Ad

வியாழன், 18 மார்ச், 2021

`காதலா, கரியரா?' - இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் இதுவாக மட்டும் இருக்க வேண்டாம்! #AllAboutLove -7

இந்தக் கதை நிகழ்ந்தது 2012-ல்.

எனக்குத் தெரிந்த காதல் ஜோடி ஒன்று.

என் நண்பனுக்கு வயது அப்போது 27. அவன் தோழிக்கு 25. இருவரும் பெங்களூரில் ஒரே நிறுவனம் (ஐ.டி கிடையாது). மூன்றாண்டுகளாகக் காதலித்து வந்தவர்கள், வீட்டிலும் சொல்லிவிட்டு விரைவில் திருமணம் செய்துகொள்வதாக இருந்தார்கள். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு ஸ்வீடன் நாட்டிலிருந்து ஒரு வேலை வாய்ப்பு வந்தது. நல்ல சம்பளம்; பிடித்த வேலை. ஆனால், என் நண்பனுக்கோ அவர் அங்கு செல்வதில் விருப்பமில்லை. விஷயம் தெரிந்தவுடன் அவன் ரியாக்‌ஷன் இப்படித்தான் இருந்தது.

`என்னாலலாம் அங்க வர முடியாது. நீ அங்கு போறதும் எனக்கு ஓகே இல்ல. உனக்கு எது வேணும்னு நீ முடிவு பண்ணிக்கோ.’

அந்தப் பெண் என்ன முடிவெடுத்தார் என்பதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன் சில விஷயங்கள்.

என் நண்பனிடம் பேசியபோது அவன், ``நான் ஃபோர்ஸ் பண்ணல. அவளதான் முடிவெடுக்க அலவ் பண்ணிருக்கேன்" என்றான். அவனளவில் அந்தப் பெண்ணை முடிவெடுக்க அனுமதித்ததே அவனுடைய பெருந்தன்மை என நம்பினான். அது அவள் திறமை; அவள் வாய்ப்பு; அவள் வாழ்க்கை. அவள் விரும்பிய விஷயமொன்று அவள் வாழ்க்கையில் நடக்கும்போது அதைக் கொண்டாட மனமில்லாதவன், அதைப் பற்றி பொறுமையாக உரையாட முடியாதவன், அவளைப் பாராட்ட நினைக்காதவன் எப்படி அவளுக்கான வாழ்நாள் துணையாக இருக்க முடியும்? அந்தத் தருணத்தைச் சிக்கலாக்கியது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட பிளாக்மெயிலே செய்திருக்கிறான். ``உனக்கு நான் வேணுமா இல்ல அந்த வேலையா?" என்பது கேள்வி இல்லை. ஒரு வகையான மிரட்டல். அன்பான ஒருவர் மீது நாம் சுமத்தும் இந்தச் சுமை, காதலின் வெளிப்பாடாக இருக்கவே முடியாது. போன அத்தியாயத்தில் பொஸெஸிவ்னெஸ் பற்றி பேசும்போது சொன்ன அதே `உடைமை’ ஆக நினைக்கும் மனோபாவம்தான் இங்கும்.

அவன் என்ன செய்திருக்க வேண்டும்?

முதலில் அப்படியொரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்திருக்க வேண்டும்; தன் காதலியைப் பாராட்டியிருக்க வேண்டும். அவனைத் திருமணம் செய்து வாழ்க்கையை ஒன்றாக வாழ ஓகே சொல்லியவர், இதைப் பற்றி யோசிக்க மாட்டாரா? அவர் பேசும்வரை காத்திருந்திருக்க வேண்டும். ஒருவேளை, `ரெண்டு பேரும் ஸ்வீடன் போயிடலாம்’ என அவர் சொல்லியிருந்தால், அப்போது தன் விருப்பம், எண்ணம் என்னவென்பதைச் சொல்லியிருக்கலாம். இருவரும் பேசி திருமணத்தைக் கொஞ்சம் தள்ளிப் போட முயற்சி செய்யலாம். இந்த ரிலேஷன்ஷிப்பில் இருவருக்குமே தமக்குத் தேவையான முடிவெடுக்க உரிமை கொண்டவர்கள். எது முக்கியம் எனத் தோன்றுகிறதோ அந்த முடிவை எடுக்கலாம். உறவுக்குள்ளேயிருந்துதான் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ள வேண்டுமென்றில்லை. இருவரும் பேசி பிரிதல்கூட சில சமயம் நல்ல முடிவுதான்.

`அது எப்படி? இவ்ளோ நாள் லவ் பண்ணிட்டு வேலைன்னு வந்ததும் விட்டுட்டுப் போனா அதுக்கு பேரு லவ்வா?’

இந்தக் கேள்வி இங்கே சிலருக்கு எழுந்திருக்கலாம். ஒருவேளை அதே மாதிரி ஒரு வேலை என் நண்பனுக்குக் கிடைத்திருந்தால்? திருமணம் முடிந்தவுடன் இரண்டு பேருமாக புதிய ஊருக்குச் சென்றிருப்பார்கள். அந்தப் பெண், தன் வேலையை விட்டுவிட்டு கிச்சனில் இட்லி செய்துகொண்டிருந்திருப்பார். தங்கள் காதலுக்காக அந்தப் பெண் செய்த விஷயம் ஒரு பொருட்டாகவே என் நண்பனுக்குத் தோன்றியிருக்காது. வசதியான ஒரு வாழ்க்கையைத் தன் காதலிக்காகத் தந்ததாக மகிழ்ச்சியில் இருந்திருப்பான். வீட்டுக்குளே முடங்கி, தன் வாழ்க்கையை, தன் கனவைத் தொலைத்திருப்பார் என் நண்பனின் காதலி, அவனைக் காதல் செய்ததற்காக.

career vs Relationship

Also Read: ஆண்ட்ரியா சொன்ன அந்த `ரிலேஷன்ஷிப் மிஸ்டேக்'... நீங்களும் செய்றீங்களா? #AllAboutLove - 6

நம் சமூகத்தில் குடும்பத்துக்காக பலி கொடுப்பது பெரும்பாலும் பெண்களின் கனவுகளைத்தான். நம் முன்னோர்கள் அன்றிருந்த தேவைக்கேற்ப வகுத்த குடும்ப விதிகள் சரியா தவறா என்பதற்குள் நாம் போக வேண்டாம். ஆனால், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வேலை செய்யத் தொடங்கிவிட்ட பின்னும் அந்தப் பழைய விதிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம் என்கிறேன். குறிப்பாக, காதலுக்குள்ளாவது அது வேண்டாமே. கரியரா ரிலேஷன்ஷிப்பா என ஒரு சூழல் வந்தால் பெண்கள் கரியரைத்தான் தேர்தெடுக்க வேண்டுமென சொல்லவில்லை. அதை அந்தப் பெண்ணே முடிவு செய்ய வேண்டும். அப்படியொரு இயல்பான சூழலை அந்தக் காதலன் உருவாக்கித் தர வேண்டுமென்கிறேன். அதுதான் காதல் என்கிறேன்.

இது தொடர்பாக இன்னும் பேச வேண்டியிருக்கிறது. அதற்கு முன் அந்தப் பெண் எடுத்த முடிவைச் சொல்லிவிடுகிறேன். காதலனுக்காக ஸ்வீடனுக்கு நோ சொல்லிவிட்டார். திருமணம் முடிந்ததும் குழந்தைக்காக வேலையையும் விட்டுவிட்டார். 5 ஆண்டுகள் கழிந்தன. நண்பன் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கி, அது தோற்று பொருளாதார ரீதியாகச் சுத்தமாகப் படுத்துவிட்டான். கடன் சுமை அதிகமானது. வேறு வழியின்றி மனைவியை வேலைக்குப் போகச் சொன்னான். அவரும் போனார். ஆனாலும் பிரச்னைகள் தீரவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அந்தப் பெண் அதே பெங்களூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதைவிட குறைவான சம்பளத்துடன் இப்போது வாழ்கிறார்.

Love

ஒரு வேளை அந்தப் பெண் முடிவை மாற்றி எடுத்திருந்தால், இந்தக் கதைக்கு இன்னொரு வெர்ஷன் கிடைத்திருக்கும். அதில், அந்தப் பெண் ஸ்வீடன் சென்றிருக்கலாம். போன இடத்தில் காதலனை மிஸ் செய்து தவித்திருக்கலாம். வாழ்க்கையில் செய்த பெரிய தவறென ஸ்வீடன் வந்ததையும், அதனால் நிகழ்ந்த பிரேக் அப்பையும் நினைத்திருக்கலாம். அல்லது சுந்தர் பிச்சை போல உலகமே அறிந்த ஒருவராக அவர் கரியரில் ஜொலித்திருக்கலாம். வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கமென நமக்குத் தெரியாது. ஆனால், அங்கே அது அவள் வாழ்க்கை; அவள் முடிவு; அவள் தவறு. அதற்காக வருந்துவது ஓகே. ஆனால், செல்லாமல் விட்டதற்காக வருந்தினால் அங்கே அது அவள் வாழ்க்கை; காதலன் முடிவு; காதலன் தவறு. அதற்கேன் அவள் பொறுப்பாக வேண்டும்? முடிவெடுப்பது ஒரு கலைதான். ஆனால், அது மட்டுமே நம் வாழ்வைத் தீர்மானித்துவிடாது. நம்மை மீறி நடக்க இங்கே பல விஷயங்கள் உண்டு.

carpe diem என்றொரு சொல் உண்டு. அதற்கு, எதிர்காலத்தை நினைத்து வருந்துவதைவிட நிகழ்காலத்தைக் கொண்டாடுவது எனப் பொருள். Career Vs Relationship போன்ற சிக்கலான சமயத்தில் அப்படி முடிவெடுக்கக் கூடாது. இங்கே கொஞ்சம் யோசிக்க வேண்டும். சொல்லப்போனால், உணர்ச்சிகளை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு யோசிக்க வேண்டும். ஒரு ரிலேஷன்ஷிப்பின் தொடக்கத்தில் இது நிகழ்ந்தால்கூட முடிவெடுப்பது சுலபம். இந்த உறவுதான் வாழ்நாளுக்குமானது என முடிவெடுத்திருந்த நிலையில் நிகழ்ந்தால்தான் சிக்கல். அப்போதும், அதை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.

சூர்யா - ஜோதிகா

Also Read: இந்த 5 விஷயங்களை யோசிக்காமல் ரிலேஷன்ஷிப்புக்கு `Yes' சொல்லாதீர்கள்! #AllAboutLove - 5

இங்கே சூர்யாவையும் ஜோதிகாவையும் 36 வயதினிலே படத்தையும் ரெஃபரென்ஸ் ஆகச் சொல்வது சரியாக இருக்கும். திருமணத்துக்குப் பின் ஜோதிகா அதிகம் நடிக்கவில்லை. காரணம் நமக்குத் தெரியாது. ஆனால், ஜோதிகா மீண்டும் நடிக்க விரும்பியபோது சூர்யா செய்ததுதான் முக்கியமான ஒன்று. ஜோதிகாவுக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்காகத் தயாரிப்பாளர் ஆனார். புதிய ஜோவுக்கு எங்கெல்லாம் பாராட்டு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடிப்போய் அதை ரசித்து மகிழ்ந்தார். அங்கே காதல் வாழ்கிறது. கோலிவுட்டைவிட பாலிவுட் இந்த விஷயத்தில் கொஞ்சம் மேல்தான். ஐஷ்வர்யா - அபிஷேக், காஜல் - அஜய் என நிறைய உதாரணங்கள் சொல்லலாம். பிரியங்கா சோப்ராவும் அவர் கணவரும் ஒரே ஊரில் இருந்தால் அவ்வளவுதான். இருவரும் காதலிக்கிறார்கள்; திருமணம் செய்து கொண்டார்கள்; அவரவர் வேலையையும் பார்க்கிறார்கள். அனுஷ்கா ஷர்மா நடிக்கவும் செய்கிறார், கோலிக்காக மேட்ச் பார்க்கவும் வருகிறார்.

என் நண்பனுக்கு நேர்ந்தது போன்றதொரு சூழல் உங்கள் வாழ்க்கையில் நேர்ந்தால் நீங்கள் என் நண்பனைப் போல நடந்துகொள்ளாதீர்கள். காதல் என்பது நம்மைச் சுற்றி பறக்கும் பட்டாம்பூச்சி போல. அதை ரசிப்பதுதான் அழகு. கைகளுக்குள் அடக்கி நசுக்குவது அல்ல.

காதலியுங்கள்; கட்டாயப்படுத்தாதீர்கள்.

- காதலிப்போம்


source https://www.vikatan.com/lifestyle/relationship/what-should-we-do-when-have-to-choose-between-career-and-relationship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக