Ad

வெள்ளி, 5 மார்ச், 2021

`மோடியால் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது!’ - சீதாராம் யெச்சூரி

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சேலம் அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டார்கள்.

பிரவின்

இக்கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, ''தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியோடு அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் அதி.மு.க - பா.ஜ.க போன்ற தீய கட்சிகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜ.க எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நிலைமையை மேலும் மேலும் சீரழித்து வருகிறது. தனியார் மயக் கொள்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

சீத்தாராம் யெச்சூரி

மத்திய மோடி அரசு கொரோனா காலத்திலும் பொது மக்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நல உதவிகள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். ஆனால் மக்களை ஆறுதல் படுத்தவும் அவர்களுக்கு உதவிடவும் முன்வரவில்லை. மக்கள் வறுமையில் வாடிய சூழ்நிலையில் பத்து லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் சேதம் அடைந்ததாக மத்திய அரசு அறிவித்தது வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சிறு தொழில்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது.

நரேந்திர மோடியால் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயக் கொள்கையினால் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்த கடன் உதவியை மோடி அரசு வசூலிக்காமல் மேலும் மேலும் கடனை வாரி வழங்குகிறது.

தி.மு.க தலைமையில் இடதுசாரி அமைப்புகள் ஆதரவோடு ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படும். அ.தி.மு.க கூட்டணியை தோற்கடிப்பது மூலமே இது சாத்தியமாகும். கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி திரை மறைவாக ஆட்சி அமைத்து வருகிறது.

தேர்தல் என்பதை கேலிக் கூத்தாக பா.ஜ.க நினைத்து வருகிறது. இதற்கு பெரும் எடுத்துகாட்டு சமீபத்தில் புதுச்சேரி நடைபெற்ற ஆட்சி மாற்றமே. எந்த விதிமுறையும் இல்லாமல் அநியாயமான நடைமுறையை கையாளக் கூடிய விதத்தில் செயல்படும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அ.தி.மு.கவின் முகத்திரையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

Also Read: ``இந்தியாவை வாழத் தகுதியற்ற நாடாக மாற்றிவருகின்றனர்!" - சீதாராம் யெச்சூரி வேதனை



source https://www.vikatan.com/news/politics/only-corporate-companies-have-grown-by-modi-sitaram-echury

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக