Ad

வெள்ளி, 26 மார்ச், 2021

மிஸ்டர் கழுகு: கான்வாயில் பயணமாகும் ஸ்வீட் பாக்ஸ்கள்!

‘‘நுங்கு ஜூஸுடன் தயாராக இரும்!’’ - கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ஆஜரான கழுகாரிடம் நுங்கு ஜூஸை நீட்டினோம். வாங்கிப் பருகியவர், செய்திகளுக்குள் நுழைந்தார். ‘‘இப்போதெல்லாம் தி.மு.க-வினர் மத்தியில் ‘ஃபுல் ஸ்வீப்’ என்ற வாசகம் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுவருகிறது. ‘200 தொகுதிகளைத் தொட்டுவிடுவோம்’ என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். தி.மு.க வேட்பாளர்களும் தொண்டர்களும் சோர்வடையாமல் இருக்கவும், ஆளுங்கட்சியிடம் விலைபோய்விடாமல் இருக்கவுமே அறிவாலயத்திலிருந்து இந்த வாசகம் பரப்பட்டுவருகிறது என்கிறார்கள்.’’

‘‘அவர்களுக்கும் ஆசை இருக்காதா என்ன!’’

‘‘இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நா மனித உரிமை ஆணையத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியிருக்கிறார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோதான் ப.சி-யிடம் இதை வற்புறுத்தினாராம். நீண்ட அழுத்தத்துக்குப் பிறகே ப.சி-யும் ஒப்புக்கொண்டு ‘ட்வீட்’ செய்திருக்கிறார். இலங்கைப் போர் உச்சத்திலிருந்தபோது, சிதம்பரத்தை வறுத்தெடுத்தவர் வைகோ. ‘அன்று, தமிழர்களின் துரோகி என்று விமர்சித்துவிட்டு, இப்போது எதற்காக வைகோ ஆதரவு கேட்க வேண்டும்?’ என்று பொருமுகிறார்கள் ம.தி.மு.க-வினர்.’’

“எப்படியோ இதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறந்தால் சரி...’’

‘‘வாஸ்தவம்தான். சமீபத்தில் சென்னை மாநகரத்தின் உச்சபட்ச ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், தி.மு.க வாரிசுப் பிரமுகருக்கு தூதுவிட்டிருக்கிறார். ‘துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த ஃபைல்களைத் தருகிறேன். ஆட்சிக்கு வந்த பிறகு கரிசனம் காட்டுங்கள்’ என்று கோரிக்கைவைத்திருக்கிறார். ஆனால், சென்னை மாநகராட்சியில் நடந்த சில ஊழல் விவகாரங்களில் அந்த அதிகாரியின் பெயரும் அடிபடுவதால், ‘பிரகாச’மாக ரியாக்‌ஷன் தராமல் தி.மு.க தரப்பு யோசிக்கிறதாம்.’’

வைகோ - ப.சிதம்பரம்

‘‘என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்...’’

‘‘தமிழகத்தில் பவர்ஃபுல் அமைச்சராக வலம்வரும் ஒருவர், தனது சிபாரிசில் கட்சியில் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு சீட் வாங்கிக்கொடுத்திருக்கிறார். அவர்களிடம், ‘தேர்தல் முடிந்த பிறகு நான் என்ன சொல்கிறேனோ, அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பாக சசிகலா குடும்பத்தின் மூத்தவர் ஒருவரைத் தொடர்புகொண்ட அந்த பவர்ஃபுல் அமைச்சர், ‘தேர்தல் முடிந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும். உங்கள் தரப்புக்கு பவர் வந்ததும், உங்கள் பின்னால் அணிவகுக்கத் தயார்’ என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம்!’’

‘‘இது எடப்பாடிக்குத் தெரியுமா?’’ என்ற நம் கேள்வியைக் கண்டுகொள்ளாத கழுகார், அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘மார்ச் 30-ம் தேதி தமிழகத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். அந்தப் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் மேடையேற்ற திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க. இதற்கிடையே, ‘மோடி, அமித் ஷா ஆகியோர் ஒருமுறை மட்டுமே தமிழகத்துக்குப் பிரசாரத்துக்கு வந்தால் போதும்’ என்று தமிழக பா.ஜ.க தரப்பிலிருந்தே சொல்லியிருக்கிறார்களாம். கூட்டணிக்குள் ஒத்துழைப்பு இல்லாததால், ஆட்களைத் திரட்டுவது கடினமாக இருப்பதாகப் புலம்பியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.’’

‘‘பாவம்தான்...’’

‘‘ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர்.சி-யின் அலம்பல் தாங் கவில்லை என்கிறார்கள் பா.ஜ.க-வினர். ‘பிரசாரத்துக்கு குஷ்புவை அழைத்துச் செல்வதற்காக கார் அனுப்புவதில்லை; சரியான ஏற்பாடுகள் செய்வதில்லை’ என்று நிர்வாகிகளைக் குடைந்தெடுக்கிறாராம். ‘இங்க என்ன ஷூட்டிங்கா நடக்குது... அவங்களுக்கு வேணும்னா அவங்கதான் வந்து சேரணும்’ என்று பா.ஜ.க தரப்பில் பொருமல் கேட்கிறது.’’

‘‘ஓஹோ...’’

‘‘தென்மண்டல ஐ.ஜி-யாக இருந்த முருகனை தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அங்கிருந்து மாற்றிவிட்டு, தற்காலிகப் பொறுப்பாக மதுரை மாநகர கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் கொடுத்திருக்கிறார்கள். இந்தநிலையில், காலியாகவுள்ள ஐ.ஜி பதவிக்கு யாரை நியமிப்பது என்ற விவாதம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 43 ஐ.ஜி-கள் வெவ்வேறு பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைத்தான் தென்மண்டல ஐ.ஜி-யாக நியமிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ளவர்களில் ஆபாஷ்குமார், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்ட மூவர் பெயர்களை மத்திய தேர்தல் கமிஷனுக்கு தமிழக டி.ஜி.பி திரிபாதி சிபாரிசு செய்திருக்கிறாராம். மூவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், இதை மேற்கண்ட இருவரும் விரும்பவில்லை. ஏனெனில், இப்படித் தேர்வு செய்யப்படுபவர்கள் கூடுதல் டி.ஜி.பி என்கிற அந்தஸ்தில் இருந்தாலும், தங்களைவிட ஜூனியரான சட்டம் - ஒழுங்குப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யான ஜெயந்த் முரளியிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டிவரும். அதனால், ‘ஐ.ஜி அந்தஸ்திலேயே யாரையாவது தென்மண்டலத்துக்கு நியமித்துக்கொள்ளுங்கள். எங்களை விட்டுவிடுங்கள்’ என்றார்களாம்.’’

‘‘ஸ்வீட் பாக்ஸ்கள் படு ரகசியமாக பார்சல் செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டோமே?’’

‘‘உமக்கும் செய்தி வந்துவிட்டதா? அ.தி.மு.க-வின் ஸ்வீட் பாக்ஸ் விநியோக மேற்பார்வையை ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூவரிடமும், சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியிடமும் ஏற்கெனவே ஆட்சித் தலைமை ஒப்படைத்திருக்கிறது. ஒரு தொகுதிக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்கள் வீதம் பத்து தொகுதிகளுக்குத் தேவையான பாக்ஸ்கள் மொத்தமாக ஒரு பாயின்ட்டில் வைக்கப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதமே குறிப்பிட்ட பாயின்ட்களில் இப்படிக் கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டனவாம். இப்போது அந்த ஸ்வீட் பாக்ஸ்கள், அந்த பாயின்ட்களிலிருந்து ஆட்சிபீடத்தின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக, காவல்துறை வாகனங்களில் அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதாம். குறிப்பாக, ஆட்சிபீடத்தின் கான்வாயில் வரும் ஒரு டெம்போ டிராவலர் வண்டியில்தான் ஸ்வீட் பாக்ஸ்கள் பயணமாகின்றன என்கிறார்கள்.’’

‘‘ம்ம்ம்...’’

“பிரசாரம் முடிந்தவுடன், டெம்போ டிராவலர் வாகனத்தில் அமர்ந்திருக்கும் மன்னர் பெயர் கொண்ட பாதுகாப்பு அதிகாரியையும், ‘ரேஷ்’ அதிகாரியையும் வேட்பாளர்கள் வந்து பார்க்கிறார்கள். வேட்பாளர்கள் கைகாட்டும் நபர்களிடம் மூன்று ‘டிராவல் பேக்’குகள் கைமாறுகின்றன. இந்த பேக்குகளைத் துப்புரவுப் பணிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரிகள், நகரப் பேருந்து நடத்துநர் என்று யாருமே யூகிக்க முடியாத நபர்களின் வீடுகளில் ‘சேஃப்டி’ செய்துவிடுகிறார்களாம். அங்கேயிருந்துதான் பகுதி, வட்டம், பேரூர், ஒன்றிய நிர்வாகிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் பிரித்து அனுப்பப்படுவதாகத் தகவல். இந்த விவகாரம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, ஸ்வீட் பாக்ஸ் ஏற்றிச் செல்லும் டெம்போ டிராவலரின் டிரைவராக விசுவாசமான நபர்கள், சேலத்தைச் சேர்ந்த ‘ஐஸ்க்ரீம்’ பெயர்கொண்ட தொழிலதிபர் மூலமாக அனுப்பப்படுகிறார்கள்.”

‘‘ஆம்புலன்ஸில் கொண்டுசென்றார்கள்... இப்போது போலீஸ் வாகனத்திலா? முன்னேற்றம்தான்!’’

‘‘இன்னொரு பக்கம் சின்னச் சின்னக் கட்சிகளில் பணத்துக்காக அல்லாடுகிறார்கள். அ.ம.மு.க-வுடன் கூட்டணிவைத்து தே.மு.தி.க 60 இடங்களில் போட்டியிடுகிறது. பிரேமலதாவும் தேர்தலில் நிற்பதால், எல்.கே.சுதீஷ் பல தொகுதிகளுக்குப் போய் வந்தார். போகிற இடங்களிலெல்லாம் வேட்பாளர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க, ஏதேதோ பதில் சொல்லிச் சமாளித்துவந்தார். இந்தநேரத்தில் கொரோனா தொற்றிக்கொள்ள, ‘இப்படி ஆகிடுச்சே! என்னால வெளியில் போக முடிஞ்சா உங்களுக்குப் பணம் ஏற்பாடு பண்ணியிருப்பேனே...’ என்று சொல்லியே சமாளித்துக்கொண்டிருக்கிறார் அவர்.’’

பாலு - சொர்ணலதா

‘‘கொரோனா சிலருக்கு நன்மையும் செய்யும் போலிருக்கிறதே?’’

‘‘சரியாகச் சொன்னீர். மத்திய அமைச்சர் பதவி வரை உயர்ந்த தி.மு.க மூத்த பிரமுகர் அவர். கட்சியில் தன்னை வளர்த்துவிட்ட ஆசான் குடும்பத்துக்கு அவர் செய்த வேலைதான் இப்போது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பு பேச்சு. மாவட்ட தி.மு.க செயலாளராக இருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த முறை குன்னம் தொகுதியில் நின்று தோற்றார். இந்த முறை சிவசங்கருக்கு அந்தத் தொகுதியை கிடைக்காமல் செய்ய முயன்றார் மூத்த பிரமுகர். ‘ஆளுர் ஷாநவாஸுக்கு அந்தத் தொகுதியைக் கேளுங்கள். ஏற்கெனவே அங்கு நின்ற அனுபவம் அவருக்கு உண்டே’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தூண்டி னாராம். இந்த உள்ளடி வேலையைப் புரிந்து கொண்டு, சிறுத்தைகள் பின்வாங்கி விட்டனர். சிவசங்கருக்கு நெருக்கமாக இருந்துகொண்டே இதை அவர் ஏன் செய்தார் எனக் குழம்புகிறார்கள் தி.மு.க-வினர்.’’

‘‘ராஜா கையைவெச்சா ராங்காவும் போகும்போலிருக்கிறதே?’’

‘‘ஆமாம். ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா களமிறங்கியிருக்கிறார். ஏற்கெனவே இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் குரு. பிரசாரப் பயணத்தில் ஒவ்வோர் ஊரிலும் கண்ணீர்விட்டு அனல் கிளப்புகிறார் குருவின் மனைவி. கமல் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி அவரை நிறுத்தியிருக்கிறது. பாரிவேந்தர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் தொடுத்தவர் என்பதால், வழக்கறிஞர் பாலுவுக்கு நெருக்கடி கொடுக்க இதைச் செய்கிறது ஐ.ஜே.கே. குரு மனைவி வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது ரவி பச்சமுத்து வந்து தொகுதி முழுக்க ரவுண்ட் அடித்தார். தன் ஆதரவாளர் படையை இறக்கி வேலை செய்யுமாறு சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-march-28th-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக