Ad

புதன், 17 மார்ச், 2021

`தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாயை’ - இளைஞர்களின் அரசியல் பார்வை

ஒவ்வொரு தேர்தலின் போதும் மிக முக்கியமான பேசு பொருளாக இருப்பது, கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள். கவர்ச்சிகரமான, இலவசத் திட்டங்களை சில கட்சிகள் அள்ளித் தெளிக்கின்றன. ஒருபுறம், இலவசம் வேண்டும் என்ற வாதங்களும், மற்றொரு புறம் இலவசத் திட்டங்கள் வேண்டாம் என்ற வாதங்களும் தேர்தல் களத்தில் முன்வைக்கப்படுகிறது. இன்றைய இளைஞர்கள், தேர்தல் அறிக்கையை எவ்வாறு பார்க்கிறார்கள்? தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாக்களிக்கிறார்களா? அல்லது கட்சிகளினுடைய கொள்கைகளைப் பார்த்து வாக்களிக்கிறார்களா? என‌ அவர்களுடைய எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினோம். அவர்கள் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம்.

அரவிந்த்
அரவிந்த் - தனியார் நிறுவன ஊழியர், திருச்சி

`` கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக வெளியிடும் விளம்பரமாகவே நான் தேர்தல் அறிக்கையைப் பார்க்கின்றேன். ஆட்சிக்கு வந்த எந்த அரசும் அவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகக் கூறிய எந்த அறிக்கையையும் 100% நிறைவேற்றவில்லை என்பதே நிதர்சனம். தேர்தல் அறிக்கை என்பது வெற்று அறிக்கையே. நீங்களே பாருங்கள் தற்போது திருவள்ளுவர் பற்றிய சர்ச்சை நிகழ்வதால் திருக்குறளைத் தேசிய நூலக அறிவிக்க வைப்போம் என்று ஒரு கட்சியும், 2016ஆம் ஆண்டு கொடுத்து நிறைவேற்றப்படாத பால் விலையைக் குறைப்பேன் என்று இன்னொரு கட்சியும் அறிக்கை வெளியிடுகின்றன. தேர்தலில் ஜெயித்ததும் அதை ஆட்சியாளர்களும் மறந்துவிடுவார்கள், மக்களும் மறந்து விடுவார்கள். தேவை இல்லாமல் ஆயிரம் இலவசங்கள். அவற்றால் எந்த பயனும் இல்லை. என்னைப் பொறுத்தவரைக் கட்சியின் கொள்கையைப் பார்த்துத் தான் நான் வாக்களிப்பேன். ஆனால் எந்த ஒரு கட்சியும், எந்த கொள்கைக்காக உருவானதோ அந்த கொள்கைகளைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ அதையே கோல் ஊன்றி பிடிக்கிறார்கள். இப்போது உள்ள கட்சிகள் கொள்கைகளை பின்பற்றுவதற்க்கு பதிலாக, இலவசங்களைப் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.”

பூவரசன்
பூவரசன் - கல்லூரி மாணவர், திருவாரூர்

``தற்போது எதிர்வரும் தமிழகச் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான வெற்று அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இத்தகைய அறிக்கைகள் அனைத்தும் வழிகண்டவன் கண்களில் மருந்தாகச் சுண்ணாம்பு தேய்ப்பது போலவே தோன்றுகிறது. கொரோனா எனும் பேரிடரால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதை தங்களுக்குச் சாதகமாக எண்ணியே தமிழக மக்களை இலவசங்கள் மூலம் எளிதில் கவர்ந்துவிடலாம் என்ற கட்சிகள் நினைக்கின்றன. அனைத்து தேர்தல் அறிக்கைகளும் மக்களைக் கவர்வதற்கே தவிர, மக்கள் வாழ்வை மேம்படுத்த அல்ல என்பதே எம் கருத்து. தேர்தல் அறிக்கைகளை விடக் கட்சிகளின் உண்மையான கொள்கைகளை உற்று நோக்கியே இத்தேர்தலில் நான் வாக்களிப்பேன்!

சூர்யா
சூர்யா - கல்லூரி மாணவர், தூத்துக்குடி

``தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாய பிம்பம். அதை வைத்து வாக்களிப்பது முட்டாள்த்தனம். இத்தனை வருடம் எதையும் செய்யாமல் இருந்து விட்டு, தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு ஆசையைத் தூண்டுகின்றனர். ஒரு பக்கம் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை எனச் சொல்லிவிட்டு மற்றொரு புறம் அரசு நிறுவனங்களைத் தனியார் மையப்படுத்தினால் எப்படி வாக்குறுதிகளை நம்புவது? கட்சிக் கொள்கை என்பது அந்த அந்த கட்சிகளுக்கான தலைவர் இருக்கும் வரை மட்டும் தான். புதிய தலைவர் வர புதிய கொள்கை உருவாகும். அடிப்படைக் கொள்கையின் மீதான பிடிப்பு நழுவி அரசியல் சூழலுக்கு ஏற்ற கருத்துக்களைப் பேசத் தொடங்கிவிடுவர். வாக்களிப்பதற்கு முன்பாக இத்தனை வருடம் நமக்கு நடந்த அநியாயம், கொடுமைகள் என்னென்ன என நினைத்து தகுதி உள்ள ஒருவருக்கு ஒரு முறையாவது வாக்களிப்போம்.”

மதுமிதா
மதுமிதா - கல்லூரி மாணவி, மதுரை

``கட்சியின் கொள்கைகள் நம்பிக்கை தரும் வகையில் இருக்கின்றன. தேர்தல் அறிக்கைகள் மக்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் மட்டுமே இருக்கின்றன. வெற்றியின் பின் அனைத்து அறிக்கைக்கும் நிறைவேற்றப் படுவது, அத்திப் பூப்பது போலத்தான். இலவசங்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முட்டுக் கட்டையாய் அமையும். வாஷிங்மெஷி வழங்குவதற்கு பதிலாக, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால் அவர்களே அதை வாங்கிக் கொள்வார்கள் தானே.”

லூர்து ஆண்டனி ரஷ்வின்
லூர்து ஆண்டனி ரஷ்வின் - போட்டித் தேர்வு மாணவர், திருநெல்வேலி

`` தேர்தல் அறிக்கைகள், எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியவை. கட்சிக் கொள்கைகள் தான் நிலையானது. எனவே, கட்சியினுடைய கொள்கைகளைப் பார்த்துத் தான் வாக்களிப்பேன். மருத்துவம், கல்வி, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றினால் போதும். இலவசங்கள் தரத் தேவையில்லை. மக்கள், கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களைப் பார்த்து, வாக்களிக்கக் கூடாது. அரசியல்வாதிகள், மக்களை இலவசங்கள் வாங்க வேண்டிய சூழ்நிலையில் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே, தமிழகத்தின் கடன் சுமை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று, இலவசத் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இதனால், மக்களுடைய வாழ்வாதாரம் நிச்சயமாக உயரப்போவதில்லை. தமிழகத்தின் கடன் சுமை தான் உயரும். நோட்டாவுக்கு கூட வாக்களிக்கலாம், ஆனால் சில கட்சிகளுக்கு வாக்களிக்கவே கூடாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்.”

ராஜபதி
ராஜபதி - கல்லூரி மாணவர், திருச்செந்தூர்

``கட்சியினுடைய கொள்கை, செயல் திட்டங்களைப் பார்த்துத் தான், வாக்களிப்பேன். இலவசங்கள், மக்களுக்குத் தேவையான ஒன்று தான். கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் அரசு சார்பில் வழங்கப்பட்ட டி.வி, மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்றவை இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன. நிறைய மக்கள் இலவசத் திட்டங்களின் மூலம் பயன் பெறுகிறார்கள். எனவே, தேர்தல் அறிக்கைகளில் இலவசத் திட்டங்கள் அறிவிப்பதில் தவறில்லை. குளிரூட்டப்பட்ட ஏ.சி அறையிலிருந்து கொண்டு, இலவசத் திட்டங்கள் கொடுக்கக் கூடாது என்கிறார்கள். கிராமப்புறங்களுக்கு அவர்கள் வந்து பார்த்தால் தான், இலவசத் திட்டங்களின் பயன்பாடு புரியவரும்.”

Also Read: `அரசியல் மாற்றம் வேண்டுமா... எந்த மாதிரியான மாற்றங்கள் வேண்டும்?’ - இளைஞர்களின் பார்வை

இனோக் கிப்ட்சன்
இனோக் கிப்ட்சன், கல்லூரி மாணவர், தூத்துக்குடி.

``தேர்தல் அறிக்கை, கட்சிக் கொள்கை இரண்டையும் பார்த்துத் தான் வாக்களிப்பேன். தேர்தல் அறிக்கையின் செயல்திட்டங்களை நிறைவேற்ற முடியுமா? என்று ஆராய்ந்து தான் வாக்களிப்பேன். சமூக நலத்திட்டங்கள் என்று தான்‌ கூற வேண்டும். இலவசங்கள் என்று கூறக் கூடாது. மக்களுடைய வரிப்பணத்தை, சமூக நலத்திட்டங்களாக மக்களிடமே கொடுக்கிறார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகம் எப்போதும்‌ சிறந்து தான் விளங்குகிறது. இலவசங்களைப் பார்த்துத் தான் மக்கள் வாக்களிக்கிறார்கள், என்பதை நான் நம்ப மாட்டேன். யார் வந்தால் நல்லது செய்வார்கள் என்று மக்கள் தெளிவாக வாக்களிக்கிறார்கள்.”

ஷோபனா - கல்லூரி மாணவி, மதுரை.

``கொள்கைகள் பேருக்கு மட்டுமே உள்ளன. கொடுக்கும் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு மறந்து விடுகின்றனர். காலங்காலமாகப் பொய்யான அறிக்கைகள் விடுவதை அரசியல்வாதிகளுக்குப் பழக்கமாகிவிட்டது.”

உமர் பாரூக்
உமர் பாரூக் - மாணவர் மற்றும் சிறுவியாபாரி, திருச்சி

``பொதுவாக தேர்தல் அறிக்கை பார்ப்பது பிரதானமான அம்சம் ஆனா அதன் காரணமா ஓட்டுப் போடுவது தவறான பின் விளைவுகளையே தரும் என்று நினைக்கிறேன். கொள்கைகள் அந்த கொள்கைக்கு உட்பட்ட கூட்டணிகள் இருக்கும் பட்சத்தில் அதுக்கு ஓட்டுப் போடுவதே சிறந்ததா இருக்கு என்று நினைக்கிறேன். தேர்தல் அறிக்கையில் உடன்பாடு அற்ற மாற்றுக் கருத்து இருக்கும் அதே வேளையில் சில வரவேற்கத்தக்க அம்சங்களும் இருக்கவே செய்கிறது”

விஜயகுமார்
விஜயகுமார், மாணவர், திருச்சி

தேர்தல் அறிக்கை வெறும், தேர்தலுக்கான அறிக்கையாக மட்டுமே இருக்கிறது. மக்களுக்கானதாகவோ அல்லது மாநிலத்துக்கானதாக இல்லை. அது ஆளும் கட்சி அறிக்கையாகட்டும், எதிர்க்கட்சியின் அறிக்கையாகட்டும். எப்படி அறிக்கை வெளியிட்டால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அறிக்கை வெளியிடுவது போல் தோன்றுகிறது. குறிப்பாக இலவசங்கள் தான் அதிகமாக உள்ளன, ஆராய்ச்சியில் நாம் செலவிடும் தொகை மிகக் குறைவே. இதனால் ஆராய்ச்சியின் மேல் பெரிதாக மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு ஏதாவது திட்டம் கொண்டு வரலாம், கல்விக்கடன் ரத்து என்ற அறிவிப்பைத் தளர்த்தி மாணவர்களின் உயர்கல்வியை இலவசமாகக் கொடுப்பது தொடர்பாகத் திட்டங்கள் இயற்றலாம். இது போன்ற எந்த திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனாலும் கட்சிகள் கொண்ட கொள்கைகள், தற்போது நிலவும் சாதி, மத பிரிவினை வாதம் எல்லாம் ஒழிய அறிக்கைகளைத் தவிர்த்து விட்டு கட்சிக் கொள்கையைப் பார்த்து வாக்களிக்க இருக்கிறேன்.”

Also Read: தேர்தல் நாளில் வாக்களிப்பீர்களா அல்லது விடுமுறையை அனுபவிப்பீர்களா? - இளைஞர்களின் பதில்

அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது, தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் திட்டங்கள் தான். தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் திட்டங்களை அரசியல் கட்சிகளால் நிறைவேற்ற முடியுமா? என்று ஆராய்ந்து வாக்களிப்பவர்களாக இன்றைய இளைஞர்கள் உள்ளனர், என்பதை அவர்களிடம் உரையாடியதிலிருந்து உணர முடிந்தது. வெற்றுக் கோஷங்களாலும், கவர்ச்சிகரமான திட்டங்களாலும் தேர்தல் அறிக்கை இல்லாமல், தொலைநோக்குப் பார்வையுடன்‌ இருக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் விருப்பம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-youths-opinion-on-freebies-in-manifesto

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக