தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதியை திரித்து, சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டு விதமாக வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்க்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கும் திட்டம் 1989-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது `அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்’ என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற 2011-ம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை `டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்த திட்டத்தின்படி, கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் ஒருவர் உயர்வகுப்பையும் மற்றவர், பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில், 15,000 ரூபாய் பணமும், 8 கிராம் தங்கமும் உதவியாக வழங்கப்படுகிறது. இதுவே தம்பதியரில் ஒருவர் பட்டியல், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில் 30,000 ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை புதுப்பித்து செயல்ப்படுத்துவோம் என்று தனது 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது தி.மு.க. அதில் தெரிவித்திருப்பதாவது, `` கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், நிதியுதவியாக 60,000 ரூபாயும், தாலிக்கு 8 கிராம் தங்கக் (22 கேரட்) காசுகளும் வழங்கப்படும் ” என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read: திமுக தேர்தல் அறிக்கை: `கலைஞர் உணவகம்; இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.1,000 கோடி!' - ஸ்டாலின்
தி.மு.க-வின் இந்த வாக்குறுதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. `முதலியார்,வன்னியர், யாதவர், நாடார், அகமுடையார், ரெட்டியார், பிள்ளை, முக்குலத்தோர், செட்டியார் சாதியைச் சேர்ந்த பெண்களை பட்டியலின, பழங்குடியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் உதவித் தொகை கொடுப்பதாக தி.மு.க விபரீத வாக்குறுதி கொடுத்திருக்கிறது’, என்று சாதிய மோதலை தூண்டும் விதமாக திரித்துத் தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து பெண் ஒருவர் பேசும் வீடியோவும் அதிகம் பகிரப்பட்டது.
சமூகங்களிடையே வன்மத்தைத் தூண்டும் விதமாக பேசப்பட்டிருக்கும், இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த வீடியோவில் பேசிய பெண் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை டி.ஜி.பி-க்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கடிதம் எழுதியுள்ளார். அதன் பேரில் அந்தப் பெண் யாரென்று கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்யவும், வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும் பணியிலும் காவல் துறை ஈடுபட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/action-on-women-for-misconveying-dmk-manifesto
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக