மும்பையில் கடந்த வாரம் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு வெளியில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று அனாதையாக நின்றது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தகார் நள்ளிரவில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தகார் தானேயை சேர்ந்த மன்சுக் கிரண் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அவர் தானேயில் கடை வைத்து இருக்கிறார். அவரது காரை யாரோ திருடிச்சென்று அதில் வெடிபொருள்களுடன் அம்பானி வீட்டுக்கு அருகில் விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே கிரணிடம் போலீஸார் விசாரணை நடத்தி இருந்தனர்.
விசாரணையில் தனது காரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த மாதம் 18-ம் தேதி மும்பை புறநகர் பகுதியில் உள்ள விக்ரோலியில் நிறுத்திவிட்டு சென்றதாகவும், அதனை யாரோ திருடிவிட்டதாகவும், இது குறித்து உடனே விக்ரோலி போலீஸில் புகார் செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக கிரணை காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்திருந்தனர். போலீஸார் அது பற்றி விசாரித்த போது தானே அருகில் உள்ள கல்வா கழிமுகப்பகுதியில் இருந்து கிரண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கடலில் மிதந்த உடல்..
கழிமுகப்பகுதியில் ஒருவரின் உடல் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு விசாரித்த போது, அவர் காணாமல் போன கிரண் என்று தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாராவது கொலை செய்து கடலில் தூக்கி போட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இது குறித்து தெரிய வரும். இதற்கிடையே இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பட்னாவிஸ் சட்டமன்றத்தில் பேசுகையில், `அம்பானிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டுகளுடன் காரை கொண்டு வந்து நிறுத்தியதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் இவ்வழக்கு விசாரணையை மாநில உள்துறை அமைச்சர் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கவேண்டும்.
கார் உரிமையாளரும், போலீஸ் சச்சின் வாக்கும் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். அதோடு கார் வெடிகுண்டுடன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உள்ளூர் போலீஸார் வருவதற்கு பதில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானேயை சேர்ந்த போலீஸ் அதிகாரியான சச்சின் வாக்தான் முதலில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் கார் உரிமையாளர் தனது காரை தானேயில் நிறுத்திவிட்டு மும்பை வந்து கமிஷனர் அலுவலகம் இருக்கும் இடத்தில் ஒருவரை சந்தித்து பேசியிருக்கிறார். அவர் யார் என்று விசாரிக்கப்படவேண்டும். இது போன்ற பல சந்தேகங்கள் இருப்பதால் இவ்வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கவேண்டும்” என்று மாநில அரசிடம் பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து அம்பானி வீடு இருக்கும் பகுதியில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர்.
Also Read: மும்பை: நள்ளிரவு 1 மணிக்கு வந்த கார்; 20 ஜெலட்டின் குச்சிகள்! - அம்பானியின் வீட்டைத் தாக்க முயற்சி?
source https://www.vikatan.com/news/crime/the-owner-of-a-car-parked-near-ambanis-house-with-bombs-committed-suicide-by-jumping-into-the-sea
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக