பரபரப்பாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் யுகத்தில், உணவு, உடை முதல் சிறிய ஊக்கு வரை எல்லாமும் கையில் தேடிவந்து சேரும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அந்த வகையில் அரசியலும் நாம் வைத்திருக்கும் கேட்ஜெட்களுக்குள் அடங்கிவிட்டது. முன்னெல்லாம் பொதுக்கூட்டகள், தெருமுனை பிரசாரங்கள், துண்டு காகிதங்கள் என இளைஞர்கள் ஓடி ஓடி அரசியல் கற்றனர். தற்போது உள்ள இளைஞர்கள் ஸ்மார்ட்டாக யூடியூப், வாட்ஸ்அப் என சமூக ஊடகங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அங்கும் அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு விளம்பரங்கள் செய்கின்றன. இந்த விளம்பரங்கள் இளைஞர்களிடையே அரசியல் ரீதியில் தாக்கம் ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? என்று இளைஞர்களிடமே கேட்டோம். அவர்களின் அரசியல் பல்ஸை இங்கே பார்க்கலாம்.
கோமல் ஹரினி - கல்லூரி மாணவி, மதுரை
``பொதுவாக நான் அரசியல்வாதிகளைப் பற்றியும் எனது தொகுதி வேட்பாளர்களையும், அவர்களின் அறிவிப்புகளைப் பற்றியும் செய்தி விளம்பரங்களின் மூலம் தான் தெரிந்து கொள்வேன். சினிமாவும் எனக்கு அரசியலை கற்றுக் கொடுத்துள்ளது. எந்தெந்தத் துறைகளில் எப்படி எல்லாம் ஊழல் நடக்கிறது என்பதையும் இப்படி அரசியல் நடந்துகொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதையும் நான் சினிமாவை பார்த்து தெரிந்து கொள்கிறேன். இவை அனைத்தும் என்னைச் சிந்திக்க வைக்கின்றன. தவிர இவருக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும் என விளம்பரங்களின் மூலம் நான் உணர்ந்ததில்லை. எனது வேட்பாளர்களைப் பற்றித் தெரிந்து கொண்டபிறகு சுயமாக நன்கு சிந்தித்து வாக்களிப்பேன்” என்கிறார்.
கார்த்திகா.ஜெ - கல்லூரி மாணவி, திருவாரூர்.
``விளம்பரம் பார்த்து நான் ஓட்டு போடுறது இல்லை. விளம்பரம் அனைத்துக் கட்சிகளும் பண்ணுறாங்க. விளம்பரம் போடுற எல்லோருக்கும் ஓட்டுப் போட முடியாதுல. தினமும் செய்தி பார்க்குறேன், அதைப் பார்த்து யாருக்கு ஓட்டு போடலாம்னு முடிவு பண்ணலாம். எல்லோருக்கும் சுயமா யோசிக்க அறிவு இருக்கு, அதை உபயோகப்படுத்தித் தான் ஓட்டு போடனும்.”
சுஸ்ருதன் - கல்லூரி மாணவர், கோயம்புத்தூர்.
``முதலில் எனது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைப் பார்ப்பேன். அவர்களின் கட்சியைத் தாண்டி தனிநபரின் பின்புலத்தைப் பார்ப்பேன்.வெற்றி பெற்ற வேட்பாளர் இதற்கு முன்பு என்ன செய்தார், கடந்த முறை தோல்வி அடைந்தவர் என்ன செய்தார் என்பதை ஆராய்ந்து, அவர்கள் தற்போது என்னென்ன அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்கள்.., அந்த அறிக்கைகளை நமது நிதியைக் கொண்டு செயல்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பேன்.
ஓரளவிற்குச் செய்யக்கூடிய வாக்குறுதிகளைக் கொடுப்பவர்களை ஆதரிக்க முயல்வேன். மேலும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும். அப்படியிருக்க என் தொகுதியில் வெற்றி பெற்று எங்கள் தொகுதி மக்களின் பிரதிநிதி ஆகப்போகிறவர், எங்களில் ஒருவராக எங்கள் தொகுதியைப் பற்றி நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் என நினைப்பேன். இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் எனது வாக்கு இருக்கும். செய்தி, விளம்பரம் அரசியல்வாதிகளின் அறிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் கருவி, அதைப் பார்த்து மட்டுமே நான் வாக்களிக்க மாட்டேன்.”
ஹரி பாரதி - கல்லூரி மாணவர், திருவாரூர்
``அது எப்படி விளம்பரத்தைப் பார்த்து ஓட்டுப் போட முடியும்! அவங்க ஓட்டு வாங்க அனைத்து விதமான விளம்பரங்களையும் செய்யத்தான் செய்வாங்க. பெண்களுக்கு முழு பாதுகாப்புன்னு விளம்பரம் போடுறாங்க, ஆனா பொள்ளாச்சி சம்பவம் நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். அதெல்லாம் பார்த்து எப்படி ஓட்டுப் போட முடியும் ? களத்தில் நமக்காக போராடுறவங்க யாருன்னு நமக்குத் தெரியும்! அவங்களுக்கு தான் என் ஓட்டு!”
ர. மகேஷ் குமார் - தனியார் நிறுவன ஊழியர், கும்பகோணம்
``இப்போ பாக்குற டிஜிட்டல் விளம்பரங்களை ஆரம்பிச்சது தி.மு.க தான். பிரசாந்த் கிஷோர் அறிவுரைகள் படி தி.மு.க நடந்துக்க அதைக் கொஞ்சம் பெருசா காப்பி பண்ணி அ.தி.மு.க விளம்பரம் செய்றாங்க. உள்கட்சி பூசல்களையும் கடந்து அ.தி.மு.க விளம்பரங்களின் மூலம் மக்களைச் சென்று சேர்ந்துள்ளது. தி.மு.க தன் கறைகளைத் துடைக்க மெனக்கெட வேண்டும். மக்கள் கள நிலவரங்களை ஆராய்ந்து தான் வாக்களிப்பார்கள் என்றாலும் எம்.ஜி.ஆர் என்னும் தலைவரின் எழுச்சியே ஊடகங்கள் மூலம் தான் என்பது முந்தைய தலைமுறையின் கள நிலவரம்! இளைஞர்கள் கள நிலவரங்களையும் கொள்கைகளையும் ஆராய்ந்து தான் வாக்களிப்பார்கள் விளம்பரங்கள் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தாது!”
செய்யது இப்ராகிம் ஆஷிக் - தனியார் ஊழியர், தூத்துக்குடி
``மக்களுக்கு யார் நல்லது செய்வார்களோ, அவர்களுக்குத் தான் வாக்களிப்பேன். விளம்பரங்களைப் பார்த்து நிச்சயமாக வாக்களிக்க மாட்டேன். அது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல் என நான் நினைக்கிறேன். தொலைக்காட்சி, இணையம் என்று எங்குப் பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் தான் உள்ளன. இவர்கள், விளம்பரங்களுக்குச் செலவிடும் தொகையை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். இவர்களுடைய விளம்பரங்களைப் பார்த்துப் பார்த்து எப்போது தேர்தல் முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். அரசியல் கட்சிகள் இன்றைக்கு கார்ப்பரேட் கைவசம் சென்றுவிட்டன. அதனால், தான் விளம்பரங்களுக்கு நிறையத் தொகையைச் செலவிட்டு, மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.”
பாலாஜி - தனியார் நிறுவன மேலாளர், சென்னை.
``தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள், வேட்பாளர்களின் செயல்பாடுகளைப் பொறுத்துத் தான், தேர்தலில் வாக்களிப்பேன். ஊடகங்களின் மூலமாக மக்களிடம் எளிதில் சென்றடைய முடியும். அதனால் தான் அரசியல் கட்சிகள் ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக, தமிழக அரசியலுக்கும், சினிமாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே தான், அரசியல் கட்சிகள் சினிமாவுக்கும், விளம்பரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அது இந்த தேர்தலில், நிச்சயமாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, ஓட்டுகளாக மாறும்.இந்த விளம்பரங்களின் மூலம், ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளைப் பற்றி வெறுப்பு பிரசாரம் தான் செய்து வருகின்றனர். மக்கள் நலனைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதனால், நான் விளம்பரங்களைப் பார்த்து வாக்களிக்க மாட்டேன்.”
ஸ்ரீராம் குமார் - கல்லூரி மாணவர், திருநெல்வேலி
``தமிழக அரசியல் சூழலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு மக்களுக்கான செயல்திட்டங்களை வகுப்பவர்களுக்கே, நான் ஓட்டுப் போடுவேன். அரசியல் கட்சிகள், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பதில், ஒரு நன்மையும் இல்லை. ஒவ்வொரு கட்சிகளும், தங்களுடைய கொள்கைகளை, திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றனர். அது அந்தந்த கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம். விளம்பரங்கள், தேர்தலில் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்கும். இன்றைக்கு திரைத்துறையிலிருந்து நிறையப் பேர் கவர்ச்சிகரமான பிம்பங்களாகத் தேர்தல் அரசியலில் குதிக்கிறார்கள். தனிமனித பிம்பத்தைத் தவிர்த்து கொள்கைகளைப் பிரதானமாக முன்னிறுத்தினால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, அரசியலில், மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுக்குத் தான், வாக்களிக்க வேண்டும். விளம்பரம், சினிமா போன்ற நாயக பிம்பங்களைத் தவிர்க்க வேண்டும்.”
ஜெகன் - இயற்கை வேளாண்மை வழிகாட்டி, திருச்சி.
``ஊடகங்களில் வரும் விளம்பரங்கள், பாடல்கள் இவை அனைத்துமே போலியான, செயற்கை தனம் வாய்ந்தவையாகவே எனக்குத் தோன்றுகிறது. பிற அரசியல் கட்சிகளின் மேல் நேர்மறை அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் அரசியல் கட்சியின் கொள்கைகள் மக்களிடம் சென்று சேர்க்க முயற்சிக்க வேண்டும். விளம்பரத்திற்கு எதற்கு இவ்வளவு செலவு செய்யவேண்டும். அதனால் இவர்கள் தேர்தலுக்கு பின்னான திட்டம் என்ன, மக்களை நலப்படுத்துவதா அல்லது தங்கள் கட்சியை வலுப்படுத்துவதா என்ற எதிர்மறையான எண்ணங்கள் தோன்றத் தான் வழி வகுக்கிறது. அதனால் என் வாக்கு என்றும் எதையும் விளம்பரப்படுத்தாத கட்சிக்கு மட்டுமே.”
லதா - கல்லூரி மாணவி, நாமக்கல்.
``என்னதான் களவிவரங்களை ஆராய்ந்தாலும் நமக்குத் தாண்டிய சில விஷயங்கள், எங்கள் பிறப்புக்கு முன் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், அதனால் பலனடைந்தவர்கள் என அனைத்தும் ஊடகங்கள் வழியாகவும், திரைப்படங்கள் வழியாகவும் தானே என்னால் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனபதை முடிவு செய்ய விளம்பரங்களும் உதவியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.”
Also Read: Election: `ஓட்டுக்கு பணம் பெறுவது சரியா?’ - என்ன சொல்கிறார்கள் முதன்முறை வாக்காளர்கள்?
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆள நினைக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் நேரங்களில் விளம்பரங்களுக்குக் கோடிக்கணக்கில் செலவிடுவதை முதலீடாக நினைத்து வருகிறார்கள். பல கட்சிகள் சொந்தமாக சேனல்களை நடத்தி செய்திகளையே பரப்புரையாகத்தான் செய்து வருகிறார்கள். இன்றைய இளைஞர்கள் இந்த செயல்களை எதிர்க்கவில்லை. மாறாக அவர்களைத் தெளிவாக யோசிக்க வைப்பதற்குக் குறைந்தபட்ச உதவியாக ஊடகங்கள்தான் உதவுகிறது என்பது மறுக்கமுடியாத நிதர்சனம். இருப்பினும் இளைஞர்கள் தங்கள் சுய சிந்தனை கொண்டே வாக்களிக்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/will-election-advertisements-impact-youngster-voters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக