Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

ஆளிவிதை, நெல்லி, கும்மியாணம்... இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்... வழிகாட்டல்!

``எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியல. சளி, காய்ச்சல்னு மாசத்தில் பாதி நாள் ஏதாவது ஒரு உடல் பிரச்னை வந்துருது. மாத்திரை, மருந்து இருந்தா எழுதித்தாங்க டாக்டர்" - எனக் கேட்பது நம்மில் பலருக்கு சர்வ சாதரணமாகிவிட்டது. அதனால் மினரல், வைட்டமின் மாத்திரைகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாத்திரைகள் தவிர்த்து நம்முடைய உணவுப் பழக்கம் மூலமே நம் உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளையும் நம்மால் பெற முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் சித்த மருத்துவர் க.ராஜாசங்கர்.

``ஆளி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. ஆளி விதை அரை கப், பச்சைப் பயறு ஒரு கப், நிலக்கடலை அரை கப் எடுத்து மூன்றையும் வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதைக் கருப்பட்டி சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து வாரம் இரு முறை ஓர் உருண்டை எடுத்துக்கொள்ளலாம்.

கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!

எலுமிச்சைப்பழம் - ஒன்று , மஞ்சள் கிழங்கு - சிறிய துண்டு, இஞ்சி, பச்சை மிளகு - அரை டீஸ்பூன், இந்துப்பு- ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் இந்துப்புச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். உப்பு கரைந்ததும். மேற்சொன்ன பொருள்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட உடல் வலுப்பெறும். கல்லீரலை வலுப்படுத்தும்.

நெல்லிக்காய் ஒன்று, இஞ்சி துண்டு ஒரு இன்ச் அளவு, உப்பு மற்றும் மிளகு தேவையான அளவு சேர்த்துப் பச்சடியாகச் செய்து வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக, நெல்லிக்காய் ஜூஸாக அரைத்துக் குடிப்பதை மக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். ஜூஸ் செய்யும்போது உணவில் உள்ள நார்ச்சத்துகளை நாம் இழந்து விடுவோம். எனவே, கூடுமானவரை பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் பச்சடியாகவோ, லேகியமாகவோ செய்து சாப்பிடலாம்.

துளசி இலை, வேப்பம்பட்டை, மிளகு, மஞ்சள் பொடியை ஒன்றாகச் சேர்த்து வாரம் ஒரு முறை கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.

கஷாயம்

கற்பூரவல்லி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து ஆவியில் வேக வைத்து சாறு எடுத்து மிளகுப் பொடியும் தேனும் கலந்து வாரம் ஒரு முறை குடித்து வர சளி பிரச்னைகள் அண்டாது.

கொண்டைக்கடலை, பாசிப்பயறு இவற்றை முளைக்கட்டி வாரம் இரு முறை காலை நேரத்தில் சாப்பிடலாம். அல்லது வேக வைத்தும் எடுத்துக்கொள்ளலாம். அவற்றில் உள்ள புரதங்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.


தினையில் உள்ள பீட்டா கரோட்டின், கம்பில் உள்ள புரதம் மற்றும் உயிர் சத்துகள் நம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவற்றை வெல்லத்துடன் உருண்டை பிடித்து மாலை நேர சிற்றுண்டியாகச் சாப்பிட்டு வரலாம். நேரம் இல்லை என்பவர்கள் வாரம் ஒரு முறை ஏதேனும் ஒரு சிறுதானியத்தை வேக வைத்து கஞ்சி செய்து காலை நேர உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

முளைக்கட்டிய பாசிப்பயறு

பச்சைப்பயறு, நரிப்பயறு, உளுந்து, வேர்க்கடலை போன்ற தானிய வகைகளை சம அளவு எடுத்து வேக வைத்து அவற்றுடன் கருப்பட்டி பாகு, தேங்காய்ப்பால் சேர்த்து கும்மியாணம் என்ற பானம் செய்து குடிக்கலாம். இதை நெல்லை மாவட்ட மூதாதையர்கள் ஆடிமாத பானமாக உண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தனர். அதை நாமும் உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

சளி, காய்ச்சல், உடல் அசதி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்களிடம் சென்றால் பெரும்பாலும் ஜிங்க் ஆக்ஸைடு மருந்துகளைத்தான் பரிந்துரைப்பார்கள். எள், நிலக்கடலை, மஞ்சள் பூசணி விதைகளில் ஜிங்க் ஆக்ஸைடு சத்து அதிகளவு உள்ளது. எனவே, இத்துடன் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து உருண்டைகள் பிடித்துச் சாப்பிட்டு வர உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் கூடும். உடலும் ஆரோக்கியம் பெறும்.

மலைத்தேனை நீரில் கலந்து வாயில் 10 நிமிடங்கள் வைத்து உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கும். நான்கு மிளகைப் பொடித்து பாலுடன் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள் தூள் கலந்து வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.

கீரைகள்

அனைத்து வகை கீரைகள், குறிப்பாக முருங்கைக் கீரை, பீட்ரூட் கீரை, முள்ளங்கிக்கீரை, கோதுமைப் புல், வாழைப்பூ, ராஜ்மா, காராமணி போன்ற உணவுகளை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த வெள்ளையணுக்கள், சிவப்பணுக்களின் உற்பத்தி சீராக நடைபெறும். அதனால் நோய் தொற்றுகள் நம்மைத் தாக்காமல் இருக்கும்.

தினமும் இரண்டு பேரீச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அதே போல் பூண்டு, புதினா போன்றவற்றை அன்றாட உணவில் அவசியமாக்குங்கள். பூண்டை பாலுடன் வேக வைத்து மசித்து மஞ்சள் பொடி சேர்த்து இரவு நேரத்தில் குடித்து வர, உடலில் ரத்த ஓட்டம் சீராக இரருக்கும். சரியான தூக்கம், தினமும் மூன்று லிட்டர் தண்ணீர், இரு நேர திட உணவும் ஒரு நேர பழ உணவும் அவசியமான ஒன்று.

Also Read: நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்?

மேற்சொன்ன வழிமுறைகள் எல்லாம் பொதுவாக அன்றாடம் நாம் பின்பற்ற வேண்டியவை. அதற்காக உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நானே எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்கிறேன் என உணவுமுறையைப் பின்பற்றுவது தவறு. இந்த உணவு முறையை வழக்கமாக்குவதன் மூலமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். ஒரே இரவில் , உணவின் மூலம் உடலை நோய் தாக்குதலிருந்து மீட்டெடுப்பதெல்லாம் இயலாத காரியம். எனவே, நோய்த்தொற்றுகள் இருந்தால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெற்று அவர்கள் அளிக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியம் இயல்பான பின் மேற்சொன்ன உணவு முறையைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நோய் நொடியின்றி வாழலாம்.



source https://www.vikatan.com/food/healthy/siddha-doctor-gives-tips-to-strengthen-our-immune-system-by-healthy-foods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக