Ad

சனி, 6 மார்ச், 2021

சிறுதானிய விருந்து, வாழைப்பூ பிரியாணி, மூலிகைக்குடிநீர் - சென்னை-திருச்சி சாலையில் வித்தியாச உணவகம்!

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணிப்பவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் கொடூரமானது. கொடூரப் பசியெடுக்கும் நேரத்தில் கொண்டு போய் நிறுத்துவார்கள் ஒரு மோட்டலில். அங்கு நிற்கும் முரட்டு ஆசாமிகள் போடுகிற சத்தமே பாதிப் பசியை அடக்கிவிடும். உணவகத்துக்குள் போனால் புளித்த தோசை, காய்ந்த பரோட்டாதான் வைத்திருப்பார்கள். பஸ்சுக்குக் கொடுத்த காசைவிட அதிகமாகத் தீட்டி விடுவார்கள். பசி போய் வயிற்றெரிச்சல் வந்துவிடும்.

ஆனால், ரசித்து ருசித்து நம் பாரம்பர்ய உணவுகளைச் சாப்பிட, தொந்தரவில்லாமல் அமர்ந்து ஓய்வெடுக்க, மூலிகைகள் கலந்த தண்ணீர் அருந்த, அச்சு முறுக்கையும் வாழைப்பழ பணியாரத்தையும் வாழைப்பூ வடையையும் சுடச்சுட டேஸ்ட் பார்க்க ஒர் உணவகம் இருக்கிறது.

சென்னையிலிருந்து சரியாக 99 கிலோ மீட்டர்... அச்சிறுப்பாக்கத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’. வாகனங்களை நிறுத்த விசாலமான இடம், முகப்பில், குழந்தைகளுக்கான பாரம்பர்ய விளையாட்டுப் பொருள்கள் கடை; உள்ளே இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்கள் விற்பனை மையம்; கைத்தறி உடைகள் விற்பனை மையம்; இவற்றுக்கு நடுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாப்பிடும் வகையில் விசாலமான டைனிங்.

99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்

எதிரில், பசுமையைப் போத்திக்கொண்டு நீண்டு வளைந்து குமுறி நிற்கும் மலையை ரசித்துக்கொண்டே சாப்பிடலாம். பழரசத்துக்குத் தனி ஸ்டால், தோசை வகைகளுக்குத் தனி ஸ்டால், வெளிமாநிலப் பயணிகளுக்காக, அவர்களது பாரம்பர்ய சாட் வகைகளுக்குத் தனி ஸ்டால்... மிளகுவடை, வாழைப்பூ வடை, கீரைவடை, குழிப்பணியாரம் என நம் பாரம்பர்யப் பதார்த்தங்களுக்குத் தனி ஸ்டாலெனப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம், காஷ்மீர்த் தேன், துளசித்தேன் என வித விதமாகத் தேன்வகைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள். எல்லா வகைகளிலும் ஒவ்வொரு பாட்டில் திறந்திருக்கிறது. டேஸ்ட் பார்த்துவிட்டு, விரும்பினால் வாங்கிக்கொள்ளலாம்.

இன்னொரு பக்கம் பத்துக்கும் மேற்பட்ட செப்புக்குடங்கள், பானைகளில் விதவிதமான தண்ணீர் வகைகள் வைத்திருக்கிறார்கள். சீரகக் குடிநீர், ஓமக் குடிநீர், நன்னாரித் தண்ணீர், வெட்டிவேர்த் தண்ணீர், துளசிக் குடிநீர், ஆடாதொடா குடிநீர், நொச்சிக் குடிநீர், சிரட்டைக் குடிநீர், தாகமுத்திக் குடிநீர்... எல்லாம் நம் மூதாதையர்கள் வீட்டில் பயன்படுத்தியவை. கொண்டு வந்து ஊற்றிக் கொண்டேருக்கிறார்கள். எவரும் குடிக்கலாம். பாட்டிலில் ஊற்றி எடுத்துக்கொண்டும் போகலாம்.

இதற்கு அருகே டீ ஷாப். பனங்கற்கண்டு மூலிகைப் பால், இஞ்சி டீ, கருப்பட்டி காபியெல்லாம் இருக்கின்றன. உள்ளே, உணவகம்.

காலை 5.40-க்கு உணவகத்தைத் திறக்கிறார்கள். 6.30 மணியிலிருந்து டிபன் கிடைக்கும். எல்லாம் நம் பாரம்பர்யச் சிற்றுண்டிகள். மாப்பிள்ளைச் சம்பா அவல் உப்புமா, கொள்ளுக் கஞ்சி, சிறுதானியப் பொங்கல், வெங்காய ராகி ரவா தோசை, முளைக்கட்டிய பயிர் இட்லி, சீரக இட்லி, முடக்கத்தான் தோசை, வல்லாரைத் தோசை, தூதுவளைத் தோசை, பிரண்டைத் தோசை... மெனுவே வித்தியாசமாக இருக்கிறது. 11.30-க்கு மதிய உணவு தயாராகிவிடுகிறது.

99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்

`சிறப்புச் சிறுதானிய மதிய உணவு’ காம்போ 190 ரூபாய். எல்லாம் அன்லிமிடெட். தலைவாழை இலையில் பரிமாறுகிறார்கள். முதலில், கிண்ணம் நிறைய மூலிகை சூப். முடக்கத்தான் சூப், வல்லாரை சூப், தூதுவளை சூப் என தினமொரு சூப்பாம். அடுத்து, ஒரு கப் களி தருகிறார்கள். நல்லெண்ணெய் மணக்க, கருப்பட்டி இனிப்பில் அமர்க்களமாக இருக்கிறது. பிறகு ஓம கோதுமை சப்பாத்தி. அதற்குத் தொடுகறியாக ஒரு காய்கறிக் கூட்டு. இரண்டுக்கும் செம பொருத்தம். விரும்பினால் இன்னொரு சப்பாத்தி வாங்கிக் கொள்ளலாம். சப்பாத்தி சாப்பிட்டு முடித்ததும் நான்கு சாத வகைகள் வருகின்றன. பாரம்பர்ய நாட்டுப் பொன்னியில் செய்யப்பட்ட புதினா சாதம், சாமை சாம்பார் சாதம், வரகரிசி ரச சாதம், குதிரைவாலித் தயிர் சாதம். சாதங்களின் வாசனையும், வண்ணமுமே வித்தியாசமாக இருக்கின்றன. எல்லாம் அசல் வண்ணங்கள். செயற்கை வண்ணமூட்டிகள், ருசியூட்டிகள் சேர்ப்பதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். புதினா சாதம் குழைவாக, ருசியாக இருக்கிறது. சாம்பார் சாதத்தில் அரிசிக்கு இணையாகக் காய்கறிகள் நிறைந்திருக்கின்றன. ரசசாதம் குடிக்கும் பதத்தில் இருக்கிறது. தயிர் சாதமும் நிறைவாக இருக்கிறது.

இது முடிந்ததும், ஆத்தூர் கிச்சடிச் சம்பா அரிசியில் செய்யப்பட்ட சாதம் தருகிறார்கள். பட்டை தீட்டப்படாத சாதம் என்பதால் வெண்மை குறைவாக இருக்கிறது. பசுங்காய்கறி சாம்பார், வற்றல் குழம்பு, மூலிகை ரசம், மோர்... ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு கீரை, மத்தில் கடைந்த கீரையாம். சூப் மாதிரி குடிக்கவும் பொருத்தமாக இருக்கிறது. சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். இவற்றோடு, மிளகாய் வற்றல், அப்பளப்பூவும் உண்டு. இறுதியில் ஒரு கப் தினைப் பாயசம். கொஞ்சம் ஹெவியான சாப்பாடுதான். வயிறு நிறைந்துவிடுகிறது.

பயண வழியில் இவ்வளவு கனமான சாப்பாடு தேவையில்லை என்று நினைப்பவர்கள் `மினி மீல்ஸ்’ சாப்பிடலாம். நாட்டுப் பொன்னி புதினா சாதம், சாமை சாம்பார் சாதம், வரகரிசி ரசசாதம், குதிரைவாலி தயிர் சாதம், தினைப் பாயசம், காய்கறிக் கூட்டு, அப்பளப்பூ, கிடாரங்காய் ஊறுகாய்...

புதிதாக வாழைப்பூ பிரியாணியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். செமையாக இருக்கிறது.

99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்

4.30 வரை சாப்பாடு கிடைக்கும். அதற்கு மேல் இரவு 9 மணி வரை விதவிதமாகத் தோசைகள் சாப்பிடலாம். 9 மணிக்கெல்லாம் உணவகத்தை மூடிவிடுகிறார்கள். மதுவருந்திவிட்டு வருபவர்களுக்கு உணவகத்திற்குள் அனுமதியில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். வீட்டில் சமைத்து சாப்பாடு கொண்டு வருபவர்கள் இங்கே அமர்ந்து சாப்பிடலாம். தண்ணீர் தந்து உபசரிக்கவும் செய்கிறார்கள்.

உணவகத்தின் உரிமையாளர் மனோ சாலமன் இந்திய விமானப்படையில், விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பயணங்களில் தீவிர ஆர்வமுடையவர்.

"ஒரு டிராவலரா இந்தியா முழுவதும் சுத்தி வந்திருக்கேன். தேசிய நெடுஞ்சாலைகள்ல எந்த மாநிலத்திலயும் நல்ல சாப்பாடு சாப்பிட முடியாது. விலையும் ரொம்பவே அதிகம். அந்தக் கசப்பான அனுபவத்தாலதான் இந்த உணவகத்தை ஆரம்பிச்சேன். நல்ல சாப்பாடு... கூடவே காலாற நடந்து ரிலாக்ஸ் பண்ண சில ஏற்பாடுகள்... நாலு நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்... எல்லா வசதிகளும் ஒருங்கிணைந்ததா உணவகம் இருக்கணும்னு திட்டமிட்டேன்.

Also Read: மதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்!

நம் பண்பாடு ரொம்பவே விசாலமானது. இன்னைக்குள்ள பிள்ளைகளுக்கு அதை நாம சொல்லிக் கொடுக்கிறதேயில்லை. உணவு, விளையாட்டு, பதார்த்தங்கள்னு நிறைய விஷயங்கள் இருக்கு. அதெல்லாத்தையும் நாங்க பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்றோம். பாத்திரங்கள், பாரம்பர்ய சமையல் பொருள்கள், நொறுக்குத்தீனிகளை நியாயமான விலைக்கு விற்பனையும் செய்றோம். செக்கில் ஆட்டப்பட்ட நல்ல எண்ணெய்களைப் பயன்படுத்துறோம். பெரும்பாலும் மக்கள் முன்னிலையிலேயே எல்லா உணவுகளையும் சமைக்கிறோம். மூலிகைகள், விளையாட்டுப் பொருள்கள்னு ஒரு மரபுக்கூடம் மாதிரி திட்டமிட்டிருக்கோம். இது ஒரு கற்றல்கூடமா மாறணுங்கிறது எங்க கனவு... நாலு வருஷத்தில அந்தக் கனவு நிறைவேறியிருக்கு” என்கிறார் மனோ சாலமன்.

பயண வழியில் ஒரு கண்காட்சி மையமாக இருக்கிறது இந்த உணவகம். குழந்தைகளைக் கட்டாயம் அழைத்துச் செல்லுங்கள். நம் மரபுணவை, பண்பாட்டை, விளையாட்டை, புழங்கு பொருள்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்..!


source https://www.vikatan.com/food/food/know-about-the-99km-coffee-stop-restaurant-in-chennai-trichy-road

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக