார்கள். ஆனால், நடிகைகளின் அரசியல் பயணத்தை ஜெயலலிதாவுக்கு முன் ஜெயலலிதாவுக்குப் பின் என்று பிரிக்கலாம். வெண்ணிற ஆடை நிர்மலா, ஜானகி ராமச்சந்திரன் போன்ற பெண் திரைப் பிரபலங்கள் ஜெயலலிதாவுக்கு முன்பே தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்தினாலும், நடிகைகளின் மீது இருந்த பார்வையை மாற்றி அமைத்தவர் ஜெயலலிதாதான்.
ஜெயலலிதாவுக்கு அவர் ஆசானாக நினைத்த எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் அரசியல் அழைப்பு வந்தது. பல விமர்சனங்களைப் புறந்தள்ளி தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தார் ஜெயலலிதா.
ஒரு பெண்ணாக அரசியல் களத்தில் அவர் சந்தித்த சிக்கல்களும் அவமானங்களும் ஏராளம். எம்.ஜி.ஆர் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் வண்டியிலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டது, சட்டமன்றத்தில் ஆடை கிழிக்கப்பட்டது, சிறைத்தண்டனை எனப் பல போராட்டங்களைக் கடந்து அரசியல் செய்தார். அவரின் மன உறுதி, அரசியல் செய்த விதம் அடுத்தடுத்து பல நடிகைகளை அரசியல் தளத்துக்குக் கொண்டு வந்தது. இன்று அரசியலில் இருக்கும் தமிழ்த் திரைப்பட நடிகைகள் பலருக்கும் ஜெயலலிதா ஒரு ரோல் மாடலாக இருந்துள்ளார். ஜெயலலிதாவுக்குப் பிறகும் பல நடிகைகள் அரசியல் வாதிகளாக உருவெடுத்துள்ளனர்.
சி.ஆர்.சரஸ்வதி:
1979-ல் நடிப்பு பயணத்தைத் தொடங்கிய சி.ஆர்.சரஸ்வதி 1999-ம் ஆண்டு அ.தி.மு.க கட்சியில் இணைந்தார். 2014-ல் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
குஷ்பு:
வெள்ளித் திரையிலிருந்து ஜெயா தொலைக்காட்சியின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் குஷ்பு. அ.தி.மு.க-வில் இணைவார் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், 2010-ல் தி.மு.க-வில் இணைந்து தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு கட்சியின் தலைமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாக விமர்சனங்களுக்கு உள்ளானார். அதன் பின்னர் தி.மு.க-விலிருந்து விலகி 2014-ல் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதை பல இடங்களில் குற்றச்சாட்டாக வைத்து வந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறான கருத்துகளைத் தன் சமூக வலைதளங்கலில் பதிவிட ஆரம்பித்தார். அதன் பின் 2020-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தன்னை பா.ஜ.க-வில் இணைத்து, கதர் டு காவி என்ட்ரி கொடுத்தார்.
ரோஜா:
1999-ம் ஆண்டு தன்னுடைய அரசியல் பயணத்தைத் தெலுங்கு தேசம் கட்சியில் தொடங்கினார் ரோஜா. நகரி தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். அதன் பின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இரண்டு தேர்தல்களில் வெற்றியும் பெற்றார். 21 வருட அரசியல் வாழ்க்கையில் களப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று ரோஜாவின் அரசியல் அனுபவம் பெரிது.
Also Read: எடப்பாடி ஆட்சி, ரஜினி - கமல் அரசியல்... ஆந்திராவிலிருந்து ரோஜா ஸ்பெஷல் பேட்டி!
நமீதா:
பல வருடங்களாக அரசியல் பயணத்தைத் தொடரவிருப்பதாகச் சொல்லி வந்த நமீதா 2019-ம் ஆண்டு தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டார். தற்போது வரை பா.ஜ.க கட்சியுடன் பயணித்து வருகிறார்.
நக்மா:
2004-ம் ஆண்டு பா.ஜ.க, மக்களவைத் தேர்தலில் நக்மாவை ஹைதராபாத் தொகுதி வேட்பாளராக்க அணுகியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக நக்மா காங்கிரஸில் இணைந்தார். அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும் கடந்த 17 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் நக்மா.
விந்தியா:
தேர்தல் என்றாலே நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதன் பின் அவர்களைக் கண்டு கொள்ளாமல் ஓரங்கட்டப்படுவார்கள். ஆனால், 2006-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அ.தி. மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வருபவர் விந்தியா. அரசியலில் பதவிகளும் முக்கியத்துவமும் தரப்படவில்லை என்றாலும் கடந்த 15 வருடங்களாக ஒரே கட்சியில் இருந்து வருகிறார். 2020-ல் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு விந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது.
ராதிகா:
தன்னுடைய கணவருக்காக அரசியல் பயணத்தை தொடங்கியவர் ராதிகா. 2006-ம் ஆண்டு நடிகர் சரத்குமார் தி.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தபோது ஜெயலலிதா ராதிகாவுக்கு, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்ப்பினர் அட்டை கொடுத்தார். நடிப்பு, பிசினஸ் என்று பிஸியாக இருந்த ராதிகா 2021-ம் ஆண்டு தன் கணவரின் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்து முழுநேரமும் அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறி சின்னத்திரையில் இருந்து விலகியுள்ளார். தற்போது அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Also Read: ``கருணாநிதி, ஜெயலலிதா கூப்பிட்டும் அரசியலுக்கு வரல; ஆனா இப்போ..?" - புதிய முடிவு குறித்து ராதிகா
பல ஆண்டுகளாக அரசியல் பேசி வந்தவர் ஶ்ரீப்ரியா. பல கட்சிகளில் இருந்து தனக்கு அரசியல் அழைப்பு வந்ததாகக் கூறியவர் கடந்தாண்டு நடிகர் கமலின் `மக்கள் நீதி மய்யம்' கட்சியில் இணைந்தார்.
திவ்யா ஸ்பந்தனா:
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் திவ்யா ஸ்பந்தனா... 2012-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2013-ம் ஆண்டு மாண்டியா தொகுதியில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தற்போது வரை காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.
கெளதமி:
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் கெளதமி. கமல் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க கட்சியில் இணைந்தார்.
source https://www.vikatan.com/news/politics/list-of-actresses-who-entered-politics-from-their-cinema-career
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக